Srirangam Kodai Uthsavam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம:
கோடை
உத்ஸவம்
 

1) சித்திரை சுக்-ல-ப-க்ஷ பஞ்சமி திதியில்-கோடைத்திருநாள் தொடக்கம். பஞ்சமி-முதல்  ஐந்து நாட்கள் வெளிக் கோடை என்றும், பின் ஐந்து நாட்கள் உள்கோடை என்றும்  இந்த உத்ஸவம் கொண்டாடப்படுகிறது.
 2) நவமி-கோடை உத்ஸவத்தின் நவமி திதியில் திருவரங்கத்தில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஸ்ரீராமநவமியன்று நம்பெருமாளுக்கும் சேரகுலவல்லித் தாயாருக்கும் சேர்த்தி நடைபெறும். உலகம் முழுவதும் பங்குனியில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் மட்டும் இந்த உத்ஸவம் சித்திரையில் நடை-பெ-று-வ-தா-ல் கோயில் ஸ்ரீராமநவமி என்று பெயர்.  நவமிதான் பிரதானமேயன்றி புனர்வஸு அல்ல.  பெருமாள்திருமொழி அரையர் ஸேவை – சேரகுலவல்லி நாய்ச்சியார் சேர்த்தி ஆகியவை அர்ஜுன மண்டபத்தில் நடைபெறும்.
 3) தசமி-உள்கோடை ஆரம்பம். இந்த உத்ஸவம் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் நடைபெறுவதால் 5 நாட்களிலும் பெருமாள் திருமொழி  20 பாசுரம் வீதம் அரை-யர் ஸேவை.
 4) சதுர்தசி-கோடைத்திருநாள் பூர்த்தி. ஸ்ரீரங்கநாச்சியார் கோடைத் திருநாள் பெருமாளுடைய கோடை முடிந்த பிறகு ஒரு புதனில் ஆரம்பித்து வெள்ளி முடிய 10 நாட்கள் நடைபெறும்.  நம்பெருமாளுடைய வஸந்தத்துக்குப் பிறகு நாச்சியார் கோடை ஆரம்பமானால் அது முடிந்த மறுநாளே சனிக்கிழமையில் நாச்சியாருக்கு வஸந்தம் ஆரம்பமாகி வெள்ளி முடிய 7 நாட்கள் நடக்கும்.  திதி நக்ஷத்ரங்களை கணக்கில் கொள்ளாது கிழமைக் கணக்காகவே நடைபெறும்.
 5)ஸ்ரீராமநவமி : அ)அழகியமணவாளனுக்கு ஸ்ரீராமநவமி உத்ஸவம் எப்பொழுதும் சித்திரை (மேஷ) மாதத்தில்தான் நடை பெறும். கோடைத் திருநாளின் இடையிலேயே நேரிடும் இந்த உத்ஸவம் சில வருஷங்களில் வஸந்தோத்ஸவத்தினிடை யிலும் நேரிடுவதுண்டு. கோடைத்திருநாள் ரக்ஷாபந்தனோத்ஸவமில்லையாகையால் அதனிடையில் ஸ்ரீராமநவமி நேரிடும்போது நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும்.  வஸந்தோத்ஸவம் ரக்ஷாபந்தனோத்ஸவமாக அமைந்துள்ளதால் இடையில் வேறு உத்ஸவத்துக்காகத் திருமஞ்சனம் மேற்கொள்ளக்கூடாது. எனவே, அதனிடையில் நேரிடும் ஸ்ரீராமநவமிக்காகத் திருமஞ்சனம் இல்லை. ஆ)திருப்பாவை சாற்றுமுறைக்காக ஏற்பட்ட ஸங்க்ராந்தி உத்ஸவம் போல பெருமாள் திருமொழிக்காக ஏற்பட்ட ஸ்ரீராமநவமி ரக்ஷாபந்தனோத்ஸவ மத்தியிலும் அவசியம் செய்யப்பட வேண்டிய உத்ஸவமாகும். இ)நம்பெருமாள் காலையில் முதல் திருவாராதனம் பொங்கல் நிவேதனமும் கண்டருளிய பிறகு பகல்பத்து மண்டபம் எழுந்தருளுவார். அம்மண்டபத்துக்கு சமீபத்தி லுள்ள சேரகுலவல்லியாரும் நம்பெருமாளுக்கருகில் வந்து எழுந்தருளிய பிறகு, திருவாராதனம் ஆரம்பிக்கும்போது, அரையர்களுக்கு அருளப்பாடு மரியாதைகள் ஆகிப் பெருமாள்திருமொழி ஸேவிக்கப்படும். பாசுரங்கள் பூர்த்தியானவாறே, திருமஞ்சனம் தளிகை நிவேதனம், கோஷ்டி முதலிய காரியங்கள் நடைபெறும். இந்த உத்ஸவம் எம்பார் ஸந்ததியார் தம் சிஷ்யர்களைக் கொண்டு பொலியூட்டாக ஏற்படுத்திய உத்ஸவமாகையால் தேவஸ்தானத்தாரே இதை நடத்தி மண்டப மரியாதை முதலியவைகளை எம்பார் வம்சத்தவர்களுக்கு நெடுநாட்களாகச் செய்து வருகிறார்கள்.
 ஈ)உபயதாரருக்கு மரியாதை ஆனபிறகு நம்பெருமாள் கோடைத் திருநாள் உத்ஸவம் கண்டருளப் புறப்படுவார். வஸந்தோத்ஸவத்தினிடையே இந்த உத்ஸவம் நேரிட்டால், பெருமாள் திருமொழி கானத்தோடு திருவாராதனம் நடை பெறும். திருமஞ்சனம் மட்டும் நடைபெறாது. நம்பெருமாள் உள்ளே எழுந்தருளிப்பிறகு வஸந்தோத்ஸவத்துக்குப் புறப்படுவாரேயன்றி கோடைத் திருநாளுக்குப் போல மண்டபத்திலிருந்தே புறப்படுவதில்லை.
 6) பண்டைய காலங்களில் ஆயிரங்கால் மண்டபத்தின் மேலே நம்பெருமாள் எழுந்தருளி பத்தியுலாத்துவார். 700 அரையர்கள் கீழைஉத்தர வீதி என்று அழைக்கப்படும் செந்தமிழ்பாடுவார் வீதியில் எழுந்தருளியிருந்து பெருமாள்திருமொழி யினைச் சேவித்திடுவர். இன்றும் நம்பெருமாள் பத்தியுலாத்திய மண்டபங்களை ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்பகுதியில் காணலாம். ஆயிரங்கால் மண்டபத்தின் கீழ்த்தளத்திலிருந்து மேல்தளத்திற்குச் செல்வதற்கு அகலமான 18 படிகள் அமைந்துள்ளன. பண்டைய காலங்களில் நம்பெருமாள் 18படிகளைக் கடந்தபிறகு மாலை சாற்றிக் கொள்வார். இந்த உத்ஸவத்திற்கு 18ஆம் படி உத்ஸவம் என்று பெயரும் வழங்கி வந்தது.
 ஒரு சமயம் ஆழ்வானும் முதலியாண்டானும் எழுந்தருளியிருக்கிற போது அவர்களுக்கு இடையே நடந்த சொற் பரிமாற்றங்களை பிள்ளைலோகம் ஜீயர் தம்முடைய ராமானுஜார்ய திவ்யசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதின் பொருள் எளிய தமிழ்நடை விவரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  “இதன் பொருளாவது : முதலியாண்டான் நம்பெருமாளின் திருமேனி அழகில் மிகவும் ஈடுபட்டிருக்கும்போது, ஆழ்வான் முதலியாண்டானை நோக்கி, “அர்ச்சாவதார அநுபவத்தில் மூழ்கியிருக்கும் இவ்வளவில் தேவரீர் அறுதியிடும் உபாய உபேயங்கள் யாவை?” என்று கேட்டார். முதலியாண்டான் சாஸ்த்ரார்த்த விசாரத்தில் அப்போது மனத்தை செலுத்தவில்லை; அவருக்கு நம்பெருமாளே உபாய உபேயங்கள் என்று திருவுள்ளத்திற்பட்டு அருளிய வார்த்தை:- நம்பெருமாள் ஆஸநபத்மத்திலே பொருந்தவிட்ட திருவடிமலர்களே உபாயம்; திருமேனியே உபேயம். அர்ச்சாவதார மூர்த்திகளின் திருமேனிக்கு அவ்வருகே ஆழ்வார்கள் போனதில்லை. எம்பெருமானாரும் அவ்வாறே நம்பெருமாளுடைய திருமேனி அனுபவத்தையே உபேயமாக அறுதியிட்டிருந்தார். ஆதலால் அத்தகைய அனுபவத்துக்கு எம்பெருமானாரே உசாத்துணையாக இருப்பார். அவரை யொழிந்தபோது ஆழ்வார்களின் பாசுரங்களே அவ்வனுபவத்தை வளர்க்கும் துணையாயிருக்கும். அத்தகையதான உயர்ந்த அனுபவத்துக்கு உரியோர் யார் எனின், எம்பெருமானைத் தவிரப் பயன் வேறு எதையும் நினைத்துப்பார்க்காத அநந்யப்ரயோஜநரே யாவார்கள். அவர்கள் இக்கரையான மண்ணுலகில் காணக் கிடைக்கமாட்டார்கள். அவர்களை விரஜாநதிக்கு அக்கரையில் காணலாம். மேலும் அநந்ய ப்ரயோஜனனான ஒரு ப்ரபந்நனை க்ஷாமகாலத்தில் அடையாளம் காணலாம். க்ஷாம காலமாவது அர்ச்சாவதார அனுபவம் கிடைக்காதொழியும் காலம். அக்காலத்திலும் ப்ரபன்னன் உபாயாந்தரங்களில் செல்லாத உறுதிப்பாட்டுடன் இருப்பான். அவனுடைய அநுஷ்டானம் விசேஷ காலங்களில் அவன் செய்யும் ஸங்கல்பத்தினால் அறிந்து கொள்ளலாம். அவன் பகவானுடைய ஆஜ்ஞையை கைங்கர்ய ரூபமாகவே கொண்டு  ஸர்வ கர்மங்களையும் செய்து வருவான்.                        (முற்றும்)
         அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *