MudhaliyaNdan Vaibhavam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம:

1) முதலியாண்டான் அவதார திருநக்ஷத்ரோத்ஸவம் 21-4-2010 சித்திரை புனர்பூச நக்ஷத்ரத்தில் நடைபெற உள்ளது. கி.பி. 1333ஆம் வருஷம் தற்போது நாசரத்பேட்டை என்று வழங்கும் பச்சை வாரணப் பெருமாள் கோயில் என்ற ஊரில் அவதரித்தவர் முதலியாண்டான். இவர் ஸ்ரீராமாநுஜரின் ஸகோதரி புதல்வர் (பாகிநேயர்). இவருடைய ஆத்மகுணங்களால் ஈர்க்கப்பட்ட யதிராசர் இவரை த்ரிதண்டமாக மதித்திருந்தார்.
 2) “மேஷே புநர்வஸுதிநே தாசரத்யம்ச ஸம்பவம்ஐ யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்ஐஐ” “ராமபிரான் இவ்வுலகில் வந்தவரித்த சித்திரைப் புநர்வஸு நன்னாளில் தாசரதியின் (தசரதன் மகனான) அம்சமாக வந்துதித்து, யதீந்த்ர பாதுகைகளாய் போற்றப்படும் தாசரதிமாகுருவை (முதலியாண்டானை) வணங்குகிறேன்” என்ற தனியன் இவருடைய பெருமையை விவரிக்கிறது.
 3) உடையவரின் சிஷ்யர்களான ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்) இவரை ஆண்டானாக (ஆளும்பிரானாக) மதித்ததினால் இவர் முதலியாண்டான் ஆனார்.
 4) வள்ளல் யதிராசன் வந்துதித்த பெரும்பூதூரில் யதிராசனுக்கு திருவாராதனத்தில் அர்க்ய பாத்ய உபசாரங்கள் ஸமர்ப்பிக்கப்படும் போது, யதிராஜ பாதுகைகளுக்கும், த்ரிதண்டத்திற்கும், இவ்வுபசாரங்கள் ஸமர்ப்பிக்கப்படுகின்றன.
 5) ஸ்ரீபெரும்பூதூரில் முதலியாண்டானுக்குத் தனியாக விக்ரஹ ப்ரதிஷ்டையில்லை. யதிராசருடைய முக்கோலிலும் திருவடி நிலைகளிலும் அவர் பொலிந்து நிற்கிறார். ஆக, யதிராசருடன் திருவடி நிலை (பாதுகை), உடன் பிறந்தாள் மகன் , முக்கோல் (த்ரிதண்டம்) என்ற-மூன்று வகை உறவுகளால் மிக நெருக்கமுற்று பெருமை பெற்றவர் முதலியாண்டான் ஒருவரே .வேறு யாருக்கும் அமையவில்லை.
 6) கூரத்தாழ்வான் தமக்கு பதக்கு அளவு ஆத்ம ஸம்பந்தம் உடையவரோடு ஏற்பட்டிருந்த போதிலும் உழக்கு அளவு தேஹ ஸம்பந்தம் உடையவரோடு ஏற்படவில்லையே என்று வருந்துவாராம்.
 7) ஸ்ரீரங்கம் கோயிலில் ஆர்யபட்டாள் வாசலுக்கு முன்பு கருட மண்டபத்தின் வடகோடி குறட்டுப் பகுதியின் கீழைப் பகுதியில் முதலியாண்டான் மற்றும் உடையவருடைய கருங்கல்லில் செதுக்கப்பட்ட உருவங்களைக் காணலாம். அதற்கு முதலியாண்டான் குறடு என்று பெயர். முதலியாண்டான் தன் ஜீவித காலத்தில் இந்தக் குறட்டின்மீது அமர்ந்து கோயில் நிர்வாஹத்தை மேற்பார்வையிட்டு வந்தாராம். தற்போது மணியகாரர் என்பார்தான் முதலியாண்டான் ஸ்தானத்தை அலங்கரித்து வருகிறார். அவரும் இந்தக் குறட்டில் அவ்வப்போது அமர்ந்திருப்பதைக் காணலாம்.
 8) முதலியாண்டான் வாதூல தேசிக கோத்ரத்தைச் சார்ந்தவர். கோயில் கந்தாடை அண்ணனும் ரங்காசார் ஸ்வாமியும் வாதூல தேசிக வம்சத்தின் வழிவந்தவர்கள் ஆதலின் அவர்களுக்கு இந்தத்திருக்கோயிலில் பல சிறப்பு மரியாதைகள் ஏற்பட்டு உள்ளன. ஸ்ரீவைஷ்ணவ தர்சன நிர்வாஹத்திற்கு ஆழ்வானையே உசாத் துணையாகக் கொண்டார் ஸ்வாமி ராமானுஜர்.முதலியாண்டானைத் தமது அந்தரங்க கைங்கர்யங்களுக்கு உதவிகொண்டார். கோயில் நிர்வாஹத்தில் ஆண்டானுடைய பணி அதிகமாகப்  பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து இவருடைய ஆளுமைத்திறன் (ச்ஞீட்டிணடிண்tணூச்tடிதிஞு ண்டுடிடூடூ) மெச்சத் தக்கது எனத் தெரிகிறது, இதனால் ஆண்டான் என்ற திருநாமமும் இவருக்கு மிகப் பொருத்தமுடையதாகிறது.
 9) பல ஆண்டுகளுக்கு முன்னர் சோழ அரசன் கொடுமைக்குப் பயந்து ராமாநுஜர் ஸ்ரீரங்கத்தை விட்டு மேல்நாட்டிற்கு எழுந்தருளியபோது முதலியாண்டானைத் தம்முடன் அழைத்துச்சென்றார். அங்கு ஓர் ஊரில் இருந்த சமணர்களைத் திருத்த அவர்கள் நீரெடுக்கும் ஊருணியில் முதலியாண்டானைத் தமது திருவடிகளை விளக்கி வரச் (அலம்பி வரும்படி) சொல்ல, இவரும் அப்படியே செய்தார். அந்த நீர் ஒப்பற்ற ஸ்ரீபாததீர்த்தமானபடியால் அதைப்பருகிய அவ்வூராரனைவருக்கும் மனத்தூய்மைபெற்று அனைவரும் ராமாநுஜர் திருவடிகளில் வந்து பணிந்தனர். அன்று தொட்டு அவ்வூர் ஸ்ரீசாளக்கிராமம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு நரசிங்கப் பெருமான், உடையவர், முதலியாண்டான் இவர்களுடன் கோயில் கொண்டெழுந்தருளியுள்ளார்.  அந்தப் புனிதத்தலத்தில் “முதலியாண்டான் ஸ்ரீபாததீர்த்த” த்திற்கு இன்றும் திருவாராதனம் நடைபெற்று வருகிறது.
 10) அந்தப்பகுதியில் இருந்த புறச்சமயிகளை வாதில் வென்று திருத்தும் பணியை முதலியாண்டானிடம் ஒப்படைத்தார் ஸ்வாமி ராமாநுஜர். அந்த நியமனத்தைச் சிரமேற்கொண்டு பேலூர் என்னும் ஊருக்குச் சென்று அங்குள்ள சமணர்களைத் திருத்தி இராமா னுசனடியார்களாக ஆக்கி, அங்கு ஐந்து ஊர்களில் எம்பெருமானுக்குத் திருக்கோயில்களை கட்டுவித்தார்.  பேலூரில் கேசவநாராயணன், தொண்டனூரில் ஸ்ரீமந் நாராயணன், விஜயபுரத்தில் விஜயநாராயணன், கதுகலத்தில் வீரநாராயணன், தழைக்காட்டில் கீர்த்திநாராயணன் (வான்புகழ் நாரணன்) என்று ஐந்து நாராயண ஸ்தானங்களையும் திருநாமங்களையும் ஏற்படுத்தி வைத்தார் முதலியாண்டான்.
 11) எம்பெருமானாரின் நியமனத்தினால் முதலியாண்டான் நம்பெருமாளின் திருமேனி உபசாரத்தையும் திருப்பவள உபசாரத்தையும் ஆராய்ந்து நடத்தி வருகையிலே, திருப்பாணாழ்வாரால் “கோவலனாய் வெண்ணையுண்ட வாயன்” என எண்ணப்பட்டமையால் கண்ணனான இவருக்கு நாவல் பழம் புசிப்பதில் அதிக ஆசையுண்டு என்று  நல்ல ஏட்டுத் தயிர் சேர்த்துக் கலந்த தத்யோதநத்தையும் நல்ல கனிந்த நாவல் பழங்களையும் அமுது செய்வித்தார். அன்று உடையவர் நம்பெருமாளைத் திருவடி தொழுதபோது பெருமாள் திருமுகம் வாடியிருக்கக் கண்டு, “பெருமாள் என்ன அமுது செய்தார்?” என்று விசாரித்தவளவில், தத்யோதனத்துடன் நாவல்  பழம் அமுது செய்ததால்தான்  முகவாட்டம் என்று கண்டு இப்படி அமுது செய்வித்த ஆண்டானை கோபித்தார். கருடவாஹன பண்டிதர் என்னும் வைத்தியரை அழைத்து பெருமாளுக்கு கஷாயமிட்டுச் சிகித்ஸை செய்து வரப் பெருமாளும் பண்டு போல ஸேவை ஸாதித்தார். இதனால் அர்ச்சாவதாரத்தில் எம்பெருமானின் பூர்ண ஸாந்நித்யத்தையும் அங்குத்தை ஸௌகுமார்யத்தையும் நேரில் கண்டறிந்த ஆண்டான், அர்ச்சாவதாரத்தில் அதிகமான பரிவையுடையவர் ஆனார்.
                                                                                                              (முற்றும்)
அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *