Gajendra mOksham/ChithrA pOurNami

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம:
சித்திரா பௌர்ணமிப் புறப்பாடும், கஜேந்திர மோக்ஷமும்
 1. சித்திரா பூர்ணிமை (பௌர்ணமி) திருவூறல் திருநாள் (கஜேந்திர மோக்ஷம்) திருவரங்கத்தில் 28-4-2010 அன்று நடைபெற உள்ளது.
 2. நம்பெருமாளுக்கு அதிகாலையிலேயே முதல் திருவாராதனமும் பொங்கல் நிவேதனமும் ஆனபிறகு, அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.
 3. நம்பெருமாள் உபயநாச்சிமார்களோடு கருவறையில் எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு பூபாலராயன் என்ற பெயர் அமைந்துள்ளது. (முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு (கி.பி. 1250-1284) அமைந்துள்ள பல சிறப்புப் பெயர்களில் பூபால ராயன் என்ற பெயரும் ஒள்றாகும். இவன் ப்ரணவாகார விமானத்திற்கு முதன்முதலில் பொன் வேய்ந்தான். த்வஜஸ்தம்பம், பலிபீடம் ஆகியவற்றைப் பொன்னால் அமைத்தான்.  பூபாலராய விமானம் என்ற பெயரில் வாஹனம் ஒன்றில் திருவேங்கடமுடையான் புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தில் ஒருநாள் எழுந்தருளுகிறார். கருவறையில் அமைந்துள்ள பீடம் இந்த அரசன் காலத்தில் பொன்னால் அமைக்கப்பட்டிருந்தது. அவன் நினைவாக இந்தப் பீடத்திற்கு பூபாலராயன் பீடம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நம்பெருமாள் வெளி மண்டபங்களில்  “சேரபாண்டியன்” என்னும் பீடத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பொன்னால் ஆன இந்தப் பீடத்தை மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) நம்பெருமாளுக்கு ஸமர்ப்பித்தான். திருப்பாவை 23ஆம் பாட்டில் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் “பெரியதிருமண்டபத்திலே சேரபாண்டியனிலே நாய்ச்சிமாரோடே (நாச்சியார் என்ற சொல்லைவிட நாய்ச்சியார் அல்லது நாய்ச்சிமார் என்ற சொல்லே சரியான சொல்லாகும்) கூட இருந்து” என்று குறிப்பிட்டுள்ளார்.
 4. அம்மா மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளிய பிறகு, நம்பெருமாள் கஜேந்திராழ்வானை அனுக்ரஹிக்க ஸமரபூபாலன் என்னும் கேடயத்தில் புறப்படுவார். காவேரியில் ஊற்றுப் பறித்து அதில் கூர்மாஸனப் பலகை வைக்கப்பட்டிருக்கும். யானை அங்கு வந்து நிற்கும். நம்பெருமாள் தம்முடைய ஸ்ரீசடகோபத்தினை ஸாதித்தருள்வார். கோஷ்டிக்குத் தீர்த்த வினியோகம் ஆனவுடன் நம்பெருமாள் திரும்பித் திருவந்திக்காப்பு கண்டருளி, கோயில் அதிகாரிகளுக்கு ஸேவை ஸாதித்து இரண்டாவது ஆஸ்தானம் கண்டருளுவார். காவேரி மணலில் பந்தல் போட்டு நடந்த இந்த இரண்டாவது ஆஸ்தானம் தற்போது அம்மா மண்டபத்திலேயே நடைபெற்று வருகிறது.
 5. பௌர்ணமிக்காக ஏற்பட்ட பர்வோத்ஸவம் இது. (மாதந்தோறும் இரண்டு ஏகாதசி, ஒரு அமாவாசை, ஒரு பௌர்ணமி, ஒரு ப்ரதிஷ்டா நக்ஷத்ரம் ஆகிய 5 புறப்பாடுகள் நடைபெறவேண்டும். இந்தப் புறப்பாட்டிற்கு பஞ்சபர்வோத்ஸம் என்று பெயர் வழங்குகிறது). தென்திருக்காவேரியிலிருந்து நம்பெருமாள் இரவு ஸந்நிதிக்கு எழுந்தருளும்போது வாத்திய முழக்கம் இன்றி அரையர் பள்ளிசை. (பறைச்சேரியில் வாசம் பண்ணிக்கொண்டு நம்பெருமாளைப் பள்ளிசையில் பாடும்படி நியமித்த சரித்திரம் இன்றும் அனுஷ்டிக்கப்படுகிறது.) இந்த அரையரை அங்கீகரித்து அவருக்கு வரம் கொடுத்ததால் ‘வரந்தரும் பெருமாள்’ என்று நம்பெருமாளுக்கு ப்ரஸித்தியும், வரந்தரும் பெருமாளரையர் என்று அரையருக்கு அருளப்பாடும் உண்டாயிற்று. (தற்போது அரையர்கள் பள்ளுப்பாட்டைப் பாடுவதில்லை. அதற்குப் பதிலாக தம்பிரான்மார்களால் இயற்றப்பட்ட இயல், மற்றும் தாளத்துடன் ஸேவித்து வருகிறார்கள்.)
 6. அரையர்களிலே ஒருவர் தம்முடைய கைங்கர்யத்தை மறந்து திருவானைக்காவிற்கு அருகே ஒரு பறைச்சேரியிலே சிற்றின்பத்திலே மண்டி இருக்கலானார். ஒரு மஹோத்ஸவத்தின் எட்டாம் நாள் கீழையூர் எனப்படும் திருவானைக்காவிற்கு செல்லும் நிமித்தமாக நம்பெருமாள் ஒரு நாலுகால் மண்டபத்திலே எழுந்தருளியிருந்தார்.
 7. அப்போது பறைச்சேரியிலிருந்த அரையர் பள்ளும் பறையும் இசையுடன் பாடக்கேட்டருளி நம்பெருமாள் ஸ்ரீபாதம் தாங்குவோரை பறைச்சேரிக்கு அனுப்பி அவரை அழைத்துவரும்படி நியமித்தருளினார்.
 8. அந்த அரையரும் நம்பெருமாள் திருமுன்பு வர கூசித்திருக்க தாம் அவரை ஏற்றுக் கொண்டதை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் அந்த அரையருக்கு வரம்தரும் பெருமாள் அரையர் என்ற திருநாமம் சாற்றியருளினார்.
 9. அவருக்குச் சிற்றின்பத்தில் இருந்த மோஹத்தைப் போக்கி கைங்கர்யமாகிய செல்வத்தை மீண்டும் ஊரறியத்தந்து தூய மனத்தராய் விளங்குகின்ற அந்த அரையரைக் கொண்டு நம்பெருமாள் சித்ரா பௌர்ணமியன்று திருவூறல் (கஜேந்த்ர மோக்ஷம்) கண்டருளி திரும்பி எழுந்தருளுகிற போதும், ஒவ்வொரு ஏழாம் திருநாளுக்கும் நெல் அளவை கண்டபிறகு ஸ்ரீரங்கநாய்ச்சியார் ஸந்நிதிக்கு எழுந்தருளுகிற போதும் அந்த அரையர் பாடின பள்ளும் பறையும் இசையிலே கேட்டருளும்படி நம்பெருமாள் திருவுள்ளம் பற்றினார். அவ்வாறே பள்ளும்பறையும் இந்த உத்ஸவங்களில் கேட்டருளி வந்தார்.
 10. தற்போது பள்ளும் பறையுடன் அரையர் இந்த உத்ஸவங்களில் ஸேவிப்பதில்லை. ஏழாம் உத்ஸவ நாட்களில் ஸ்ரீரங்க நாய்ச்சியார் ஸந்நிதிக்கு எழுந்தருளும்போது அரையர்கள் கானம் பாடுவதில்லை. திருவூறல் உத்ஸவம் கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது தம்பிரான்படி இயலும் இசையும்  ஸேவித்துவருவதாக அரையர்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த மாறுதல் எப்போது ஏற்பட்டது என்பதை அறிய இயலவில்லை. அரையர்களுக்கான பல அருளப்பாடுகள் இருந்தபோதிலும் வரம்தரும் பெருமாள் அரையர் என்ற அருளப்பாடு மட்டும் சித்ரா பௌர்ணமியன்று ஸாதிக்கப்படுகிறது. திருவரங்கத்தில் பல நடைமுறைகள் மாற்றமடைந்த போதிலும் ஒருசில நடைமுறைகள் இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை நமக்கு நினைவூட்டுகின்றன. திருவரங்கம் பெரியகோயிலில் அரையருக்கு நான்கு அருளப்பாடுகள் உண்டு. அவையாவன: (1) வரந்தரும் பெருமாள் அரையர், (2) கோயிலுடைய பெருமாளரையர் (3) மதியாத தெய்வங்கள் மனமுறைவாணப் பெருமாளரையர், (4) நாதவினோத அரையர்.
 11. புராணக் கதையின்படி ஏற்பட்ட கருடவாஹனத்தில் நம்பெருமாள் இன்று எழுந்தருளுவது இல்லை.

ஸ்ரீ அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *