ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

சித்திரை விருப்பன் திருநாள்-1
1) சிருங்கேரி மடத்தைச் சார்ந்தவரான மாதவவித்யாரண்யர் என்பவரின் அருளாசியுடன் கி.பி. 1336ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யம் துங்கபத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்டது. அதன் தலைநகரமாக ஹம்பி விளங்கியது.
2) விஜயநகரசாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் சங்கமனுடைய இரு குமாரர்களான முதலாம் ஹரிஹரரும், புக்கரும் ஆவர். புக்கரின் புதல்வர்களில் ஒருவர் வீரகம்பண்ண உடையார்.
3) இந்த வீர கம்பண்ண உடையாரே, செஞ்சி மன்னனான கோணார்யன், சாளுவ மங்கு ஆகியோருடைய உதவியுடன் அழகிய மணவாளனை (கி.பி. 1371ஆம் ஆண்டு) பரீதாபி ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் நாள் 48ஆண்டுகள் கழிந்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்தான். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ( அ.கீ. Nணி. 55/1892) ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
4) அழகிய மணவாளன் ‘நம்பெருமாள்’ என்ற சிறப்புத்திருநாமத்தைப் பெற்றது கி.பி.1371ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அந்தத் திருநாமம் ஈரங்கொல்லி என்று அழைக்கப்படும் ஒரு வண்ணானால் அளிக்கப்பட்டது.
5) முதலாம் புக்கரின் பேரனும் 2ஆம் ஹரிஹர ராயரின் மகனும், ராம பூபதியின் பெண் வயிற்றுப் பேரனுமாகிய விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையார் நம்பெருமானால் மீண்டும் ப்ரதிஷ்டை கண்டருளிய ரேவதி நக்ஷத்ரத்தில் திருத்தேர் உத்ஸவம் ஏற்படுத்தி வைத்தான்.
6) இந்த விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையாரின் வளர்ப்புத்தாயான கண்ணாத்தை என்பாள் இந்த உத்ஸவம் நடைபெறுவதற்கு பொற்காசுகள் தந்தமை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.
7) கி.பி. 1371ஆம் ஆண்டு அழகிய மணவாளன் ஆஸ்தானம் திரும்பிய போதிலும் ப்ரணவாகார விமானமும் பெரும் பாலான மண்டபங்களும் கோபுரங்களும் பாழ்பட்ட நிலையில் காணப்பட்டன. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், குறுநில மன்னர்கள், படைத்தளபதிகள் ஆகியோருடைய உதவி கொண்டு இந்தக் கோயிலை மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கு 12 ஆண்டுகள் ஆயின.
8) கர்ப்பக்ருஹமும் மற்றைய மண்டபங்களும் பாழ்பட்ட நிலையில் இருந்ததால் அவற்றையெல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி (கி.பி. 1377) தந்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு சீரமைக்கப்பெற்று கி.பி. 1383இல் 60 ஆண்டுகளுக்குப்பின் நம்பெருமாள் உத்ஸவம் கண்டருளினார்.
9) கி.பி. 1383ஆம் ஆண்டுதான் 60 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியதொரு விழாவான விருப்பந்திருநாள் கி.பி. 1383ஆம் ஆண்டு மே மாதம் அதாவது சித்திரை மாதத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.
10) தேவஸ்தான நிதிநிலைமை மிக மோசமான நிலையில் இருந்ததாலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விழா நடைபெற இருப்பதாலும் திருவரங்கத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் உள்ள அனைவரும் தம்மால் இயன்ற தானியங்களையும், மாடு போன்ற விலங்கினங்களையும் தானமாகக் கோயிலுக்குத் தந்துதவ வேண்டுகோளின்படி பல மண்டலங்களிலிருந்த பாமர மக்கள் தங்களுடைய விளைபொருள்கள், பசுமாடுகள் ஆகியவற்றைத் தானமாகத் தர முற்பட்டனர்.
11) அதன் தொடர்ச்சியாகத்தான் நம்மால் “கோவிந்தா கூட்டம்” என்று அழைக்கப்படும் பாமர மக்கள் இன்றும் பல்வேறு  வகைப்பட்ட தான்யங்களையும் பசுமாடுகளையும் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பித்து வருகின்றனர்.
12)  கோயிலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி. மேலும் விருப்பண்ண உடையார் 52 கிராமங்களை திருவிடையாட்டமாகத் தந்தார். அவருடன் வந்த குண்டு ஸாளுவையர் நம்பெருமாள் கொடியேற்றத்தின்போது எழுந்தருளும் மண்டபமாகிய வெண்கலத் திருத்தேர்த்தட்டினைப் பண்ணுவித்தார்.
13) தற்போது இந்த இடத்தில் மரத்தினாலான மண்டபமே உள்ளது. ஆயினும் வழக்கத்தில் கொடி யேற்றத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் இந்த மண்டபத்திற்கு வெண்கலத் தேர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
14) இந்த விழாவில் கொடியேற்றத் திருநாளன்று (03.05.2010 திங்கட்கிழமை விடியற்காலை) கோயில் கணக்குப்பிள்ளை நம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விட்டதாகப் பட்டயம் எழுதுதல் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
15) மேலும் சக்கிலியர்களில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஒருவர் பெரியபெருமாளுக்கு வலது காலணியையும், மற்றொருவர் இடதுகாலணியையும் கோயில் கொட்டாரத்தில் கொண்டு வந்து சேர்ப்பர்.
16) வலது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் இடது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அவரவர்களுக்குப் பெரியபெருமாள் காட்டிக் கொடுத்த அளவில் காலணியைக் கொண்டுவந்து சேர்ப்பர். (தொடரும்)

ஸ்ரீ அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *