ஸ்ரீ:          
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

சித்திரை விருப்பன் திருநாள்-2
 17) எட்டாம் நாள் உத்ஸவத்தின்போது தேரடியிலும், த்வஜஸ்தம்பத்தின் அருகிலும், தலையிலே தேங்காய்களை உடைத்துக் கொள்வது, அவரவர் குடும்பத்தில் ஒருவர்மேல் நம்பெருமாள் ஆவேசம் கொள்ளுதல் ஆகிய நிகழ்ச்சிகளை இந்த பிரம்மோத்ஸவத்தின்போது காணலாம்.
 18) சித்திரைத் தேருக்கு முன்தினம் (8ஆம் திருநாளன்று) காலையில் நம்பெருமாள் வெள்ளிக்குதிரையில் வீதிவலம் வருதலை,  “குதிரை வாஹனமேறி, மன்னர்கள் பலரும் ஊழியம் புரிய, ஒளிவீசும் நவரத்தினங்கள் இழைத்த ஆபரணங்களை அணிந்துகொண்டு கஸ்தூரி ரங்கராஜா பவனி வருகிறார், வணங்குவோம் வாரீர்! சித்திரை திருவீதியில் வேட்கையுடன் அவன் எழுந்தருளும் சேவையைக் கண்டு வணங்குவோம் வாரீர்!” எனப் புலவர்கள் பாடியுள்ளனர்.
 19)“நம்பெருமாள் குதிரை மீதேறி வருவதே ஒரு தனி அழகு. குதிரையின் நடை அழகும், கடிவாளத்தைப் பிடித்து அமர்ந்து இருக்கும் ஒய்யாரமும், புன்சிரிப்புடன் மக்களை நலம் விசாரிக்கும் முறையில் திருக்கையின் அழகு ஆகிய இவை யாவும் அயோத்தியில் சக்ரவர்த்தி திருமகன் குதிரை மீதேறி வீதி உலா வருவது போலத் தோன்றும்” என்று பாடுகிறார் புலவர் ஒருவர். ராஜ வீதி என்று சித்திரை வீதிக்கு மற்றொரு பெயர் அமைந்துள்ளது.
 20) 8ஆம் உத்ஸவத்தன்று இரவு நம்பெருமாள் தங்கக்குதிரை வாஹனத்தில் வையாளி கண்டருளுவார். இந்த வையாளி திருவரங்கத்தில் உத்ஸவத்தின்போது காண வேண்டியதொரு காட்சியாகும்.
 21) இதனை “வையாளி நடையும், ஒய்யாரக் கொண்டையும் மெய்யாகவே சிறு பையனைப் போல் ஒய்யாரமாகவே ஐயன் வருகிற உல்லாச சேவை என் சொல்லுவேனடி” என்று பழம்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
 22) திருவரங்கத்துத் தெற்கு சித்திரை கோபுரம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனால்  எடுக்கப்பெற்றதாகும்.   (கி.பி.1250 – 84)
 23) இக்கோபுர விதானத்தில் திருவரங்கத்தில் நிகழும் சில விழாக் காட்சிகள் வண்ணச் சிற்பங்களாகத் திகழ்கின்றன. (வாகனப் போக்குவரத்தால் இந்த வண்ணச் சிற்பங்கள்மீது கரிப்படலம் படிந்துள்ளது. அவற்றை நீக்கினால் இந்தக் காட்சியைக் காணலாம்)
 24) இவை கி.பி.17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாயக்கர்கள் காலப் படைப்பாகும்.
 25) இவற்றில் அழகிய மணவாளன் (நம்பெருமாள்) முத்தங்கி தரித்துக் குதிரை வாஹனமேறித் திருவீதி பவனிவரும் காட்சி மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 26) இவ்வாறு  எழுந்தருளும் நம்பெருமாளுக்கு முன்னர் திருக்குடை, திருத்தொங்கல், திருச்சின்னம் முதலிய பரிச்சின்னங்கள் தாங்கிப் பலர் முன்னே செல்கின்றனர். ஆசார்யப்பெருமக்கள் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அருளிச்செயல் கோஷ்டியை அலங்கரித்து வருகின்றனர்.
 27) கொம்பு, பறை ஆகியவற்றை இசைக்க, அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவையும் ஊர்வலத்தின் முன்னர் செல்கின்றன. 18 வாத்யங்கள் முழங்க நம்பெருமாள் புறப்பாடு கண்டருளு வதை இந்த வண்ண ஓவியத்தில் காணலாம்.
 28) இந்த வண்ண ஓவியத்தில் திருவரங்கத்தில் நடைபெறும் கோண வையாளி என்னும் நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது.
 29) நம்பெருமாள் குதிரை வாஹனத்தில் உலா வரும்போது ஆடிக்கொண்டு  செல்லும் நிகழ்ச்சியே வையாளி என்பதாகும். சில உத்ஸவங்களில் 8ஆம் திருநாளன்று இந்த வையாளி நடைபெறும். விருப்பன்திருநாள், பூபதித்திருநாள், பங்குனி ப்ரஹ்மோத்ஸவம் ஆகியவற்றோடு அத்யயன உத்ஸவத்தில் இராப்பத்து 8ஆம் திருநாளன்று கோண வையாளி நடைபெறும்.
 30) ஹொய்சாளர்கள்  கி.பி.1220-1295 இடைப்பட்ட காலத்தில் திருவரங்கத்தில் பல திருப்பணிகள் மேற்கொண்டனர். அவற்றில்  சிறப்புடையனவாக தன்வந்த்ரி ஸந்நிதியின் விரிவாக்கம், ஆயிரங்கால் மண்டபம் கட்டுமானம், திருக்குழலூதும் பிள்ளை திருக்கோயில் நிர்மாணம் (ரங்கவிலாஸ் மண்டபத்தின் மேலைப்பகுதியில் உள்ளாண்டாள் ஸந்நிதிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த ஸந்நிதி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
 31) வையாளி ஊர்வலம் இவர்கள் காலத்திலே ஏற்படுத்தப்பட்ட  ஒரு நிகழ்ச்சியாகும். ஏறத்தாழ கி.பி.1129இல் ஹொய்சாள மன்னன் சோமேƒவரனின் உதவியோடு மலர்ந்த “மானசோல்லாசம்”  எனும் நூலில் ‘வஹ்யாளி’ எனும் குதிரை ஏற்றம் பற்றிய வீர விளையாட்டு பேசப்படுகிறது. (வஹ்யாளி என்னும் சொல்லே வையாளி என்று திரிபு அடைந்து ள்ளது)
 32) இவ்வாறு வரலாற்றுச் சிறப்புடைய குதிரைப் பாய்ச்சல் எனும் குதிரையாட்டத்தினை (வையாளியினை)  தெற்கு கலியுகராமன் வீதியின் (சித்திரை வீதி) கோபுர விதானத்தில் காணலாம். குதிரைச் சேவகர்கள் குதிரையைக் கயிற்றால் பிணைத்துக் கைகளால் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். குதிரைகள் முன் கால்களைத் தூக்கிக் கொண்டு பாய்ந்து ஆடுகின்ற காட்சி இக்கோபுரத்தின் அழகுக்கு மேலும் எழில் கூட்டுகின்றது.
 33) ஒவ்வொரு நாளும் வாஹனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்த பிறகு நான்முகக் கோபுர வாசலில் (நான்கு முகங்கள் கொண்ட அமைப்பை உடையதால் இதற்குத் தெற்குநான்முகக் கோபுர வாசல் என்று பெயர். இதைப் போன்று கிழக்குப் பகுதியில் வெள்ளைக் கோபுரமும், வடக்குப் பகுதியில் தாயார் ஸந்நிதிக்கு அண்மையில் உள்ள கோபுரமும் நான்கு முகங்களைக் கொண்டவை. நான்முகன் கோபுரம் என்று கூறுவது தவறு.) வாகனங்களுக்கு நம்பெருமாள் எழுந்தருள்வதற்கு முன்பு ஜீவப்ரதிஷ்டை நடைபெறும். அவைகள் ஆத்மாவுடன் கூடிய அந்தந்த விலங்கு வகையைச் சார்ந்ததாக அமைந்திருப்பதால் அந்த வாகனத்திற்கு அமுது படைக்கப்படும். அதன்பிறகு சொக்கநாத நாயக்கரால் (கி.பி. 1659-1682) நிர்மாணிக்கப்பெற்ற மண்டபத்தில் திருவந்திக்காப்பு நடைபெறும்.                              (தொடரும்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *