Nammazhvaar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

நம்மாழ்வார் வைபவம்


 1. ப்ரபன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வார் அவதார திருநக்ஷத்திர வைபவம் வைகாசி 13ம்நாள் (27.5.2010) விசாக நக்ஷத்திரத்தில் நடைபெற உள்ளது.
 2. பரமவைதிக சித்தாந்தமாய்த் தமிழ்ப்பெருமக்களின் மதமாகிய வைணவ மதத்தின் தத்துவங்களை உலகிற்கு உபதேசித்து எங்கும் பரவச்செய்து அதனை வளர்த்த பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசாரியர்கள் என்றும் வழங்குவர்.
 3. ஆழ்வார்களுள் முதல்வராய் எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்குலகில் வந்த நம் சடகோபரே ஆசாரிய பரம்பரைக்கு முதல்வராவார்.
 4. ஞானதேசிகரான நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்மறை நான்கனுள் சாமவேத சாரமான திருவாய்மொழியின் பொருள் விசேடங்களை வெளியிடுதற்கு ஆறாயிரப்படி முதலிய ஐந்து வியாக்கியானங்கள் அவதரித்திருப்பினும், ஆழ்வாருடைய பெருமையினையும் அருளிச் செயலின் சீர்மையினையும் “வகுளாபரணன் ஓவாதுரைத்த, தமிழ் மாமறையின் ஒருசொற் பொறுமோ உலகிற் கவியே” என்கிறபடியே திருவாய்மொழியின் ஒப்புயர்வற்ற சிறப்பினையும் இதில் சாரமாக அறியவேண்டிய உள்ளுறைப் பொருள்களையும் விசேடார்த்தங்களையும் அவ்வியாக்கியானங்கள் மூலமாக மற்றும் அறிய முடியாமையின், அவற்றை அறிவிக்கத் திருவுளங்கொண்டு “அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே” எனப்படுகின்ற தம் பரமகிருபையால் செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளில் சீரிய கூரிய தீஞ்சொற்களாலே இந்நூலை அருளிச்செய்து, தீதில் நன்னெறியை இதன் மூலம் உலகில் பரவச் செய்தார்.
 5.  ஆழ்வார்களின் தலைமை பெற்றவரான நம்மாழ்வார் நாலு வேதங்களின் ஸாரமாக அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதிருவந்தாதி ஆகியவையாகும்.
 6. முதல் திவ்ய பிரபந்தமான திருவிருத்தம் ரிக்வேதஸாரமென்றும், இரண்டாவது திவ்யப்ரபந்தமான திருவாசிரியம் யஜுர் வேதஸாரமென்றும், மூன்றாம் திவ்யப்ரபந்தமான பெரியதிருவந்தாதி அதர்வண வேதஸாரமென்றும், நாலாவதாய், சரம ப்ரபந்தமான திருவாய்மொழி ஸாமவேத ஸாரமென்றும் பெரியோர்கள் நிர்வகிப்பர்.
 7. “இயற்பா மூன்றும் வேதத்ரயம் போலே;  பண்ணார் பாடல் பண்புரையிசை கொள் வேதம் போலே” (ஆசார்யஹ்ருதயம் நூற்பா-50) என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், அருளிச் செய்துள்ளார்.
 8. இவற்றுள் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியை உபநிடதங்களின் சாரம் என்றும் திராவிட வேதம் என்றும் போற்றுவர்.
 9. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே”, என்று அருளியபடியே திருவாய்மொழியானது உபநிடதங்களின் உட்கருத்தை விளக்குவதாகும்.
 10. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய மணவாளமாமுனிகள் என்றும் ஆசாரியர் தாம் அருளிய திருவாய்மொழி நூற்றாந்தாதியில் “உயர்வே பரன்படியே உள்ளதெல்லாம் தான் கண்டு உணர்வேத நேர் கொண்டு உரைத்து…., என்று திருவாய்மொழியின் வேதமாம் தன்மையை எடுத்துக்காட்டியுள்ளார்.
 11. வேதமாவது எப்பொழுதும் ஒரே மாதிரியாய் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு உச்சரிக்கப்படும் சப்தங்களின் கூட்டம்.
 12. இவ்வேதமானது படைப்பின் ஆரம்பத்தில் எம்பெருமானால் நான்முகக் கடவுளுக்கு உபதேசிக்கப்பட்டு, அவனால் தமது சீடர்களுக்கு உபதேசிக்கப்பட்டு, சீடர்களுக்குச் சீடர்களான பரம்பரையாய் நமக்குக் கிடைத்திருக்கின்றது என்பர்.
 13. ஆதியில் வேதம்நான்கு வகைகளுடன் நூறு ஆயிரம் சாகை(கிளை)களுடன் கூடிய ஒரே விருக்ஷமாக (மரமாக) இருந்தது என்றும், துவாபர யுக முடிவில் வியாசரால் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டது என்றும் சொல்லுவர்.
 14. பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே எம்பெருமான் மனிதனாய் வந்து அவதாரங்கள் செய்தாற்போலே வேதமும் தமிழாய் வந்து ஆழ்வார்கள் மூலமாக வெளிவந்ததை ‘முந்தையாயிரம்’ என்பர்.
 15. வேதாந்த தேசிகர் என்னும் ஆசார்யர் தாம் அருளிய ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியின்’ முதல் ச்லோகம் மூலமாக நம்மாழ்வாருடைய திருவாய்மொழியானது உபநிஷத்து வாங்மயமான நூல்களின் ஸாரமானது என்று கூறுவர்.