Bhattar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

பட்டர் வைபவம்
1. ஸ்ரீபராசரபட்டர் என்னும் ஆசார்யரது திருநக்ஷத்ர உத்ஸவம் வைகாசி அனுஷ நக்ஷத்ரத்தில் கொண்டாடப் படுகிறது.(28-5-2010)
2. ஆசார்ய பரம்பரையில் இராமாநுசருக்குப் பிறகு எம்பாரும், அவருக்குப்பிறகு ஆழ்வானின் புத்திரரானான ஸ்ரீபராசரபட்டரும் அலங்கரித்து வந்தனர்.
3. ஸ்ரீபராசரபட்டர் விபவத்தில் இராமாவதாரத்திலும், அர்ச்சையில் பெரியபெருமாளிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
4. கூரத்தாழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் நம்பெருமாளது அரவணை ப்ரசாதத்தின் ப்ரபாவத்தாலே அவதரித்தனர்.
5. கூரத்தாழ்வானுக்கு இரட்டைப் பிள்ளைகள் திருவவதரித்த தினம்-சுபகிருத் வருடம் வைகாசி மாதத்தில் பௌர்ணமி திதியும் அனுஷ நக்ஷத்திரமும் கூடிய புதன்கிழமையாகும்.
6. நம்மாழ்வாரது திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் அர்த்த விசேஷங்களை உள்ளபடி உணர்ந்து வெளியிட வல்லவரானவர் இவர் என்பதற்கு அறிகுறியாக, இவரது திருவவதாரம் அந்த ஆழ்வாருடைய திருஅவதார தினமாகிய வைகாசி விசாகத்திற்கு அடுத்ததாக அமைந்தது என்னலாம்.
7. ஸ்ரீரங்கநாதன் இளங்குழந்தைப் பருவத்திலேயே பட்டரைத் தமது புத்திரனாக அங்கீகரித்துத் தம்முடைய சந்நிதியிலே திருமணத்தூணின் அருகே தொட்டிலில் இடுவித்து ஸ்ரீரங்கநாச்சியாரும் தாமுமாகச் சீராட்டி வளர்க்க, அங்ஙனம் வளர்கிற அக்குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள் அமுது செய்வதற்குத் திருமுன்பே கொணர்ந்து சமர்ப்பிக்கப்படுகிற   அடிசிலைக் கைகளால் அள்ளி அளைந்து துழாவ, பெருமாள் அதுகண்டு உகந்தருளி “அமிழ்தினுமாற்றவினிதே தம்மக்கள், சிறுø கயளாவியகூழ்” என்றபடி அந்த இன்னடிசிலை மிகவும் பிரியமானதாக அங்கீகரித்து அருள்வாராம்.
8. இப்படி ஸ்ரீரங்கநாதன் தம்மை அபிமானித்துப் புத்திரஸ்வீகாரஞ் செய்தருளப் பெற்ற பாக்கியம் பெற்றமையால், பட்டர் “ஸ்ரீரங்கநாதபுத்ரர்” எனப்படுவார்; வானிட்ட கீர்த்திவளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த தேனிட்டதார் நம்பெருமாள் குமாரர்…. பட்டர் (திருவரங்கக் கலம்பகம் – காப்புச்செய்யுள்) என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் கூறியுள்ளார்.
9. பட்டர் ஐந்தாவது பிராயத்தில் ஒருநாள் திருவரங்கம் பெரிய கோயில் திருவீதியிலே புழுதி அளைந்து விளையாடுகிற போது, அநேக சாஸ்திரங்களில் வல்லவனான ஒரு வித்வான் ‘ஸர்வஜ்ஞபட்ட’னென்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டு அங்ஙனமே தன் பெயரைக் குறிப்பிட்டு ‘ஸர்வஜ்ஞபட்டர்’ வந்தார் என்பது முதலாகத் தன் பரிஜநங்களைக் கொண்டு விருது சொல்லி எக்காளம் ஊதுவித்துக் கொண்டு அதிக ஆடம்பரத்துடனே சிவிகை மீது வர, அதுகண்ட பட்டர், உடையவர் கூரத்தாழ்வான், முதலியாண்டான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார் முதலான பலபெரியோர்கள் எழுந்தருளியிருக்கிற இவ்விடத்திலே ஸர்வஜ்ஞ பட்டனென்று பெரும் பெயர் சொல்லி விருதூதிப் பல்லக்கேறி வருகிறான் இவன் யாரடா? என்று எண்ணித் தாம் அவன் எதிரில் சென்று கையிற் புழுதியை அள்ளியெடுத்து அவனைநோக்கி நீ ஸர்வஜ்ஞனன்றோ? இது எவ்வளவு? சொல், பார்ப்போம் என்று வினவினார்.
10. அவன் அதனைக் குறித்து அதிதீர்க்காலோசனை செய்தும் அது இத்தனையென்று தெரியாமையால், ஒன்றும் விடை சொல்ல மட்டாதே வெட்கத்தால் தலை கவிழ்ந்து மௌனத்தோடு நின்றிட்டான். பட்டர் அவனைப் பார்த்து இது ஒரு கைப்பிடிமண் என்று சொல்லி நீ கொண்ட பெயரைப் பொருளுள்ளதாக நிலை நிறுத்தி ஸர்வஜ்ஞன் என்ற விருதை மெய்ப்பித்துக் கொண்டு போக மாட்டாதே அஜ்ஞனாய் விட்டாயே! இனி உன்னுடைய விருதும் மற்றைய சின்னங்களும் எதற்காக? என்று ஏசி எக்காளம் முதலியவற்றைப் பறியுங்கள் என்று தம்முடன் விளையாடும் சிறுவர்களுக்குக் கூறினார்.
11. ஆழ்வான் தாமே பட்டர்க்கு வேத சாஸ்த்ரங்களைக் கற்பிக்க, எம்பார் பஞ்சஸம்ஸ்கார பூர்வமாக மந்திரங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் உபதேசிக்க, இவ்விருவரும் திருவாய்மொழி முதலிய திவ்வியப்பிரபந்தங்களையும் அவற்றின் வியாக்கியானங்களையும் சொல்லியருள, பின்பு பட்டர் ஆழ்வானிடமிருந்து ஸ்ரீபாஷ்யத்தை உபதேச க்ரமமாகப் பெற்று உபயவேதாந்தப் ப்ரவர்த்தகராய் விளங்கினார்.
12. இங்ஙனமிருக்கையில் ஒரு நாள் ஸ்ரீபாஷ்யகாரர் பட்டருடைய வேதாந்த உபந்யாஸ வைபவத்தைக் கேட்டு உகந்து அவர்க்கு வேதாந்தாசார்யர் என்ற சிறப்புப் பெயரைக் கொடுத்தருளினார்.
13. பிறகு எம்பெருமானார் திருமேனி தளர்ந்தவராய்ப் பரம பதமடையத் திருவுள்ளமாகி அடியார்கள் அனைவரையும் அழைத்துப் பட்டரைக் காட்டிக் கொடுத்து இவரை நம்மைப் போலவே பார்த்துக் கொள்ளுங்கள் என்று நியமித்துப் பட்டரைப் பெரிய பெருமாள் ஸந்நிதிக்கு அழைத்துக் கொண்டு போய்த் தமக்கு முன்னாக அவருக்குத் தீர்த்தப்பிரஸாதங்கள் கொடுப்பித்து அவரை நோக்கி கர்நாடகத்திலே வேதாந்தியென்று ஒரு பெரிய வித்வான் இருக்கிறதாகக் கேள்விப் படுகிறோம்; நீர் அங்கேபோய் அவரைத் திருத்தி நம் தரிசனப் பிரவர்த்த கனாக்கும் என்று அருளிச் செய்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
14. இராமாநுசர் நியமனத்தை சிரமேற்கொண்டு பராசர பட்டர் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் கொண்டு மாதவ சூரி எனப்படும் வேதாந்தி யைத் திருத்திப் பணிகொண்டு நஞ்சீயர் என்ற திருநாமம் சாற்றியருளினார். அன்று முதலாக நஞ்சீயர் பட்டரைப் பிரியாமல் அடிமைசெய்து கொண்டு அவர் திருவுள்ளத்துக்கு மேன்மேலும் உகப்பை விளைவிக்கப் பட்டரும் அவர்க்குச் சம்பிரதாய ரகசியார்த்தங்களை எல்லாம் அருளிச் செய்து திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் விசேஷார்த்தங்களையும் விவரிக்க நஞ்சீயர் அவற்றை ஆதரத்துடன் கேட்டுத் தம் நன்னெஞ்சிற் பூரித்துக்கொண்டு அவரருகிலேயிருந்தார்.
15.அக்காலத்திலே திருவரங்கம் பெரியகோயிலின் ஏழு திருச் சுற்றுக்களில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரமன் திருவீதித் திருமதிள் மிகவும் பாழ்பட்டு சரிந்துவிழ, அதனைச் சீர்படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீரசுந்தர பிரஹ்மராயன் எனும் சிற்றரசன் அந்தமதிளின் நேர்மைக்கு மாறாகப் பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது கண்டு முன்போலே மதிளை ஒதுக்கிக் கட்டாமல் அவர் திருமாளிகையை இடித்து நேரொழுங்காகத் திருமதிள்கட்டுவிக்க முயன்றான். அதனை அறிந்த பட்டர், அச்சிற்றரசனை நோக்கி, நீ கட்டுவிக்கிற திருமதிளோ பெருமாளுக்கு அரணாகும்; மகாபாகவதரான பிள்ளைப்பிள்ளையாழ்வான் போல்வோர் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து நம்பெருமாளுக்கு பாதுகாப்பாக அமைந்திருப்பதே உண்மையான அரணாகும்.
16. பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையைவிட்டு ஒதுங்கத் திருமதிள் கட்டுவிப்பதே உரிய செயலாகும் என்று நல்லுரை கூறினர். வீரசுந்தரன், ஆசாரியபுத்திரரென்ற அச்ச மின்றிப் பட்டரது வார்த்தையை மதியாமல், ஆழ்வானுக்கு அந்தரங்க சிஷ்யரென்ற பெருமையையும் பாராது பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையை இடித்துத் தள்ளி நேர்படத் திருமதிள் கட்டு வித்தான். இது காரணமாகப் பட்டர்க்கும் அவ்வரசனுக்கும் உண்டான மனத்தாங்கல் நாளடைவிலே மேலிட, வீரசுந்தரன் பட்டரை ஸ்ரீரங்கத்திலிருக்கவொட்டாது மிகவும் உபத்திரவிக்க, பட்டர் யாரிடமும் சொல்லாது கோயிலினின்று புறப்பட்டுத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளலானார். பிறகு சில ஆண்டுகள் கழித்து, வீரசுந்தரன் இறந்தவாறே பட்டர் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்.
17. ஒரு கைசிக துவாதசியன்று பெருமாள் ஸந்நிதியிலே பராசர பட்டர் கைசிக புராணம் வாசித்தருளிய அழகினில் உகந்து, ‘பட்டரே உமக்கு மேல்வீடு தந்தோம்‘ என்று அருளிச் செய்ய, இவரும் ‘மஹா ப்ரசாதம்‘ என்று அங்கீகரித்தருளி பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்தருளின உபகாரத்தைச் சிந்தித்து, ‘நாயன்தே! ஆசன பத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித்தாமரைகளும் அஞ்சேல் என்ற கையும் கவித்தமுடியும் முறுவல் பூரித்த சிவந்த திருமுகமண்டலமும் திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்திலே கண்டிலேனாகில் ஒரு மூலையடியே முறித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன்‘ என்று நம்பெருமாளையும் பெரியபெருமாளையும் ஆபாதசூடம் (திருப்பாதம் தொடங்கி திருமுடிஈறாக) அநுபவித்து திருமாளிகைக்கு எழுந்தருள திருப்பதியிலுள்ளவர்கள் அடங்கத் திருமாளிகையிலே அமுது செய்தருளின பின்பு பெருங்கூட்டமாக எழுந்தருளியிருந்து, திருநெடுந்தாண்டகத்திற்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே ‘அலம்பிரிந்த நெடுந்தடக்கை‘ என்கிற பாட்டுக்கு அர்த்தமருளிச் செய்கிறபோது, ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்‘ என்கிறவிடத்திலே
‘பறவையேறு பரம்புருடா நீ யென்னைக்கைக் கொண்டபின், பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்‘ என்று இத்தை இரட்டித்து அநுஸந்தித்தருளித் திருக்கண்களை மலரவிழித்துத் திருமேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து திருமுடியிலே அஞ்சலி செய்து கொண்டு அணையிலே சாய்ந்து நிற்கச் செய்தே சிர: கபாலம் வெடித்துத் திருநாட்டுக்கெழுந்தருளினார். இதுபற்றியே இன்றும் கைசிக துவாதசியன்று பட்டருக்கு ப்ரம்ஹரத வைபவம் ஏற்பட்டுள்ளது.
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *