NaathamunigaL Vaibhavam

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீமந்நாதமுனிகள் வைபவம்

1. ஸ்ரீமந்நாதமுனிகள் ஆனி அனுஷத்தில் அவதரித்தருளினார். இந்தத் திருக்கோயிலில் அவருடைய ஆண்டு திருநக்ஷத்ரோத்ஸவம் 24-6-2010 நடைபெற உள்ளது. 2. திருமகள் கேள்வனிடமிருந்து தொடங்கும் வைணவ ஆசார்ய பரம்பரையில் நடுநாயகமாய்த் திகழ்பவர் ஸ்ரீமந்நாதமுனிகள் ஆவார். 3. ஸ்ரீமந்நாதமுனிகள் ஒரு சிலரே கைகொள்ளக்கூடிய பக்தி யோகத்தைக் காட்டிலும், அனைவரும் மேற் கொள்ளக்கூடிய சரணாகதி மார்க்கமே சிறந்தது; பக்தி யோகத்தாலே கண்ணனை அனுபவிப்பதைக் காட்டிலும் திருவாய்மொழி அனுஸந்தானத்தாலே குணாநுபவம் செய்வது இனிது என்று அனைவரும் ஈடுபடக்கூடிய புதிய நெறியைக் காட்டிக் கொடுத்தார். 4. மேலும் சரணாகதி மார்க்கத்தை மக்களிடையே பரப்பி, ஆண், பெண் என்ற வேறுபாடும், பிறப்பின் அடிப்படையில் உள்ள வேறுபாடுகள் ஏதுமில்லாமல் அனைவரும் ஆழ்வார் பாடல்களைப் பாடி, அர்ச்சாவதார எம்பெருமானிடம் சரணாகதி செய்து உய்வு பெறலாம் என்ற புதிய எளிய வழியை வகுத்ததாலேயே உலகில் ஸ்ரீவைஷ்ணவம் எங்கும் பரவியது. இதற்கு வித்திட்டவர் ஸ்ரீமந்நாதமுனிகள். 5. கவிச்சக்கரவர்த்தியான கம்பர் சோழப் பேரரசர்களால் ஆதரிக்கப்படாத நிலையில், நாதமுனிகள் தம் தலைமையில் கம்ப ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார். 6. நாதமுனிகள் திருவரங்கத்தில் ஒரு பங்குனி உத்தரத்திருநாளில் தமது தலைமையில் கம்பராமாயண அரங் கேற்றத்தை நடத்தி வைத்து, கம்பநாடாருக்கு கவிச்சக்கரவர்த்தி, கம்பநாட்டாழ்வார் என்று புகழாரங்களைச் சூட்டினார். 7. கி.பி. 9ஆம் நூற்றாண்டில் அவதரித்த நாதமுனிகள் தொடங்கி கி.பி. 14ஆவது நூற்றாண்டில் அவதரித்த மணவாளமாமுனிகள் ஈறாக, பலபல ஆசார்யர்கள் அவதரித்து ஸ்ரீவைஷ்ணவத் தரிசனத்தை நிலைநாட்டிப் போந்தனர். 8. இத்தகைய பெருமை நம்நாட்டில் நிலவிவரும் வேறு எந்த மதத்திற்கும் அமையப்பெறவில்லை. 9. ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனை முதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநநர் என்னும் யானைமுகமுடைய நித்யஸூரியின் அம்சமாய், சோழ தேசத்தில் வீரநாராயண புரத்தில் (காட்டுமன்னார்கோயிலில்) (கி.பி. 823) சோபக்ருத்-வருடம், ஆனி மாதம், 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அனுஷ நக்ஷத்ரத்தில் ஈச்வர பட்டாழ்வாருக்குக் குமாரராக க்ஷடமர்ஷண கோத்ரத்திலே (சொட்டைக் குலத்திலே) அவதரித்தார். 10. இவருக்குத் திருத்தகப்பனார் இட்ட திருநாமம் ஸ்ரீரங்கநாதன் என்பது. 11. இவர் யோகாப்யாஸம் கைவந்தவராகையாலே ஸ்ரீரங்கநாதமுனிகள் என்றும், சுருக்கமாக நாதமுனிகள் என்றும் வழங்கப்பட்டார். 12. காட்டுமன்னார் கோயில் மன்னனாருக்குச் சில ஆண்டுகள் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும்போது, ஸேவார்த்திகளாக வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் “ஆராவமுதே” என்கிற திருவாய்மொழியை (5-8 பதிகம்)மன்னனார் திருமுன்பே அனுஸந்தித்தருள, அதைக் கேட்ட நாதமுனிகள் மிகவுகந்து, இத்திருவாய்மொழியின் திருநாமப்பாட்டிலே (சாற்றுப்பாட்டிலே) “ஓராயிரத்துள் இப்பதும்” என்று அருளிச் செய்யப்பட்ட ஆயிரம் பாட்டும் உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். இப்பத்துப் பாட்டுத் தவிர மற்றவை எமக்குத் தெரியாது என்று அவர்கள் பதிலளித்தனர். 13. உடனே நாதமுனிகள் குருகூர்ச்சடகோபன் என்று ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட திருக்குருக்கூருக்குச் சென்று ஸ்ரீமதுரகவிகளுடைய பரம்பரையில் வந்த ஸ்ரீபராங்குசதாஸரை அணுகி, திருவாய்மொழியின் 1000 பாட்டுகளை தமக்குப் போதித்து அருளும்படி வேண்டி நின்றார். 14. திருவாய்மொழியும் மற்றைய ஆழ்வார்கள் பாடிய பாடல்களும் நீண்ட காõலத்துக்கு முன்பே மறைந்து விட்டன. எங்களுடைய பரமாசார்யரான ஸ்ரீமதுரகவிகள் ஆழ்வார் விஷயமான கண்ணிநுண்சிறுத்தாம்பு என்கிற திவ்யப்பிரபந்தத்தை எங்களிடம் அளித்து இதை ஒருமுகமாக ஆழ்வார் திருமுன்பே இருந்து ஆழ்வார் திருவடிகளை தியானித்துக் கொண்டு நியமத்துடன் பன்னீராயிரம் உரு அனுஸந்தித்தால் ஆழ்வார் அவர் முன்பே தோன்றிடுவார் என்று அருளிச் செய்தார் என்று நாதமுனிகளிடம் கூறினார். 15. நாதமுனிகளும் கண்ணிநுண்சிறுத்தாம்பை அவரிடம் பிரார்த்தித்து உபதேசம் பெற்று ஆழ்வார் திருமுன்பே அதை நியமத்தோடு பன்னீராயிரம் உரு அனுஸந்தித்தார். 16. ஆழ்வாரும் அவர் நெஞ்சிலே தோன்றி உமக்கு என்னவேணும்? என்று கேட்க, திருவாய்மொழி முதலான திவ்யப்பிரபந்தங்களை அடியேனுக்கு இரங்கியருளவேணும் என்று நாதமுனிகள் விண்ணப்பம் செய்ய, ஆழ்வாரும் அவருக்கு மயர்வற மதிநலமருளி, ரஹஸ்யத்ரயத்தையும், திருவாய்மொழி முதலான திவ்யப் பிரபந்தங்களையும், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோகரஹஸ்யத்தையயும் அநுக்ரஹித்தருளினார். 17. ஸ்ரீமந்நாதமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளி, பண்ணிசையால் பரமனைப்பாடி உகப்பித்தார். 18. தன்னுடைய மருமகன்களான கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான் ஆகிய இருவருக்கும் திவ்யப்பிரபந்த ங்களை இசையுடன் பயிற்றுவித்தார். அவர்கள் பரம்பரையில் வந்தவர்களே அரையர்களாவர். 19. ஸ்ரீமந்நாதமுனிகளுடைய சிஷ்யர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் உய்யக்கொண்டாரும், குருகைகாவலப்பனும் ஆவர். 20. தாது வருஷம் (கி.பி. 917) மாசி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியன்று இவர் பரமபதித்தார். சுமார் தொண்ணுõற்று மூன்று (93) திருநக்ஷத்ரங்கள் எழுந்தருளியிருந்தார். 21. இவர் அருளிச் செய்த க்ரந்தம், ந்யாய, தத்வம் என்பது. இதிலிருந்து சில பகுதிகள் எம்பெருமானார், ச்ருத ப்ரகாசிகா பட்டர், ஸ்ரீவேதாந்த தேசிகர் முதலான ஆசார்யர்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்த க்ரந்தம் தற்போது கிடைக்க வில்லை. 22. யோகரஹஸ்யம், புருஷநிர்ணயம் என்னும் இரு க்ரந்தங்களையும் இவர் செய்ததாகப் பெரியதிருமுடியடைவில் உள்ளது. இவையும் தற்போது அச்சுவடிவில் இல்லை. ***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *