Krishnadevaraya & Srirangam Part 1 of 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

“ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாறும்,  அவருடைய திருவரங்கம் கோயிலைச் சார்ந்த அறப்பணிகளும்”-மூன்று பகுதிகளில் முதற்பகுதி.
1. விஜய நகர மாமன்னரான ஸ்ரீகிருஷ்ணதேவராயர் அரியணை ஏறியது-1509ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதமாகும். ஸ்ரீகிருஷ்ணதேவராயர் அரியணை ஏறிய 500ஆவது ஆண்டு பூர்த்திவிழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
2. தாது வருஷம், மக மாதம், 11ஆம் நாள் திங்கட்கிழமை (16-2-1517)  மாமன்னர் கிருஷ்ண தேவராயர் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை தந்தார்.
3. அன்றைய தினம் பல விலையுயர்ந்த ஆபரணங்களையும் நவரத்னங்களையும் திருக்கோயிலுக்குத் தானமாகத் தந்தார் என்று கல்வெட்டு எண் அ.கீ.Nணி. 341 / 1950-51மூலம் அறியப்படுகிறது. (ராஜமகேந்திரன் திருச்சுற்று மேற்குப்பக்க சுவரின்கண் அமைந்துள்ளது)
4. மேலும் தாம் திருவரங்கத்திற்கு வருகை தந்ததின் நினைவாக ‘கிருஷ்ணதேவராயர் ப்ரஹ்மோத்ஸவம்’ என்ற பெயரில் ப்ரஹ்மோத்ஸவம் ஒன்றினை ஏற்படுத்தி வைத்தார்.
5. பல ஆண்டுகள் மாசி மாதம் இந்த ப்ரஹ்மோத்ஸவம் நடைபெற்று வந்தபோதிலும் தற்போது இது நடை பெறவில்லை.
6. திருவரங்கத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்துக் கல்வெட்டுகள் நாற்பதுக்குமேல் காணப்படுகின்றன. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சேஷராயர் மண்டபம் இவர் காலத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டது. இவருடைய பிரதானிகளில் ஒருவரான சேஷராயர் என்பார் இந்த மண்டபத்தை உருவாக்கினார்.
7. திருமலாதேவி, சின்னாதேவி, அன்ன பூர்ணாதேவி என்போர் இவருடைய பட்டத்தரசியர்.
8. திருமலாம்பா, மோக னாங்கி என்போர் ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் புதல்விகள்.
9. இள வயதிலேயே மரணமுற்ற திருமலைராயர் ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் புதல்வர் ஆவார்.
10. ஸ்ரீகிருஷ்ண தேவராயர் சிறந்த போர்வீரர். உயர்ந்த ராஜதந்திரி. பரந்த கல்வி ஞானமுடை யவர்.
11. இவர் கலைகளைப் போற்றிய வள்ளல். தெய்வ பக்தி  சான்றவர். ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்ந்த பற்றுடையவராகிய ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி ஸ்ரீவெங்கடேசுவரிடத்து அளவற்ற  பக்தி கொண்டவர்.
12. இவர் 1513-இல் கட்டாக் (ஒரிசா) கஜபதி மன்னரைப் போரில் வென்றார். கஜபதி மன்னரின் மகளை மணந்து கொண்டார். திருவரங்கத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் இவர் போரில் கஜபதி மன்னரை வெற்றி கொண்டது காணப்படுகிறது.
13. பத்தாண்டுகளுக்குள் (1520-ஆண்டுக்குள்) தென்னகம் முழுவததையும் அவர் ஒருகுடைக்கீழ் ஆண்டு வந்தார். 14. இவரது தினசரி வாழ்க்கையையும் வரலாற்றையும் ‘ராய வாசகமு‘ எனும் தெலுங்கில் எழுதப்பட்ட குறிப்புகள் வாயிலாகத் தெளிவாக அறிய முடிகிறது.
15. தென்னகக் கோயில்கட்கு அவர் அளித்த நன்கொடையின் வரலாறு ஆங்காங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.
16. சிறந்த கவிஞராகிய ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கலை ஆர்வர் கொண்டவர்.
17. இவர், வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிக் கவிஞர்கள் பலரையும் ஆதரித்தவர். இவரது அரசவையாகிய ‘புவன விஜயம்‘ எப்போதும் கவிஞர்கள், புலவர்கள், தத்துவ ஞானிகள், இசைமேதைகள், கலைஞர்கள் முதலியோரால் நிறைந்து பொலிவுடன் திகழும்.
18. அல்லசானி பெத்தண்ணா எனும் தெலுங்குக் கவிஞர் கிருஷ்ணதேவராயரிடம் மிகுந்த நட்புடன் திகழ்ந்தார். தெலுங்கு மொழியில் அமைந்துள்ள  ஐம்பெருங்காவியங்களுள் ஒன்றாகிய ‘மனுசரித்ரம்’ என்னும் நூலை இயற்றியவர் அல்லஸானி பெத்தண்ணா.
19. இவரது புலமையை மெச்சி கிருஷ்ண தேவராயர் ‘கண்டபெண்டேரம்’ என்னும் கழலினைத் தாமே இவரது காலிற் சூட்டினார்.
20. மனுசரித்ரத்தை அல்லசானி பெத்தண்ணா ஸ்ரீகிருஷ்ண தேவராயருக்கே காணிக்கையாக்கினார்.
21. அந்த நூலின் வெளியீட்டு விழாவின்போது கவிஞரைப் பல்லக்கில் வைத்து அரசரே சுமந்து சென்றார்.
22. யானைமீதமர்ந்து செல்லும் போது கவிஞர் எதிர்ப்பட்டால் அவரையும்  அரசர் தம்முடன் ஏற்றிச் செல்வார்.
23. நந்திதிம்மண்ண என்ற புலவரும் ‘பாரிஜாதா பஹரணம்’ என்னும் தம் நூலை ஸ்ரீகிருஷ்ணதேவராயருக்கே காணிக்கையாக்கினார்.
24. அல்லஸானி பெத்தண்ண, நந்தி திம்மண்ண, அய்யலராஜு, ராமபத்ருடு, தூர்ஜடி, மாதயகாரி மல்லண்ண, தெனாலிராமகிருஷ்ண, பிங்களி சூரண்ண, ராமராஜபூஷண என்னும் இந்த எட்டுப் புலவர்கள் இவ்வரச ரின் அவையில் அஷ்ட திக்கஜங்கள் என்னும் பெருமையுடன் வீற்றிருந்தனர்.                             (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *