AndaL Thiruvadippooram

ஸ்ரீ:
சூடிக்கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:
“திருவாடிப்பூர உத்ஸவம்” (12-8-2010)

1. “மெய்யடியாரான” விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநந்தவனத்தில் திருத்துழாயைப் பயிரிடுவதற்காக மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தபோது, பூமிப்பிராட்டியின் அம்சமாகத் திருவாடிப்பூர நக்ஷத்ரத்திலே ஆண்டாள் அவதரித்தாள்.
2. பெரியாழ்வார் கண்டெடுத்த குழந்தைக்கு“சுரும்பார்க் குழற்கோதை” என்று திருநாமம் சாற்றி திருமகள்போலே வளர்த்து வந்தார்.
3. ஸ்ரீமணவாளமாமுனிகள் இந்த வைபவத்தை “இன்றோ திருவாடிப்பூரம், எமக்காக வன்றோ இங்காண்டாளவதரித்தாள்,குன்றாத வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்) னையிகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய்” என்று உபதேச ரத்தினமாலையில் (22) கொண்டாடியுள்ளார்.
4. ஆண்டாளுக்குத் திருமண வயதுவந்தவாறே, பெரியாழ்வார் அவளிடம் “யாரை நீ மணம் செய்து கொள்ள விரும்புகிறாய்?” என்று வினவியதற்கு, திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுளாரான அரங்கத்தம்மானுக்கே தான் அற்றுத் தீர்ந்தவளாகக் கூறிட , அவரும் தன்னுடைய சிஷ்யனான வல்லபதேவனிடம் தெரிவித்தார்.
5. பெரியாழ்வாரின் சிஷ்யனான வல்லபதேவன் கோதைப் பிராட்டிக்கு ஸ்த்ரீதனமாக அநேக ஆபரணங்களையும், பொற்குவியல்களையும் கொடுத்துத் திருப்பல்லக்கிலே சூடிக் கொடுத்த நாய்ச்சியாரை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு, திருவரங்கத்தைச் சென்றடைந்தான்.
6.தென்திருக்காவிரி வடகரையிலே இறங்கி நீராட்டம் கண்டபிறகு, அநேக அலங்காரங்களைப் பண்ணிக்கொண்டு கோயில் பரிஜனங்கள் எதிர்கொள்ளத் திருப்பல்லக்குடனே கோயிலிலே புகுந்த ஆண்டாள் பெரியபெருமாள் திருவடிகளிலே இன்றும்  நித்யகைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
7. திருவரங்கன் சூடிக்கொடுத்த நாய்ச்சியாரை ஏற்றுக் கொண்ட வைபவத்தை ஆறாயிரப்படி குருபரம்பரை (பின்பழகராம் பெருமாள் ஜீயர் அருளிச்செய்தது)  கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது:
8. “ஆண்டாள் வந்தாள், சூடிக் கொடுத்தாள் வந்தாள், சுரும்பார்க் குழற்கோதை வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள், தென்னரங்கந் தொழுந் தேசியள் வந்தாள்” என்று பல சின்னங்கள் பணிமாற வந்து, அழகியமணவாளன் திருமண்டபத்தே சென்று பல்லக்கின் தட்டுப்பாயை நீக்கினார் பெரியாழ்வார்.
9. சூடிக்கொடுத்த நாய்ச்சியாரும், அகிலருங் காணும்படி உதறியுடுத்த பட்டுச்சேலையும், சுற்றிய செங்கழுநீர் மாலையும், திருநுதற்கஸ்தூரித் திருநாமமும், காதளவும் ஓடிக் கயல்போல் மிளிருங் கடைக்கண்விழியும், கொடியேரிடையும் கோகநகத்த கொங்கைகுலுங்கச் சிலம்பார்க்கச் சீரார்வளை யொலிப்ப அன்னமென்னடைகொண்டு அழகியமணவாளன் திருமுன்பே சென்று உள்ளேபுகுந்து கண்களாரக் கண்டு, கேசவ நம்பியைக் கால் பிடிப்பாளென்னும் பேறுபெற்று, நாகபர்யங்கத்தை மிதித் தேறித் தீ முகத்து நாகணை மேற்சேருந் திருவரங்கரைச்சேர்ந்து, திருவரங்கன் திருவடி வருடும்படி அந்தர்ப்பவித்தருள, இத்தைக் கண்ட ஆழ்வார் சிஷ்யரான வல்லபதேவனுள்ளிட்டார் அகிலரும் திகைத்துநிற்க, திருவரங்கச்செல்வனார் ஆழ்வாருக்கு அருள்பாடிட்டருளி திருப்பாற்கடல் அரசனைப்போல நீரும் நமக்கு ƒவ†úரராய்விட்டீர்  (மாமனார் ஆகிவிட்டீர்) என்று மிகவும் உகந்தருளி இவருக்குத் தீர்த்தம் திருமாலை திருப்பரியட்டத்துடனே ஸ்ரீசடகோபனும் ப்ரஸாதித்தார்.
10. அதன்பிறகு அவரிடம் வில்லிபுத்தூருறை வான்றன் பொன்னடி பூண்டு கொண்டு வாழும் என்று விடை கொடுத்தருள, ஆழ்வாரும் பெரு மகிழ்ச்சியோடே, ஸ்ரீவில்லிபுத்தூரேறச் சென்று முன்பு செய்து வந்ததுபோலே வடபெருங்கோயிலுடையான் கைங்கர்யநிரதராய் வாழ்ந்து வந்தார்.
11. திருவரங்கத்தில் பெரியபெருமாள் திருவடிகளில் இன்றும் திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும் எழுந்தருளியிருந்து கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பதாக பூர்வாசார்யர்கள் அருளிச் செய்வர்.
12. கலாபத்தின்போது வெளியாண்டாள் ஸந்நிதியில் எழுந்தருளியிருந்த ஆண்டாள் உத்ஸவ விக்ரஹம் தோப்பு ராமர் ஸந்நிதி என்று புகழ்பெற்றிருந்த தற்போதைய உள்ளாண்டாள் ஸந்நிதிக்கு எழுந்தருளப் பண்ணப்பட்டாள். ஆகவே இந்த திவ்ய தேசத்தில் இந்த 2 ஆண்டாள் ஸந்நிதிகளிலும் திருவாடிப்பூர உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதுதவிர பரமபதநாதன் ஸந்நிதியில் ஆழ்வார் ஆசார்யர்களுடன் எழுந்தருளியிருக்கும் சூடிக்கொடுத்த நாச்சியாருக்கு இந்த உத்ஸவத்தின்போது ஒவ்வொரு நாளும் விசேஷத் திருக்கோலம் சாற்றப்படுகிறது.
13. ஆண்டாளுக்குத் திருநக்ஷத்திரோத்ஸவம் 10 நாளாகையால் ஆடி பரணியன்று தொடக்கம்.
14. ஆடிப்பூரத்தன்று பெரியபெருமாளுக்குத் தினந்தோறும் காலையில் காவேரியிலிருந்து வரும் திருமஞ்சனத்தைவிட விசேஷ விமரிசையுடன் பெரியகோயில் கைங்கரியபரர்கள் யானை மேல் கொண்டுவரும் தீர்த்தத்தால் ஆண்டாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும்.
15. பிறகு பெரியபெருமாள் ஸந்நிதியிலிருந்து சேலையும் அலங்காரமும் வந்து, அலங்காரம் அமுது செய்ததும் கோஷ்டி. முதலில் வெளியாண்டாளுக்குத் திருமஞ்சனம் வந்த பிறகு உள்ளாண்டாளுக்கு வரும்.
16. பெரியபெருமாள் தம்முடைய திருமஞ்சன வேதி முதலியவற்றை உள்ளாண்டாளுக்குக் கொடுத்தனுப்புவார்.
17. ஆண்டாளுக்கும், நாச்சியாருக்கும், ஆழ்வாராசாரியாள் அல்லாத இராமன் முதலிய பிம்பங்களுக்கும் இங்கு வெளிப்புறப்பாடு கிடையாது.
***