Srirangam NamperumaL Oonjal Utsavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

நம்பெருமாள் கண்டருளும் ஊஞ்சல் திருநாள் (25-10-2010 தொடங்கி 2-11-2010 ஈறாக)

1. முதல் திருநாள் :  இது ஒன்பது நாள் உத்ஸவம்.  ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று இந்த உத்ஸவம் பூர்த்தியாக வேண்டியதால், த்ருதீயை அன்று இது ஆரம்பிக்கப்படும்.
2.  த்ருதீயை அன்று நம்பெருமாள் நித்தியப்படிபோலே பெரிய அவசரத் திருவாராதனமாகித் தளிகை அமுது செய்தபிறகு, உத்ஸவத்துக்காக ரக்ஷா பந்தனம் செய்து கொள்வார்.
3. இந்த உத்ஸவத்துக்கு ம்ருத் ஸங்ரஹணம் (திருமுளைக்காக மண் எடுத்தல்) கிடையாது.  இது மத்தியானத்துக்குமேல் நடக்க வேண்டிய உத்ஸவம் ஆதலால், பெரிய அவசரம் அமுது செய்த பிறகுதான் நம்பெருமாள் புறப்படுவார்.
4. ரக்ஷாபந்தனமானதும், ஸந்நிதி வாசலில் திருச்சிவிகை என்ற பெரிய ஆஸனத்தில் நம்பெருமாளும் உபயநாய்ச்சி மார்களும் ஏராளமான திருவாபரணங்கள் அணிந்துகொண்டு எழுந்தருளுவார்கள்.
5. தினந்தோறும் சட்டைப்பாளம், கபாய் என்ற உடைகளில் ஏதேனும் ஒன்று தரித்துக்கொண்டு அதன்மேல் திருவாபரணங்களை அணிந்து கொள்வார்.
6. அத்யயனோத்ஸவம், பவித்ரோத்ஸவம், கோடைத் திருநாள் நீங்கலாக மற்றைய எல்லா உத்ஸவங்களிலும் முதல் திருநாளில் நம்பெருமாள் உபயநாய்ச்சிமார்களோடுதான் எழுந்தருள்வது வழக்கம்.
7. இந்தத் திருநாள் முழுவதும் நம்பெருமாள் புறப்பாட்டுத் தளிகை அமுது செய்து புறப்படுவார்.
8. நம்பெருமாள் புறப்பட்டு த்வஜஸ்தம்பத்துக்கு அருகே ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக் காப்புக் கண்டருளி, கந்தாடை இராமானுசனுக்கு ஸேவை ஸாதித்த பிறகு (தற்போது இந்தப் பட்டத்தில் யாரும் எழுந்தருளவில்லை), மண்டபம் போய் திரை ஸமர்ப்பித்து, ஏகாந்தமாய் ஊஞ்சலில் எழுந்தருளியதும், அலங்காரம் என்னும் தோசை வடை, ப்ரஸாதம், அமுது செய்வித்து திரை வாங்கப்படும்.
9. ஊஞ்சல் மண்டபத்தில் கந்தாடை இராமானுச முனி முழு திருவுருவச்சிலை தூணில் அமைந்துள்ளது.
10. பிறகு ஸ்தாநீகருடைய  அருளப்பாடுகளுடன் திருவாராதனம் வெகு விமரிசையாக நடைபெறும்.
11. அதன்பிறகு திரை ஸமர்ப்பித்து வெள்ளிச் சம்பா அமுது செய்வித்ததும், திரைவாங்குகையில், நம்பெருமாள் ஊஞ்சலாடிக் கொண்டே மங்களாரத்தி கண்டருள்வார்.
12. திருவாராதனத்தின்போது ஸேவிக்கப்படும் திருப்பாவையோடு “மாணிக்கங்கட்டி” (பெரியதிருமொழி-1.3), “மன்னுபுகழ்” (பெருமாள் திருமொழி 8ஆம் திருமொழி) ஆகிய பதிகப் பாசுரங்கள் அரையர்களால் ஸேவிக்கப்படும்.
13. ஊஞ்சலுக்கு இருபுறத்திலும் கைங்கர்ய பரர்களால் தங்கச்சாமரம் வீசப்படும். கீழே ஊஞ்சல் மண்டபம் படிக்கட்டிலிருந்து தென்புறத்தில் ஸ்தலத்தார்கள், தீர்த்த மரியாதைக்குரியவர்கள், அத்தியாபகர், மணியகாரர் முதலானோர் வரிசையாய் எழுந்தருளியிருப்பார்கள்.
14. அர்ச்சகர் ஊஞ்சலை ஆட்டிக் கொண்டே வெற்றிலையை அடிக்கடி நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணி கீழே உள்ளூரார் ஊழியக்காரர் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் காளாஞ்சியில் சேர்ப்பார்.
15. ஒருமணி நேரத்துக்குக் குறையாமல் இந்த ஊஞ்சல் வைபவம் நடக்கையில் தாம்பூலம் முழுவதும் நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணிய பிறகு, அர்ச்சகர் அந்த தாம்பூலங்களைக் கீழே கொண்டுபோய் மணியகாரரிடம் ஸாதிப்பார்.
16. பிறகு ஸ்தானீகர் ஊஞ்சல் மண்டபம் முன்புறத்திலிருந்து “சாரீயோம்” என்று வெகு கம்பீரமாய் உரக்க அருளப்பாடு ஸாதித்திடுவார்.
17. அதன்பிறகு தீர்த்தம், மற்றும் திருப்பணியார வினியோகம் ஆனபிறகு நம்பெருமாள் புறப்பட்டு அரையர் தாளத்துடன்  உள்ளே போய் மேலப்படியில் படியேற்றம் கண்டருளி கருவறைக்கு எழுந்தருள்வார்.
18. ஒன்றான கந்தாடை இராமானுசமுனி ஊஞ்சல் மண்டபம் கட்டி இந்த உத்ஸவத்தையும் ஏற்படுத்தியதால், தினந்தோறும் அவருடைய மடத்துக்கு விட்டவன் விழுக்காடு ப்ரஸாதம் வீரவண்டி சேமக்கல கோஷங்களோடு அனுப்பி வைக்கப்படும்.
19. இரண்டாம் திருநாள் : நம்பெருமாள் காயத்ரி மண்டபத்தில்அமுது பாறையின்மேல் தோளுக்கினியானில் எழுந்தருளி, புறப் பாட்டுத் தளிகை அமுது செய்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தைச் சென்றடைந்து  எல்லா வைபவங்களையும் கண்டருள்வார்.
20. ஆறாம் திருநாள் வரையிலும், எட்டாம் திருநாளன்றும் இதே மாதிரி நடைபெறும்.
21. ஏழாந்திருநாள் : நம்பெருமாள் ஸந்நிதி வாசலில் உபயநாய்ச்சிமார்களோடு எழுந்தருளி பஹிரங்கமாக சூர்ணாபிஷேகம் செய்துகொண்டு புறப்பட்டு, மற்றைய நாட்கள் போல நேராக மண்டபம் போகாமல், ஆர்யபட்டாள் வாசலுக்கு வெளியே வந்து, கொட்டார வாசலில் நெல் அளவு கண்டருளி, நாய்ச்சியார் ஸந்நிதி முன் மண்டபத்தில் ஸ்ரீரங்கநாய்ச்சியார் செய்துவைக்கும் திருவந்திக்காப்பையும் பெற்றுக் கொண்டு திரும்பி வந்து மண்டபம் எழுந்தருள்வார். மற்றைய காரியங்கள் மற்றைய நாட்களில் நடைபெறுவது போலவே நடைபெறும்.
22. மதுரகவி நந்தவன உபயம் : இந்த ஏழாந்திருநாள் உத்ஸவம் மதுரகவி நந்தவனத்தாரால் நடத்தி வைக்கப் படுகிறது.
23. இன்றைய தினம் தளிகை முதலிய ப்ரஸாதங்களை ஏராளமாகப் பண்ணி நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணுவது தவிர, இந்த நந்தவனத்தார் மண்டபத்தை வெகு நேர்த்தியாக அலங்கரித்திடுவர்.
24. கருட மண்டபத்திலிருந்து ஊஞ்சல் மண்டபம் வரைக்கும் மேலே மலர்களாலும் ஓலைகளாலும் தடுக்குகள் கட்டி இடைவிடாமல் தென்கலைத் திருமண், சங்கு, சக்கரம் இவைகளால் அலங்கரிக்கப்படும்.
25. ஏழாந்திருநாளன்று செய்யப்பட்ட இந்த அலங்காரம் உத்ஸவம் முழுவதும் பாதுகாப்புடன் வைக்கப்படும்.
26. எட்டாம் திருநாள்: இரவு நம்பெருமாள் உள்ளே எழுந்தருளியதும் சயனமூர்த்திக்கு சயனம் ஸமர்ப்பிக்கப் படும்.
27. ஒன்பதாம் திருநாள் – சாற்றுமுறை :  நம்பெருமாள் காலையில் முதல்காலத் திருவாராதனம் கண்டருளி, பொங்கல் அமுது செய்து, காத்திருக்கும் ஸ்நானபேரரோடு, சந்திர புஷ்கரிணியில் தீர்த்தவாரி நடத்தி மண்டபம் எழுந்தருள்வார்.
28. மண்டபத்தில் ஊஞ்சலுக்குக்கீழ் திருமஞ்சன வேதியில் திருமஞ்சனம் ஆனபிறகு, நம்பெருமாளை ஏகாந்தமாய் ஊஞ்சலில் எழுந்தருளப்பண்ணித் திருவாபரணங்கள் ஸமர்ப்பிக்கப்படும்.
29. அலங்காரம் அமுது செய்தபிறகு திரைவாங்கி வேத விண்ணப்பமும், கடதீபத்தினால் கும்பஹாரத்தியும்  நடந்து, வெள்ளிச் சம்பாத் தளிகை அமுது செய்விக்கப்படும்.
30. இவ்வளவு நாளாக நடந்ததைவிட இன்று ஊஞ்சலாட்டம் அதிக நேரம் நடை பெறும்.
31. தீர்த்த வினியோகம் முதலியவை ஆனபிறகு நம்பெருமாள் புறப்பட்டு  உள்ளே எழுந்தருள்வார்.
32. ரக்ஷாபந்தனம் களைந்த பிறகு, செலவு சம்பாவும் அரவணையும் அமுது செய்விக்கப்படும்.    ***