Nanjeeyar Vaibhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

நஞ்சீயர் வைபவம்

1) கர்நாடக மாநிலம், திருநாராயணபுரத்தில் பங்குனி உத்தரத்தன்று அவதரித்தவர் நஞ்சீயர். அவருடைய திருநக்ஷத்ரோத்ஸவம், 29-3-2010 அன்று நடைபெற உள்ளது. நஞ்சீயர் மூலத்திருமேனி கூரத்தாழ்வான் ஸந்நிதியில் ஸ்ரீபராசரபட்டருக்கு அருகில் எழுந்தருளப் பண்ணப்பட்டுள்ளது.

2) ஆலிநாடன் திருவீதியில் நெல்லளவை மண்டபத்திற்கு வடபுறத்தில் நஞ்சீயருடைய ஸந்நிதி இருந்தது. இப்போது அந்த இடத்தில் உள்ளது. இந்த ஸந்நிதியில் இருந்த ஆழ்வான், ஸ்ரீபராசரபட்டர் ஆகியோருடைய மூல விக்ரஹங்களை திருக்கோயில் கலைக்கூடத்தில் தற்போதும் காணலாம். அங்கே இருந்த நஞ்சீயர் மூலத் திருமேனி மட்டும் கி.பி. 2002ஆம் ஆண்டு கூரத்தாழ்வான் ஸந்நிதிக்கு எழுந்தருளப் பண்ணப்பட்டு ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

3) இவருடைய இயற்பெயர் மாதவாசார்யர் என்பதாகும். இவர் வேதாந்தங்களில் வல்லவராய் விளங்கியதால் ‘வேதாந்தி’ என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

4) ஸ்ரீராமாநுஜர் இவ்வுலகை நீத்துப் பரமபதம் அடைவதற்கு முன் ஸ்ரீபராசரபட்டரை அழைத்து, “மேல்நாட்டில் வேதாந்தி என்றொரு பெரிய வித்வான் இருக்கிறான் என்று அறிந்தோம். நீர் அங்கேறப் போய் அவனை நம் தர்சன ப்ரவர்த்தகனாம்படி திருத்தும்” என்று அருளிச் செய்தார்.

5) ஸ்ரீபராசரபட்டரும் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருநெடுந்தாண்டகத்தின் ஆழ்பொருளை வேதாந்தியாகிய மாதவாசார்யருக்கு எடுத்துக்கூறி அவரை ஸ்ரீவைஷ்ணவராக ஆக்கினார்.இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகத்தான் எந்த திவ்யதேசத்திலும் நடைபெறாத வைபமாகப் பகற்பத்து திருநாளுக்கு முந்தைய நாள் பெரியபெருமாள் திருமுன்பு திருநெடுந் தாண்டக விழா நடைபெறுகிறது.

6) பெருஞ்செல்வரான அவர் தம் அளவற்ற செல்வத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து 2 பகுதிகளை தம் இரு மனைவியர்க்கும் அளித்துவிட்டு, ஒரு பகுதியை தனது ஆசார்யனுக்குக் காணிக்கையாக ஸமர்ப்பித்திட்டார்.

7) ஆசார்ய சிஷ்ய உறவின் பிணைப்பை நாம் முழுமையாகக்  காண வேண்டுமானால் அதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் பட்டரும் நஞ்சீயருமே ஆவர். நஞ்சீயருக்குப் பட்டரிடத்திலிருந்த அளவற்ற பக்தியைப் புலப்படுத்தும் பல நிகழ்ச்சிகள் குருபரம்பரையில் இடம் பெற்றுள்ளன.

8) ஸ்ரீரங்கம் வந்து துறவுக் கோலத்துடன் தம்முடைய திருவடிகளில் விழுந்த வேதாந்தியைக் கண்ட பட்டர் ‘நம் சீயர்’ வந்தார் என்று வாரி அணைத்துக் கொண்டார். அதுமுதல் நஞ்சீயர் என்ற திருநாமமே அவருக்கு நிலைத்துவிட்டது.

9) நஞ்சீயர் 100 முறை திருவாய்மொழிக்கான விரிபொருளை, சந்திரபுஷ்கரிணியின் கரையிலுள்ள புன்னை மரத்தடியில் எடுத்து உரைத்துள்ளார்.

10) இவ்வாறு 100முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்தருளின நஞ்சீயருக்கு சதாபிஷேகம் செய்து அவரைக் கொண்டாடினார் சிஷ்யரான நம்பிள்ளை.

11) சந்திர புஷ்கரிணியின் கரையில் அமைந்துள்ள புன்னை மரத்தின் அடியில்தான் ஆளவந்தார் காலம் தொடங்கி நஞ்சீயர் காலம் வரையிலான ஆசார்ய பெருமக்கள் அருளிச்செயலின் ஆழ்பொருளை விரித்ததுரைத்து வந்தனர். புன்னை மரத்தின் இலைகள் திருவாய் மொழியின் அர்த்தத்தைக் கேட்டு பூரித்துத் தடித்திருக்கும் என்று நம்முன்னோர்கள் அறுதியிட்டுள்ளார்கள்.

12)ஒருமுறை பட்டர் பல்லக்கில் எழுந்தருளியபோது நஞ்சீயர் தாமும் பல்லக்கைத் தமது தோளிலே வைத்துச் சுமக்க முற்பட்டார். அப்போது பட்டர் “துறவியாகிய நீர் இப்படிச் செய்வது தகாது” என்று கூற, நஞ்சீயர் “தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் துறவறம் இடையூறு என்றால் துறவறத்தையும் துறந்துவிடுகிறேன்” என்றாராம். இதனால் துறவிகள் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யக்கூடாது என்கின்ற ஸாமான்ய தர்மத்தைவிட எந்தநிலையிலும் ஆசார்யருக்குப் பணிவிடை செய்வது என்ற விசேஷ ஸ்ரீவைஷ்ணவ தர்மத்திலேயே நஞ்சீயர் ஊன்றியவர் என்பது புலப்படுகிறது.

13) நஞ்சீயர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவரே ஆயினும் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களின் எல்லைகண்டவர். சில சமயங்களில் தமக்குப் பதிலாக நஞ்சீயரையே விரிவுரைகளைக் கூறும்படியும் பட்டர் நியமித்ததுண்டு. திருக்கோட்டியூரில் ராமாநுஜ தாஸர் என்பவருக்குத் திருவிருத்த விரிவுரை கூறும்படி நியமிக்க, நஞ்சீயரும் அப்படியே செய்ததாகப் பெரியவாச்சான்பிள்ளை குறிப்பிடுகிறார். (திருவிருத்தம் 95ஆம் பாட்டிற்கான பெரியவாச்சான்பிள்ளை உரை)

14) ஸ்ரீராமாயணத்தில் வரும் பாத்திரங்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் கேள்வி கேட்பதில் நஞ்சீயருக்கு நிகர் அவரேதான்.

15) ஸ்ரீபராசர பட்டருக்குப் பிறகு ஆசார்ய பீடத்தில் 35 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார் நஞ்சீயர். இவர் வாழ்ந்த காலம் 1113-1208 ஆகக் கொள்ளப்படுகிறது. 95 ஆண்டுகள் இந்நிலவுலகில் எழுந்தருளியிருந்தார் நஞ்சீயர்.

16) ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் மிகவும் ஈடுபாட்டுடனிருந்த நஞ்சீயர், ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஒருவருக் கொருவர் அன்பு செலுத்த வேண்டும் என்று கூறுவார். நஞ்சீயருடைய சீடர்களான வீரப்பிள்ளை, பாலிகைப் பிள்ளை என்பவர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் ஏதோ காரணத்தினால் இருவருக்கும் பகை ஏற்பட்டுவிட, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையும் தவிர்த்தனர். இதையறிந்த நஞ்சீயர் பிள்ளைகாள்! பகவத் விஷயம் உயர்ந்ததன்றோ! பகவத் விஷயத்தில் ஈடுபட்டி ருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர்மேல் விரோதம் பாராட்டலாமோ? என்று உபதேசம் செய்தார். அதுகேட்டு இருவரும் மனம் திருந்தித் தங்கள் விரோதத்தை மறந்து மீண்டும் நட்புடன் பழகத் தொடங்கினார்கள்.     (ஈடு 3-7-3)        ***