Category Archives: Sri VaishNava Acharyas

திருவாய்மொழிப் பிள்ளை வைபவம் – Tiruvaimozhi Pillai Vaibhavam

இன்று ‘வைகாசி விகாசம்’, திருவாய்மொழிப் பிள்ளை திருநக்ஷத்திரம். Today is Vaikasi Visakam, birth star of Tiruvaimozhi PiLLai.

Thiruvaimozhippillai
[Image Credit : SARPV.Chaturvedi Picasa gallery]

To read/download a 16 page e-book in Tamil about ‘Thiruvaimozhi Pillai’, click here : ThiruvaimozhiPiLLai_Vaibhavam_SrivaishnavaSri

குந்தீநகர் (கொந்தகை) தெய்வநாயகன்,உபயநாய்ச்சிமார், திருவாய்மொழிப்பிள்ளை உத்ஸவ விக்ரஹ புனர் ப்ரதிஷ்டை வைபவத்தின் போது வெளியிடப்பட்டது.1.9.2005 (பார்த்திப ஆவணி 16ஆம் நாள்)

To listen/download a 45min audio Upanyaasam in Tamil about Thiruvaimozhi, click here :  Tiruvaimozhi Pillai Vaibhavam

திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் _/_

MAnavaLa MamunigaL Sampradhaya Chandrikai

ஸ்ரீ:
அப்பிள்ளார் அருளிச்செய்த
சம்பிரதாய சந்திரிகை
(மணவாளமாமுனிகள் வைபவம்)
ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
    அவனியிலே இருநூறாண்டு இரும் நீரென்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
    பரமபதம் நாடி அவர் போவேனென்ன
நீதியாய் முன் போல நிற்க நாடி
    நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணமெனும் மா வருடம் தன்னில்
    தனித்துலா மூலநாள் தான் வந்தாரே.     1

 

நற்குரோதன வருட மகரமாத
    நலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து
விக்கிரம வற்சரத்தில் வீட்டிருந்து
    வேதாந்த மறைப்பொருளைச் சிந்தைசெய்து
புக்ககத்தில் பெண்பிள்ளை போலே சென்று
    புவனியுள்ள தலங்களெல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
    துரியநிலை பெற்று உலகைஉயக்கொண்டாரே.   2    

 

செயநாமமான திருவாண்டு தன்னில்
    சீரங்கராசருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாராநிற்கத்
    தென்னாட்டு வைணவரென்றொருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாளானார்
    தன்முன்பே ஓரருத்தம் இயம்பச்சொல்லிச்
சயனம் செய்து எழுந்திருந்து சிந்தித்தாங்கே
    சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே.       3

 

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
    வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
    கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
    சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
    பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார்.    4

 

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
    திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
    தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
    புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
    தனியனுரை செய்து தலைக் கட்டினாரே.            5

 

நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில்
    நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
    தொல்கிழமை வளர்பக்க நாலாநாளில்
செல்வமிகு பெரியதிரு மண்டபத்தில்
    செழுந்திருவாய் மொழிப்பொருளைச் செப்புமென்றே
வல்லியுரை மணவாளர் அரங்கர் நங்கண்
    மணவாள மாமுனிக்கு வழங்கினாரே.  6

 

ஆனந்தவருடத்தில் கீழ்மை ஆண்டில்
    அழகான ஆனிதனில் மூல நாளில்
பானு வாரங்கொண்ட பகலில் செய்ய
    பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்தமயமான மண்டபத்தில்
    அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீரிட்ட வழக்கே யென்ன
    மணவாள மாமுனிகள் களித்திட்டாரே.            7

தேவியர்கள் இருவருடன் சீரரங்கேசர்
    திகழ்திருமா மணிமண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
    தமிழ்மறையை வரமுனிவன் உரைக்கக்கேட்டே
ஆவணிமா சந்தொடங்கி நடக்கும் நாளில்
    அத்தியயனத்திருநாள் அரங்க நாதா
தாவமற வீற்றிருந்து தருவாய் என்று
    தாம் நோக்கி சீயர் தமக் கருளினாரே.                8

 

அருளினதே முதலாக அரங்க ருக்கும்
    அன்று முதல் அருந்தமிழை அமைத்துக்கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
    திகழ்திருமா மணிமண்டபத்தில் வந்து
பொருளுரைக்கும் போதெல்லாம் பெருமாளுக்குப்
    புன்சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
    மதுகேட்டுச் சாற்றியது இத்தனியன் தானே.            9

 

நாமார் பெருஞ்சீர்கொள் மண்டபத்து நம்பெருமாள்
தாமாக வந்து தனித்தழைத்து-நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாள்தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து.              10

சேற்றுக்கமல வயல் சூழரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழும நல்ல அந்தணர் வாழவிப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாளமாமுனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே.          11

ஜீயர் திருவடிகளே சரணம்.

An Interesting Quiz on Venkatachala Ithihasamala

ஸ்ரீ:
வேங்கடாசல இதிஹாஸமாலா கேள்வித்தாள்


பகுதி – 1
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சரியான விடை. அவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
மொத்த மதிப்பெண்கள்-50
1. வேங்கடாசல இதிஹாஸமாலா என்னும் நூலை எழுதியவர்.
அ) இராமானுசர். ஆ) முதலியாண்டான். இ) திருவரங்கத்தமுதனார். ஈ) அனந்தாழ்வான்.
2. இந்த நூல் அமைந்துள்ள மொழி.
அ) தமிழ். ஆ. தெலுங்கு. இ) ஸம்ஸ்கிருதம். ஈ) ஹிந்தி.
3. வேங்கடாசல இதிஹாஸமாலாவில் ஸ்தபகங்கள் என்று அழைக்கப்படும் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன.
அ) ஆறு. ஆ) ஏழு. இ) எட்டு. ஈ) ஒன்பது.
4. ‘ஸ்தபகம்’ என்றால்
அ) தூண். ஆ) பூங்கொத்து. இ) மலை. ஈ) மாலை
5. ஸ்ரீவேங்கடாசல இதிஹாஸமாலா
அ) உரைநடையில் அமைந்துள்ளது. ஆ) செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. இ) உரைநடையும் செய்யுளும் கலந்த வடிவில் அமைந்துள்ளது. ஈ) முக்கால் பகுதி செய்யுள் வடிவிலும் கால்பகுதி உரைநடையிலும் அமைந்துள்ளது.
6. வேங்கடாசல இதிஹாஸமாலையின்படி இராமானுசருடைய அவதாரம்
அ) ஆதிசேஷ அவதாரம். ஆ) பஞ்சாயுதங்களின் அவதாரம். இ) விஷ்வக்ஸேனரின் அவதாரம். ஈ) பார்த்தசாரதி பெருமாளின் அவதாரம்.
7. ஸ்ரீவேங்கடாசல இதிஹாஸமாலாவின்படி வைகானஸ அர்ச்சகர்கள் திருமலையைவிட்டு நீங்கியதற்கான காரணம்
அ) ராஜதண்டனைக்கு அஞ்சி. ஆ) சந்ததிகள் அற்றுப்போனதால். இ) எல்லோரும் இறந்துவிட்டதால். ஈ) பெருமாளிடம் அபசாரப்பட்டதால்.
8. வேங்கடாசல மாஹாத்மியம் சொல்லப்பட்டுள்ளது
அ) பிரும்மாண்ட புராணம். ஆ) விஷ்ணு புராணம். இ) பாகவத புராணம். ஈ) லிங்க புராணம்
9. ஸ்வாமி புஷ்கரிணி என்றால்
அ) சந்திர புஷ்கரிணியை குறிக்கும். ஆ) திருமலையில் உள்ள கோனேரியைக் குறிக்கும். இ) பொற்றாமரைக் குளத்தைக் குறிக்கும். ஈ) கல்யாணி புஷ்கரிணியைக் குறிக்கும்.
10. ஸ்வாமி புஷ்கரிணியின் கரையில் எழுந்தருளியிருப்பவர்
அ) கிருஷ்ணன். ஆ) இராமன். இ) வராஹன். ஈ) நரசிம்ஹன்.
11. திருவேங்கடமுடையானை மங்களாசாஸனம் செய்தருளிய ஆழ்வார்கள்
அ) பன்னிரண்டு. ஆ) பதினொன்று. இ) பத்து. ஈ) ஒன்பது.
12. ஆழ்வார்களின் தலைவராக கொள்ளப்படுபவர்
அ) திருமங்கையாழ்வார். ஆ) பொய்கையாழ்வார். இ) குலசேகராழ்வார். ஈ) நம்மாழ்வார்.
13. வில்வ இலைகளைக் கொண்டு வழிபடுவதற்கு உரிய தெய்வம்
அ) திருமகளோடு கூடிய திருமால். ஆ) சிவன். இ) சுப்ரமண்யன். ஈ) விநாயகன்.
14. இதற்கான ப்ரமாண வசனம் அமைந்துள்ளது
அ) ஸ்ரீஸூக்தத்தில். ஆ) ஸ்ரீ விஷ்ணு ஸூக்தத்தில். இ) புருஷ ஸூக்தத்தில். ஈ) நீளா ஸூக்தத்தில்.
15. ஸ்ரீவேங்கடேச ஸஹஸ்ரநாமாத்யாயம் அமைந்துள்ளது.
அ) ஸ்ரீ விஷ்ணு புராணம். ஆ) வாமன புராணம். இ) பிரும்மாண்ட புராணம். ஈ) லிங்க புராணம்.
16. திருமாலின் மார்பில் காலால் உதைத்த ரிஷியின் பெயர்.
அ) துர்வாஸர். ஆ) ப்ருகு. இ) மார்க்கண்டேயர். ஈ) விசுவாமித்திரர்.
17. சைவர்களுக்கும், இராமானுசருக்கும் இடையே நிகழ்ந்த வாதப்போர் நடந்தது.
அ) சோழமன்னன் அரசவையில். ஆ) பாண்டிய மன்னன் அரசவையில். இ) யாதவராஜன் அரசவையில். ஈ. தொண்டை மன்னன் அரசவையில்.
18. ‘ஸமாக்யை’ என்ற சொல்லுக்கு பொருள்
அ) காரணப்பெயர். ஆ) வினைத்தொகை. இ) ஆகுபெயர். ஈ) வினைமுற்று.
19. வ்யூஹ லக்ஷ்மியின் அடையாளங்களில் ஒன்று.
அ) நான்கு கரங்களோடு கூடியிருப்பது. ஆ) இரண்டு கரங்களோடு காணப்படுவது. இ) கையில் சங்கு சக்கரம் தரித்திருப்பது. ஈ) ஒரு கையை அபயஹஸ்தமாகக் கொண்டிருப்பது.
20. ஆனந்த ஸம்ஹிதை என்பது
அ) பாஞ்சராத்ர ஸம்ஹிதை. ஆ) வைகானஸ ஸம்ஹிதை. இ) சாக்த ஸம்ஹிதை. ஈ) ஸ்ம்ருதி.
21. இராமானுசர் காலத்திற்கு முன்பு உத்ஸவமூர்த்தியாய் ஆராதிக்கப்பட்டு வந்தவர்
அ) மலைக்கினியநின்ற பெருமாள். ஆ) வேங்கடத்துறைவார். இ) திருமலையப்பன். ஈ) நாராயணன்.
22) இராமானுசரால் நியமிக்கப்பட்ட வைகானஸ பிரதம அர்ச்சகர் திருநாமம்
அ) பார்த்தசாரதி. ஆ) செங்கனிவாயர். இ) ஸ்ரீனிவாஸன். ஈ) உலகளந்தான்.
23. திருமலை திருக்கோயிலில் மேற்கு நோக்கி எழுந்தருளப்பண்ணப்பட்டிருக்கும் நரஸிம்ஹமூர்த்தி முன்பு எழுந்தருளியிருந்த இடம்
அ) சந்திர புஷ்கரிணியின் மேற்கு கரையில். ஆ) சந்திர புஷ்கரிணியின் கிழக்கு கரையில்.
இ) பாபவிநாச தீர்த்தக்கரையில், ஈ) கீழ்த்திருப்பதி.
24. திருமலையில் திருவேங்கடமுடையானின் அப்ரதிக்ஷிண புறப்பாடு நடைபெறுவது
அ) புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தின்போது. ஆ) அத்யயனோத்ஸவத்தின்போது. இ) கார்த்திகை ப்ரஹ்மோத்ஸவத்தின்போது. ஈ) பங்குனி ப்ரஹ்மோத்ஸவத்தின்போது.
25. திருவேங்கடமுடையான் மோவாயில் பச்சைக்கற்பூரத்தை அணிவிப்பதற்கான காரணம்
அ) அனந்தாழ்வான் எறிந்த கடப்பாறை அந்த இடத்தில் பட்டதால். ஆ) தொண்டைமான் சக்கரவர்த்திக்கு சக்ராயுதத்தை அளித்திடும்போது ஏற்பட்டவடு. இ) ப்ருகு மகரிஷி எறிந்த கல்லால். ஈ) பசுக்களைக் கறந்திடும்போது  ஏற்பட்டவடு.
26. இராமானுசருக்கு திருமலைநம்பி ஸ்ரீராமாயண காலக்ஷேபம் ஸாதித்த இடம்
அ) திருமலை புஷ்கரிணிக் கரையில். ஆ) அடிப்புளியின் அடிவாரத்தில். இ) கீழ்த்திருப்பதியில். ஈ) கபில தீர்த்தக் கரையில்.
27. ஸ்ரீவேங்கடேச ரகஸ்யாத்யாயம் அமைந்துள்ளது
அ) பவிஷ்யோத்ர புராணம். ஆ) ப்ரஹ்மாண்ட புராணம். இ) மார்க்கண்டேய புராணம். ஈ) சைவ புராணம்.
28. “கோவிந்தா கோவிந்தா” என்று திருவேங்கடமுடையான் திருநாமத்தை கூவிக்கொண்டு மலைமேல் ஏற வேண்டும் என்ற குறிப்பு அமைந்துள்ளது.
அ) வராஹ புராணம். ஆ) நாரத புராணம். இ) பாகவத புராணம். ஈ) வாமன புராணம்.
29. பெரிய திருமலைநம்பி அவதரித்தருளியது
அ) சித்திரை ஸ்வாதி. ஆ) வைகாசி விசாகம். இ) ஆனி அனுஷம். ஈ) மாசி புனர்பூசம்.
30. பெரியதிருமலைநம்பியின் ஆசாரியர் திருநாமம்
அ) நாதமுனிகள். ஆ) உய்யக்கொண்டார். இ) மணக்கால்நம்பி ஈ) ஆளவந்தார்.
31. பிள்ளை திருமலைநம்பிகளுக்கு இன்னொரு பெயர்
அ) தோழப்பர். ஆ) ஆஸூரியார். இ) கோமடத்தார். ஈ) வாதூõலதேசிகர்.
32. பிள்ளைத்திருமலைநம்பியின் கோத்ரம்
அ) பாரத்துவாஜ கோத்ரம். ஆ) கௌண்டின்ய கோத்ரம். இ) கபில கோத்ரம். ஈ) வாதூல கோத்ரம்.
33. தண்ணீரமுது உத்ஸவம் திருமலையில் நடைபெறுவது.
அ) அத்யயனோத்ஸவத்தின் இறுதியில். ஆ) புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தில். இ) கார்த்திகை ப்ரஹ்மோத்ஸவத்தில். ஈ) பங்குனி ப்ரஹ்மோத்ஸவத்தில்.
34. அனந்தாழ்வான் அவதரித்தது
அ) திருவரங்கத்தில். ஆ) காஞ்சீபுரத்தில். இ) கர்நாடக மாநிலம் சிறுப்புத்தூரில். ஈ) திருமலையில்.
35. அனந்தாழ்வான் திருநக்ஷத்ரம்
அ) சித்திரையில் சித்திரை. ஆ) வைகாசி விசாகம். இ) ஐப்பசி மூலம். ஈ) பங்குனி ஹஸ்தம்
36. அனந்தாழ்வான் திருமலை செல்வதற்கு காரணமாய் அமைந்த திருவாய்மொழி பாசுரம்
அ) 1-1-1 ஆ) 3-3-2 இ) 4-1-1 ஈ) 10-10-11
37. திருமலையில் யமுனைத்துறைவர் மண்டபத்தை நிர்மாணித்தவர்
அ) பெரிய திருமலைநம்பி. ஆ) இராமானுசர். இ) முதலியாண்டான். ஈ) அனந்தாழ்வான்.
38. “அகிலாத்மகுணாவாஸம் அஜ்ஞாநதிமிராபஹம் ந ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே னந்தார்ய தேசிகம் நந என்ற  தனியனை யார் அருளிச்செய்தார்.
அ) இராமானுசர். ஆ) நஞ்சீயர். இ) பட்டர். ஈ) ஸாக்ஷாத் திருவேங்கடமுடையான்.
39. ‘ஸ்ரீமத்ராமாநுஜார்ய ஸ்ரீபாதாம்போருஹத்வயம்’ என்று குறிப்பிடப்படுபவர்
அ) முதலியாண்டான். ஆ) கூரத்தாழ்வான். இ) சோமாஸியாண்டான். ஈ) அனந்தாழ்வான்.
40. அனந்தாழ்வானின் புருஷகாரம் கொண்டு திருவேங்கடமுடையான் மோக்ஷம் அளித்தது
அ) சிறியாண்டானுக்கு. ஆ) பெரியாண்டானுக்கு. இ) மிளகாழ்வானுக்கு. ஈ) சோமாஸியாண்டானுக்கு.
41. திருவேங்கடமலையில் பெருமானின் திவ்ய ஐச்வரியத்தை பாதுகாப்பதற்காக தமது பிரதிநிதியாய் இராமானுசர்
அ) ஸ்ரீஸேனாபதி ஜீயரை நியமித்தார். ஆ) திருமலைநம்பி வம்சத்தாரை நியமித்தார். இ) அனந்தாழ்வான்  வம்சத்தவரை நியமித்தார். ஈ) முதலியாண்டான் வம்சத்தவரை நியமித்தார்.
42. இவ்வாறு நியமிக்கப்பட்டவரின் திருவாராதனப்பெருமாள்
அ) சக்கரவர்த்தி திருமகன். ஆ) கிருஷ்ணன். இ) வராஹன். ஈ) நரசிம்ஹன்
43. திருமலையில் இராமானுசருடைய விக்ரஹ ப்ரதிஷ்டையை செய்தவர்
அ) கந்தாடையாண்டான். ஆ) அனந்தாழ்வான். இ) கூரத்தாழ்வான். ஈ) சோமாஸியாண்டான்.
44. திருமலையில் இராமானுசர் காலத்தில் எழுந்தருளியிருந்த அரையருடைய திருநாமம்
அ) திருவேங்கடநாத அரையர். ஆ) பிள்ளைத்திருநறையூர் அரையர். இ) நாதமுனி அரையர். ஈ) சம்பத்குமார் அரையர்.
45. பாரபத்யகாரர் என்றால்
அ) திவ்யப்ரபந்தம் ஸேவிக்கும் அதிகாரி. ஆ) பெருமாளுக்கு நடைபெறும் கைங்கர்யங்கள் அனைத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரி. இ) வேதவிண்ணப்பம் செய்வார். ஈ) பூமாலை ஸமர்ப்பிப்பார்.
46. அனந்தாழ்வான் திருமதில் எடுத்திடும்போது இடையூறாய் நின்ற எந்த மரம் தானே நகர்ந்து வழிவிட்டது.
அ) செண்பகமரம். ஆ) புளியமரம். இ) பனைமரம். ஈ) சந்தனமரம்
47. வெள்ளிக்கிழமை திருமஞ்ஜனத்தின்போது ஸேவிக்கப்படும் திவ்யப்பிரபந்தம்
அ) திருப்பாவை. ஆ) நாச்சியார் திருமொழி. இ) பெருமாள் திருமொழி. ஈ) திருமாலை.
48. திருமலையில் சின்ன ஜீயர் பட்டத்தை ஏற்படுத்தியவர்.
அ) இராமானுசர். ஆ) அனந்தாழ்வான். இ) முதலியாண்டான். ஈ) மணவாளமாமுனிகள்.
49. திருமலைக்கான பதிகங்கள் திருவாய்மொழியில் அமைந்துள்ளவை.
அ) 3-3 மற்றும் 6-10 ஆ) 4-10 மற்றும் 8-10. இ) 2-10 மற்றும் 7-10. ஈ) 5-10 மற்றும் 9-10.
50. கோவிந்தராஜனுக்கு ப்ரஹ்மோத்ஸவம் நடைபெறுவது
அ) ஆனி மாதத்தில். ஆ) ஆடி மாதத்தில். இ) ஆவணி மாதத்தில். ஈ) கார்த்திகை மாதத்தில்.


2)கீழ்க்கண்ட சொற்றொடர்களை கோடிட்ட இடங்களில் தகுந்த சொல்லை இட்டு முழுமை செய்யவும்.                            மொத்த மதிப்பெண்கள். 50.
1. அனந்தாழ்வான் திருமலையில் ————கைங்கர்யம் செய்து வந்தார்.
2. வேங்கடாசல இதிஹாஸமாலா என்பதற்கு தமிழில் ————- என்ற பெயர் வழங்கி வருகிறது.
3. செந்தமிழ்பாடுவார் என்று திருமங்கையாழ்வாரால் சிறப்பித்து கூறப்பட்டவர்கள் ———- ஆவர்.
4. திருவரங்கப்பெருமாள் அரையர் ————- குலத்தைச் சார்ந்தவர்.
5. “படியாய்க்கிடந்து உன்பவளவாய்க் காண்பேனே” என்றருளிச் செய்தவர் ———– ஆழ்வார்.
6.  வேங்கடத்து அரி என்றால் திருமலையில் எழுந்தருளியிருக்கும் ———– குறிக்கும்.
7. அழகப்பிரானார் திருக்கிணறு திருமலையில் ————– திருச்சுற்றில் அமைந்துள்ளது.
8. திருவிருத்தம் ————– பாட்டில் நம்மாழ்வார் திருமலையை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
9. திருச்சந்தவிருத்தத்தில் திருமழிசையாழ்வார் காலநேமி என்னும் அசுரனை வதைசெய்தவன் திருவேங்கடமுதலியான் என்று ——————— என்ற பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
10. “ராமானுஜ பதச்சாயா” என்று கொண்டாடப்படுபவர் ———– ஆவார்.
11. ஸ்ரீ ராமானுஜர் பரமபதித்திடும்போது அனந்தாழ்வான் ————- கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அவர் பரமபதித்ததை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தெரிவிக்கக்கேட்டு துக்கம் அடைந்தார்.
12. வாரீர் அனந்தாழ்வானே! “நானன்றோ ராமானுஜமுனியாகிய ஒரு பெரிய நிதியை இழந்து விட்டேன்” என்று கூறினார் —————-.
13. ஆளவந்தார் குருகைக் காவளப்பனை சந்திக்கச் சென்றபோது அவர் ———– என்று வினவினார்.
14. பெரியதிருமலைநம்பி இராமானுசருக்கு ஸ்ரீராமாயண காலக்ஷேபம் முடிந்தவாறே ————- அவருக்கு ஆராதிக்க எழுந்தருளப்பண்ணிக் கொடுத்தார்.
15. திருமலைப்பகுதியை இராமானுசர் காலத்தில் ————– மன்னன் ஆண்டு வந்தான்.
16. எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே என்று ஆசைப்பட்டவர் ————— ஆழ்வார் ஆவார்.
17. “ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுசமுனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகிறேன்” என்று தனியனிட்டவர் —————- ஆவார்.
18. அனந்தாழ்வான் ஏற்படுத்திவைத்த ஏரிக்கு ————— என்று அவர் பெயர் சூட்டினார்.
19. திருவேங்கட மலையில் ————- ஆகம முறைப்படி திருவாராதனங்களும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன.
20. ‘வானவர் நாட்டையும் நீ கண்டுகொள்ளென்று வீடும் தரும்’ என்று நம்மாழ்வார் திருவாய்மொழி ————— பாசுரத்தில் அருளிச்செய்துள்ளார்.
21. “என் பாபங்களை திருவேங்கடமுடையான் கணக்கில் கொண்டால் பழைய நரகங்கள் போதாமல் புதிய புதிய பெரிய நரகங்களை உண்டுபண்ண வேண்டியிருக்கும். ஆனால் அனந்தாழ்வானே உம்முடைய புருஷகாரத்தால் பரமபதம் அளித்தான்” என்று கூறியவர் ———— ஆவார்.
22. திருவேங்கடமுடையான் திருமலையப்பனை ஸேவிப்பதற்காக திருவரங்கத்திலிருந்து வாத்ஸய வரதாசார்யர் போன்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமலை அடிவாரத்தில் பசித்து களைத்திருந்தபோது ப்ரஸாதம் அளித்து அவர்களுடைய பசியைப் போக்கினான் திருவேங்கடமுடையான். அப்போது அவன் தன்னை ————— என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
23. “பரம்சென்றுசேர் திருவேங்கடமாமலை”  என்ற பாசுரச்சொற்றொடரை ————- திருவேங்கட முடையானிடம் பதிலாகக் கூறினார்.
24. “மதுரகவிதாஸன்” என்ற தாஸ்ய நாமம்  ————- வம்சத்தவர்களுக்கு வழக்கில் உள்ளது.
25. அனந்தாழ்வான் தன் மகளுக்கு ————- என்ற பெயரைச் சூட்டினார்.
26. பத்மாவதியை ஓரிரவு முழுவதும் ————– மரத்தில் கட்டி வைத்தார் அனந்தாழ்வான்.
27. அனந்தாழ்வான் கட்டிவைத்த பூமாலை தொடுக்கும் மண்டபத்திற்கு ———– என்று பெயர்.
28.  ஒரு பிரம்மசாரியின் உருவில் உதவி செய்ய வந்த திருவேங்கடமுடையான் மீது அனந்தாழ்வான் ————– எறிந்து காயப்படுத்தினார்.
29. அனந்தா நீயல்லவோ ஆண்பிள்ளை என்று ————- புகழ்ந்துரைத்தார்.
30. அனந்தாழ்வானை ————— திருவடிகளில் ஆச்ரயிக்கும்படி இராமானுசர் நியமித்தருளினார்.
31. “குருவி கழுத்தில் பனங்காயைக் கட்டினாற்போலே” என்று —————– கூறினார்.
32. அனந்தாழ்வானுடைய திருத்தகப்பனார் திருநாமம் ————— என்பதாகும்.
33. அனந்தாழ்வான் —————- கோத்திரத்தைச் சார்ந்தவர்.
34.  அனந்தாழ்வான் அவதரித்தது கலி ———– ஆண்டு.
35. தண்ணீரமுது உத்ஸவத்தில் தீர்த்தக் குடத்தை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வரும்போது ————– ஆழ்வார் பாசுரங்களை திருவீதிகளில் ஸேவித்துக்கொண்டு வருவர்.
36. பெரியதிருமலைநம்பி பரமபதிக்கும்போது கூறிய வார்த்தைகளை திருவாய்மொழி ————— பாசுர வ்யாக்யானத்தில் நம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
37. பெரியதிருமலைநம்பிகள் ——————– திருவடிகளை நினைத்துக்கொண்டே நித்யவிபூதிக்கு எழுந்தருளினார்.
38. பெரியதிருமலைநம்பிகள் அவதரித்தது ————– மாதத்தில் ———– நக்ஷத்திரத்தில்.
39. பெரியதிருமலைநம்பிகள் தினந்தோறும் ————— இருந்து திருமஞ்ஜனத்தை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருவார்.
40. வராஹப்பெருமாள் அவதாரம்  ————– மாதம் ————-திருநக்ஷத்திரத்தில்.
41. வராஹப்பெருமாள் ஸ்வாமி புஷ்கரிணியின் ————– கரையில் எழுந்தருளியுள்ளார்.
42. சைவர்கள் முன்வைத்த கூற்றுகளை இராமானுசர் 1———- 2———- 3———- ஆகிய புராண வசனங்களைக் கொண்டு மறுத்தார்.
43. பதினெட்டு புராணங்களைத் தொகுத்தவர்————— ஆவார்.
44. பேயாழ்வார் அருளிச் செய்த “தாழ்சடையும் நீள்முடியும்” என்று தொடங்கும் பாசுரம்———- திருவந்தாதியில் ———–பாசுரமாக அமைந்துள்ளது.
45. “மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன்”  என்று தொடங்கும் பாசுரம் திருவாய்மொழி——– பத்தில்———– பாசுரம்.
46. லிங்கம் என்ற சொல்லிற்கு ————–என்பது பொருள்.
47. நாச்சியார்திருமொழியில்——— பாசுரங்கள் அமைந்துள்ளன.
48. இராமாநுசருக்கு முற்பட்ட காலங்களில் புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தின் பெரும்பகுதி———- ஊரில் நடைபெற்று வந்தது.
49. குத்ருஷ்டிகள் என்றால்———– பொருளாகும்.
50. ஆண்டாள் திருக்கரத்தில் ஏந்தியிருப்பது ———– மலராகும்.


3) சரியா, தவறா? என்று குறிப்பிடவும்.                மொத்த மதிப்பெண்கள்-50


1. ஸ்ரீநிவாஸன் திருமார்பில் உள்ள வனமாலைக்கு வைஜயந்தி என்று பெயர்.                  சரி/தவறு.
2. பங்காருபாவி (பொற்கிணறு) கீழ்த்திருப்பதியில் உள்ளது.                 சரி/தவறு.
3. ஆழ்வார்கள் அனைவருக்கும் திருமலையில் ஸந்நிதிகள் அமைந்துள்ளன.        சரி/தவறு.
4. அழகப்பிரானார் கிணறு என்றாலும் பொற்கிணறு என்றாலும் ஒரே
கிணற்றைத்தான் குறிக்கும்.                                 சரி/தவறு.
5. புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தின் 8ஆம் நாள் திருத்தேர் உத்ஸவம்.             சரி/தவறு.
6. அனந்தாழ்வானின் அவதாரமாகக் கொள்ளப்படுவது ஒரு செண்பகமரம்.        சரி/தவறு.
7. இராமானுசர் பெரியதிருமலைநம்பியிடம் ஸ்ரீராமாயணம் கேட்டது திருமலையில்.    சரி/தவறு.
8. நாதமுனிகளின் சிஷ்யர் பெரியதிருமலைநம்பி.                    சரி/தவறு.
9. பராங்குசன் என்றாலும் நம்மாழ்வார் என்றாலும் ஒருவரையே குறிக்கும்.        சரி/தவறு.
10. பெரியதிருமலைநம்பி தினந்தோறும் கபில தீர்த்தத்திலிருந்து திருமஞ்சனக்
குடங்களைச் சுமந்து வருவார்.                            சரி/தவறு.
11. திருமலைநாத தாதஆசார்யன் என்றால் அனந்தாழ்வானைக் குறிக்கும்.        சரி/தவறு.
12. திருமலைநம்பிகள் சித்திரையில், சித்திரை நாள் அவதரித்தார்.              சரி/தவறு.
13. திருமலைநம்பிகளின் அபிமான குமாரரின் பெயர் பிள்ளைத் திருமலைநம்பி.    சரி/தவறு.
14. பெரியதிருமலை நம்பியின் திருவாராதனப் பெருமாள் சக்ரவர்த்தித் திருமகன்.    சரி/தவறு.
15. அனந்தாழ்வான் கர்னாடக மாநிலம் மேல்கோட்டையில் அவதரித்தவர்.        சரி/தவறு.
16. பெரியதிருமலை நம்பியும் அனந்தாழ்வானும் பாரத்வாஜ கோத்ரத்தைச் சார்ந்தவர்கள் சரி/தவறு.
17. அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பூர்வாச்ரமத் திருநாமம்
யஜ்ஞமூர்த்தி என்பதாகும்.                                சரி/தவறு.
18. “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி” என்று தொடங்கும் பதிகம்
பெரியதிருமொழி 3-3.                                 சரி/தவறு.
19. புஷ்ப மண்டபம் என்றால் காஞ்சிபுரத்தைக் குறிக்கும்.                சரி/தவறு.
20. “மந்திபாய் திருவேங்கட மாமலை” என்று பாசுரமிட்டவர் கலியன்.        சரி/தவறு.
21. “கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே” என்று
ஆசைப்பட்டவர் குலசேகராழ்வார்.                            சரி/தவறு.
22. தொண்டரடிப் பொடியாழ்வார் திருவேங்கடவனைத் தாம் அருளிச்
செய்த திருமாலையில் மங்களாசாஸனம் செய்துள்ளார்.                சரி/தவறு.
23. யாமுனர் என்றால் ஆளவந்தாரைக் குறிக்கும்.                    சரி/தவறு.
24. அனந்தாழ்வானின் வழித்தோன்றல்கள் தம்மை மதுரகவிதாஸர் என்று கூறிக் கொள்வர். சரி/தவறு.
25. ஸ்ரீவைஷ்ணவ ஸந்யாசிகளை முக்கோல் பகவர் என்று அழைப்பர்.                சரி/தவறு.
26. மாருதிசிறியாண்டான் அனந்தாழ்வானை முன்னிட்டுக் கொண்டு
பரமபதத்தை அடைந்தார்.                                 சரி/தவறு.
27. இராமானுசர் திருவாய்மொழி 6-10 பதிகத்தை விரித்துரைக்கும் போது அனந்
தாழ்வான் தான் அவருடைய விருப்பப்படி திருமலைக்குச் சென்று புஷ்ப கைங்
கர்யம் செய்வதற்கு முன் வந்தார்                            சரி/தவறு.
28. “இராமானுசப் பேரேரி” என்னும் நீர்நிலை கீழ்த்திருப்பதியில் உள்ளது.        சரி/தவறு.
29. அனந்தாழ்வானின் திருக்குமாரரின் திருநாமம் இராமானுசன்.            சரி/தவறு.
30. “வைகுண்டாத்ரி” என்றால் திருமலையைக் குறிக்கும்.                சரி/தவறு.
31. மேருமலையின் மகன் திருவேங்கடமலை.                    சரி/தவறு.
32. மரணமடைந்தவர்களை திருமலையில் எரியூட்டுவது கூடாது.            சரி/தவறு.
33. திருமலையில் திருவேங்கடமுடையான் தரித்துக் களைந்த மாலைகளை
நாம் சூட்டிக் கொள்ளலாம்.                                சரி/தவறு.
34. விஷ்வக்ஸேனர் என்றாலும் ஸ்ரீ சேனாபதியாழ்வான் என்றாலும் ஒருவரையே குறிக்கும். சரி/தவறு.
35. ஸ்வாமி புஷ்கரிணியில் நீராடி ஸ்ரீவராஹப்பெருமாளை ஸேவித்தபிறகே
திருவேங்கடவனை தரிசிக்கச் செல்ல வேண்டும்.                    சரி/தவறு.
36. ஸ்ரீவராஹமூர்த்தி திருக்கோயிலில் பலி ஸாதிப்பது நடைமுறையில் உண்டு.    சரி/தவறு.
37. விஷ்வக்ஸேன ஏகாங்கிக்கு திருவேங்கடநாத (அப்பன்) சடகோப ஜீயர் என்ற
திருநாமம் சாற்றப்பட்டது விகாரி வருஷம், தை மாதம், சுக்லபக்ஷ வெள்ளிக்கிழமை.  சரி/தவறு.
38. சடகோப ஜீயருக்கு கைங்கர்யத்தில் உதவி செய்வதற்காக 4 ஏகாங்கிகளை
இராமானுசர் நியமித்தருளினார்.                            சரி/தவறு.
39. இராமானுசர் நாடெங்கும் வைணவம் தழைத்தோங்குவதற்காக 74
ஸிம்ஹாசனாதிபதிகளை நியமித்தருளினார்.                    சரி/தவறு.
40. பாத்மோத்தர புராண வசனப்படி “சகல நற்பண்புகளோடு கூடியவனே”
ஆசார்யனாய் இருக்கத் தகுந்தவன் என்று பெறப்படுகிறது.                சரி/தவறு.
41. ஏகாங்கிகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து அதிகப்படுத்தக்கூடாது
என்று இராமானுசர் தடை விதித்துள்ளார்.                        சரி/தவறு.
42. ஸ்ரீமந்நாதமுனிகள் அவதரித்தது சொட்டைக்குலம்.                சரி/தவறு.
43. திருவேங்கடமுடையான் தனது சங்கு சக்ரங்களை தொண்டைமான்
சக்ரவர்த்திக்கு போரில் வெற்றி கொள்வதற்காக அளித்தான்.             சரி/தவறு.
44. சைவர்கள்  திருமலையில் கோயில் கொண்டிருப்பவன் சிவன் என்றும்
கந்தன் என்றும் வாதிட்டனர்.                             சரி/தவறு.
45. திருமலை அத்யயனோத்ஸவத்தில் திருப்பல்லாண்டு
தொடங்கி ஸேவிக்கப்படும்.                            சரி/தவறு.
46. திருமலைக்குச் செல்லும் வழியில் அடிப்புளியின் அண்மையில்
திருவேங்கடமுடையானின் திருவடித்தாமரை இணையினைக் காணலாம்.         சரி/தவறு.
47. திருமலையில் திருவேங்கடமுடையான் எழுந்தருளியிருக்கும் விமானத்திற்கு
ப்ரணவாகார விமானம் என்று பெயர்.                        சரி/தவறு.
48. “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின்” என்ற சொற்றொடர்
திருவாய்மொழி 6-10-11இல் அமைந்துள்ளது.                    சரி/தவறு.
49. திருவேங்கடவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் முதலாழ்வார்கள்.        சரி/தவறு.
50. வேங்கடாசல இதிஹாஸமாலா ஸம்ஸ்க்ருத மொழியில் அமைந்துள்ள ஓர் நூலாகும். சரி/தவறு.


4) சிறு குறிப்பு வரைக.                 ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்.
ஒவொரு கேள்விகளுக்கும் 10 வரிகளுக்கு மிகைப்படாமல் எழுதவும். அதிக வரிகள் கொண்ட விடைத்தாள்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்படும்.
1. அனந்தாழ்வான் திருவேங்கடமுடையானுக்கு மாமனாராகக் கொள்ளப்படுகிறார். ஏன்? அதைத் தற்போது நினைவில் கொள்ளும் வகையில் திருமலையில் என்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது?
2. “ஸ்தபகம்” என்றால் என்ன பொருள்? அனந்தாழ்வானின் பண்புகள், கைங்கர்யங்கள் ஆகிய வற்றிலிருந்து சிலவற்றை 6ஆம் ஸ்தபகத்தில் இருந்து எழுதவும்.
3. திருமலை நம்பிகள் இராமானுசருக்கு ஸ்ரீராமாயண காலக்ஷேபம் ஸாதித்த வைபவத்தை எழுதவும்.
4. கோவிந்தராஜனும், திருமலையப்பனும் ஒருவரே என்று எவ்வாறு நிரூபணம்செய்யப்பட்டுள்ளது?
5. பாரபத்தியக்காரரின் பணிகள் யாவை?
6. திருவேங்கடமலையில் கோயில் கொண்டிருப்பவன் சிவன் என்ற வாதத்தை இராமானுசர் எவ்வாறு முறியடித்தார்?
7. திருவேங்கடமலையில் கோயில் கொண்டிருப்பவன் கந்தன் என்ற வாதத்தை இராமானுசர் எவ்வாறு முறியடித்தார்?
8. திருவேங்கடமுடையானுக்கு திருமண்காப்பு அணிவித்திடும் வைபவத்தை விவரித்திடுக.
9. உத்ஸவ, கௌதுக மூர்த்திகளை ஏன் இராமானுசர் மாற்றியமைத்தார்?
10. ஆசார்ய புருஷலக்ஷணம் வேங்கடாசல இதிஹாஸமாலாவில் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது?
***

Periyavachan pillai vaibhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

“ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வைபவம்”
(1.9. 2010 வியாழக்கிழமை ஆவணி ரோஹிணி)
1. ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை திருநக்ஷத்ரோத்ஸவம் ஆவணி ரோஹிணியன்று கொண்டாடப்படவுள்ளது.                                  (1-9-2010 வியாழக்கிழமை)
2. ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கருத்துரை மண்டபத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது பெரியவாச்சான்பிள்ளை ஸந்நிதி.
3. உரைவேந்தர்-வியாக்யானச் சக்ரவர்த்தி என்று வைணவ உலகங்கெங்கும் கொண்டாடும் சிறப்பினைப் பெற்ற வரும், நாலாயிரத்திற்கும் உரை கண்ட பேரறிஞருமாவார் பெரியவாச்சான்பிள்ளை.
4. சோழநாட்டிலுள்ள திருவெள்ளியங்குடிக்கு அணித்தான சங்கநல்லூரில் யாமுன தேசிகருக்கும் நாச்சியாருக்கும் திருமகனாய்த் தோன்றினார்.(வருடம்….)
5. கிருஷ்ணர் என்பது இவரது இயற்பெயர். அபயப்ரதராஜர் என்னும் பெயரும் இவருக்கு வழங்கியது.
6. வைணவ உலகம் ஒருமிடறாக இவருக்குச் சூட்டிய பெயர்கள் பரம காருணிகர், அபார கருணாம்ருத ஸாகரர் என்பன.
7. நம்பிள்ளையின் நெஞ்சுகந்த இவர் சமய மறைகள் (ரகசியங்கள்), திவ்யப்பிரபந்தங்கள், இராமாயணம், ஸ்தோத்ரங்கள் ஆகியவற்றில் விளங்கும் வைணவக் கொள்கை விளக்கத்திற்கு இன்றியமையாதனவாய் இலங்கும் நுண்பொருள்களை பலர்க்கும் விளக்கிக் கூறியவர்.
8. அவற்றிற்கு உரை வகுத்துச் சென்ற பெருமைக்கும் உரியவர்.
9. பெரியபெருமாள், பெரியாழ்வார், பெரியவாச்சான்பிள்ளை, பெரியஜீயர் என்று சொல்லப்பட்ட நால்வரும் அவரவர் பெருமையால் பெரிய என்னும் பட்டம் அடைந்தனர்.
10. இவர்தம் மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவாய் மொழிக்குப் பன்னீராயிரப்படி உரை எழுதிய வாதிகேஸரி சீயராவர்.
11. நம்பிள்ளை, கூரத்தாழ்வானுடைய திருப்பேரரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்குத் திருவாய்மொழி உரையினை ஒருமுறை அருளிச்செய்தார்.
12. அவர் ஒவ்வொரு நாளும் தாம் கேட்ட வற்றை இரவில் எழுதி வந்தார்.
13. நம்பிள்ளையின் விளக்கவுரை முடிந்தபின் தாம் எழுதி வந்த உரையினை எடுத்துச் சென்று அவரிடம் காட்டினார்.
14. அவர் அது மகாபாரதத்தின் அளவில் பெரியதாக இருத்தலைக் கண்டார்.
15. நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை நோக்கி, உடையவர் காலத்தில் பிள்ளான் திருவாய்மொழிக்கு விஷ்ணுபுராணத்தின் தொகையளவில் ஓர் உரை செய்ய அவர் இசைவினைப் பெறுவதற்குச் செய்த முயற்சிக்கு அளவில்லை.
16. அவ்வாறிருக்க நம்முடைய காலத்தில், “நம்மையுங் கேளாமல் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரே, நீர் இவ்வாறு இலட்சத்து இருபத்தையாயிரம் கிரந்தத்தில் (இதையே படியென்றும் அழைப்பர். படியென்பது மெய்யெழுத்து நீங்கலாக 32 எழுத்துக்கள் கொண்ட தொகுதியாகும். தற்போது நாம் பக்கம் என்ற அளவைக் குறிப்பதுபோல அந்தக்காலத்தில் இந்த நூல் இவ்வளவு படி கொண்டது என்று குறிப்பிடுவர். அதனால் தான் திருவாய்மொழிக்கான உரைகள் ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி இருபத்துநாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்று குறிப்பிடப்படுகின்றன.) பரக்க உரை எழுதினால் அஃது ஆசிரிய மாணாக்க முறைமையினைக் கெடுத்துவிடும்” என்று கூறி அதன்மேல் நீரைத் தெளித்துக் கரையானுக்குக் கொடுத்தார்.
17. பின்னர் தம் விருப்பத்திற்குகந்த மாணாக்கராய்த் தம்மிடம் அனைத்து நூல்களையும் அலகு அலகாகக் கற்ற பெரிய வாச்சான்பிள்ளையைப் பார்த்து, நீர் திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதும் என்று சொல்ல, பெரியவாச்சான்பிள்ளை தமது இருபத்து நாலாயிரப்படி உரையினை எழுதினார்.
18. பின்னர் மற்ற திவ்யப்பிரபந்தங்க ளுக்கும் காலப் போக்கில் உரை எழுதினார். இவரது தொண்டினை, “பெரியவாச் சான்பிள்ளை பின்புள்ள வைக்கும் தெரிய வியாக்கியைகள் செய்வால்-அரிய அருளிச் செயற்பொருளை ஆரியர்கட் கிப்போது அருளிச் செயலாய்த் தறிந்து” (உபதேசரத்தினமாலை-46) என்று நன்றியோடு போற்றிக் கூறுகிறார் ஸ்ரீமணவாள மாமுனிகள்.
19. பெரியதிருமொழி 7-10 பதிகம் திருக்கண்ணமங்கை திவ்யதேசத்திற்கு உரியதாகும். அந்தப் பதிகத்தில் ஈற்றுப் பாசுரத்தில் (9-10-10) திருமங்கையாழ்வார் “மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண, நிந்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே ” என்று அருளிச் செய்துள்ளார். ஆவணி ரோஹிணியில் அவதரித்தவர் பெரியவாச்சான்பிள்ளை அதுவே கண்ணனின் திருநக்ஷத்ரமுமாகும். நம்பிள்ளை அவதரித்தது கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில். திருமங்கையாழ்வார் திருநக்ஷத்ரமும் அதுவேயாகும். ‘வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண’ என்ற விளியினால் திருமங்கையாழ்வார் பக்தவத்ஸலப் பெருமாளை நோக்கி ‘திருமங்கை யாழ்வாராகிய அடியேனுடைய கவிதைகளின் பொருளை நீ அறிந்துகொள்ள வேணுமானால் நீ எனக்கு சிஷ்யனாக வேணும்’ என்று கூறியதால் கண்ணனே பெரியவாச்சான்பிள்ளையாக அவதரித்தார் என்றும், திருமங்கையாழ்வாரே திருக்கலிகன்றி தாஸரான நம்பிள்ளையாக அவதரித்தார் என்றும் அந்த நம்பிள்ளையிடம் பெரியவாச்சான்பிள்ளை மாணாக்காராக இருந்து அர்த்த விசேஷங்களைக் கேட்டறிந்தார் என்றும் பெரியவாச்சான்பிள்ளையின் அவதார ரஹஸ்யம் பேசப்படுகிறது.                         ***

Periyavachanpillai Vaibhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

“ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வைபவம்”
(1.9. 2010 வியாழக்கிழமை ஆவணி ரோஹிணி)
1. ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை திருநக்ஷத்ரோத்ஸவம் ஆவணி ரோஹிணியன்று கொண்டாடப்படவுள்ளது.                                  (1-9-2010 வியாழக்கிழமை)
2. ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கருத்துரை மண்டபத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது பெரியவாச்சான்பிள்ளை ஸந்நிதி.
3. உரைவேந்தர்-வியாக்யானச் சக்ரவர்த்தி என்று வைணவ உலகங்கெங்கும் கொண்டாடும் சிறப்பினைப் பெற்ற வரும், நாலாயிரத்திற்கும் உரை கண்ட பேரறிஞருமாவார் பெரியவாச்சான்பிள்ளை.
4. சோழநாட்டிலுள்ள திருவெள்ளியங்குடிக்கு அணித்தான சங்கநல்லூரில் யாமுன தேசிகருக்கும் நாச்சியாருக்கும் திருமகனாய்த் தோன்றினார்.(வருடம்….)
5. கிருஷ்ணர் என்பது இவரது இயற்பெயர். அபயப்ரதராஜர் என்னும் பெயரும் இவருக்கு வழங்கியது.
6. வைணவ உலகம் ஒருமிடறாக இவருக்குச் சூட்டிய பெயர்கள் பரம காருணிகர், அபார கருணாம்ருத ஸாகரர் என்பன.
7. நம்பிள்ளையின் நெஞ்சுகந்த இவர் சமய மறைகள் (ரகசியங்கள்), திவ்யப்பிரபந்தங்கள், இராமாயணம், ஸ்தோத்ரங்கள் ஆகியவற்றில் விளங்கும் வைணவக் கொள்கை விளக்கத்திற்கு இன்றியமையாதனவாய் இலங்கும் நுண்பொருள்களை பலர்க்கும் விளக்கிக் கூறியவர்.
8. அவற்றிற்கு உரை வகுத்துச் சென்ற பெருமைக்கும் உரியவர்.
9. பெரியபெருமாள், பெரியாழ்வார், பெரியவாச்சான்பிள்ளை, பெரியஜீயர் என்று சொல்லப்பட்ட நால்வரும் அவரவர் பெருமையால் பெரிய என்னும் பட்டம் அடைந்தனர்.
10. இவர்தம் மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவாய் மொழிக்குப் பன்னீராயிரப்படி உரை எழுதிய வாதிகேஸரி சீயராவர்.
11. நம்பிள்ளை, கூரத்தாழ்வானுடைய திருப்பேரரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்குத் திருவாய்மொழி உரையினை ஒருமுறை அருளிச்செய்தார்.
12. அவர் ஒவ்வொரு நாளும் தாம் கேட்ட வற்றை இரவில் எழுதி வந்தார்.
13. நம்பிள்ளையின் விளக்கவுரை முடிந்தபின் தாம் எழுதி வந்த உரையினை எடுத்துச் சென்று அவரிடம் காட்டினார்.
14. அவர் அது மகாபாரதத்தின் அளவில் பெரியதாக இருத்தலைக் கண்டார்.
15. நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை நோக்கி, உடையவர் காலத்தில் பிள்ளான் திருவாய்மொழிக்கு விஷ்ணுபுராணத்தின் தொகையளவில் ஓர் உரை செய்ய அவர் இசைவினைப் பெறுவதற்குச் செய்த முயற்சிக்கு அளவில்லை.
16. அவ்வாறிருக்க நம்முடைய காலத்தில், “நம்மையுங் கேளாமல் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரே, நீர் இவ்வாறு இலட்சத்து இருபத்தையாயிரம் கிரந்தத்தில் (இதையே படியென்றும் அழைப்பர். படியென்பது மெய்யெழுத்து நீங்கலாக 32 எழுத்துக்கள் கொண்ட தொகுதியாகும். தற்போது நாம் பக்கம் என்ற அளவைக் குறிப்பதுபோல அந்தக்காலத்தில் இந்த நூல் இவ்வளவு படி கொண்டது என்று குறிப்பிடுவர். அதனால் தான் திருவாய்மொழிக்கான உரைகள் ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி இருபத்துநாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்று குறிப்பிடப்படுகின்றன.) பரக்க உரை எழுதினால் அஃது ஆசிரிய மாணாக்க முறைமையினைக் கெடுத்துவிடும்” என்று கூறி அதன்மேல் நீரைத் தெளித்துக் கரையானுக்குக் கொடுத்தார்.
17. பின்னர் தம் விருப்பத்திற்குகந்த மாணாக்கராய்த் தம்மிடம் அனைத்து நூல்களையும் அலகு அலகாகக் கற்ற பெரிய வாச்சான்பிள்ளையைப் பார்த்து, நீர் திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதும் என்று சொல்ல, பெரியவாச்சான்பிள்ளை தமது இருபத்து நாலாயிரப்படி உரையினை எழுதினார்.
18. பின்னர் மற்ற திவ்யப்பிரபந்தங்க ளுக்கும் காலப் போக்கில் உரை எழுதினார். இவரது தொண்டினை, “பெரியவாச் சான்பிள்ளை பின்புள்ள வைக்கும் தெரிய வியாக்கியைகள் செய்வால்-அரிய அருளிச் செயற்பொருளை ஆரியர்கட் கிப்போது அருளிச் செயலாய்த் தறிந்து” (உபதேசரத்தினமாலை-46) என்று நன்றியோடு போற்றிக் கூறுகிறார் ஸ்ரீமணவாள மாமுனிகள்.
19. பெரியதிருமொழி 7-10 பதிகம் திருக்கண்ணமங்கை திவ்யதேசத்திற்கு உரியதாகும். அந்தப் பதிகத்தில் ஈற்றுப் பாசுரத்தில் (9-10-10) திருமங்கையாழ்வார் “மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண, நிந்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே ” என்று அருளிச் செய்துள்ளார். ஆவணி ரோஹிணியில் அவதரித்தவர் பெரியவாச்சான்பிள்ளை அதுவே கண்ணனின் திருநக்ஷத்ரமுமாகும். நம்பிள்ளை அவதரித்தது கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில். திருமங்கையாழ்வார் திருநக்ஷத்ரமும் அதுவேயாகும். ‘வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண’ என்ற விளியினால் திருமங்கையாழ்வார் பக்தவத்ஸலப் பெருமாளை நோக்கி ‘திருமங்கை யாழ்வாராகிய அடியேனுடைய கவிதைகளின் பொருளை நீ அறிந்துகொள்ள வேணுமானால் நீ எனக்கு சிஷ்யனாக வேணும்’ என்று கூறியதால் கண்ணனே பெரியவாச்சான்பிள்ளையாக அவதரித்தார் என்றும், திருமங்கையாழ்வாரே திருக்கலிகன்றி தாஸரான நம்பிள்ளையாக அவதரித்தார் என்றும் அந்த நம்பிள்ளையிடம் பெரியவாச்சான்பிள்ளை மாணாக்காராக இருந்து அர்த்த விசேஷங்களைக் கேட்டறிந்தார் என்றும் பெரியவாச்சான்பிள்ளையின் அவதார ரஹஸ்யம் பேசப்படுகிறது.                         ***

 

NaathamunigaL Vaibhavam

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீமந்நாதமுனிகள் வைபவம்

1. ஸ்ரீமந்நாதமுனிகள் ஆனி அனுஷத்தில் அவதரித்தருளினார். இந்தத் திருக்கோயிலில் அவருடைய ஆண்டு திருநக்ஷத்ரோத்ஸவம் 24-6-2010 நடைபெற உள்ளது. 2. திருமகள் கேள்வனிடமிருந்து தொடங்கும் வைணவ ஆசார்ய பரம்பரையில் நடுநாயகமாய்த் திகழ்பவர் ஸ்ரீமந்நாதமுனிகள் ஆவார். 3. ஸ்ரீமந்நாதமுனிகள் ஒரு சிலரே கைகொள்ளக்கூடிய பக்தி யோகத்தைக் காட்டிலும், அனைவரும் மேற் கொள்ளக்கூடிய சரணாகதி மார்க்கமே சிறந்தது; பக்தி யோகத்தாலே கண்ணனை அனுபவிப்பதைக் காட்டிலும் திருவாய்மொழி அனுஸந்தானத்தாலே குணாநுபவம் செய்வது இனிது என்று அனைவரும் ஈடுபடக்கூடிய புதிய நெறியைக் காட்டிக் கொடுத்தார். 4. மேலும் சரணாகதி மார்க்கத்தை மக்களிடையே பரப்பி, ஆண், பெண் என்ற வேறுபாடும், பிறப்பின் அடிப்படையில் உள்ள வேறுபாடுகள் ஏதுமில்லாமல் அனைவரும் ஆழ்வார் பாடல்களைப் பாடி, அர்ச்சாவதார எம்பெருமானிடம் சரணாகதி செய்து உய்வு பெறலாம் என்ற புதிய எளிய வழியை வகுத்ததாலேயே உலகில் ஸ்ரீவைஷ்ணவம் எங்கும் பரவியது. இதற்கு வித்திட்டவர் ஸ்ரீமந்நாதமுனிகள். 5. கவிச்சக்கரவர்த்தியான கம்பர் சோழப் பேரரசர்களால் ஆதரிக்கப்படாத நிலையில், நாதமுனிகள் தம் தலைமையில் கம்ப ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார். 6. நாதமுனிகள் திருவரங்கத்தில் ஒரு பங்குனி உத்தரத்திருநாளில் தமது தலைமையில் கம்பராமாயண அரங் கேற்றத்தை நடத்தி வைத்து, கம்பநாடாருக்கு கவிச்சக்கரவர்த்தி, கம்பநாட்டாழ்வார் என்று புகழாரங்களைச் சூட்டினார். 7. கி.பி. 9ஆம் நூற்றாண்டில் அவதரித்த நாதமுனிகள் தொடங்கி கி.பி. 14ஆவது நூற்றாண்டில் அவதரித்த மணவாளமாமுனிகள் ஈறாக, பலபல ஆசார்யர்கள் அவதரித்து ஸ்ரீவைஷ்ணவத் தரிசனத்தை நிலைநாட்டிப் போந்தனர். 8. இத்தகைய பெருமை நம்நாட்டில் நிலவிவரும் வேறு எந்த மதத்திற்கும் அமையப்பெறவில்லை. 9. ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனை முதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநநர் என்னும் யானைமுகமுடைய நித்யஸூரியின் அம்சமாய், சோழ தேசத்தில் வீரநாராயண புரத்தில் (காட்டுமன்னார்கோயிலில்) (கி.பி. 823) சோபக்ருத்-வருடம், ஆனி மாதம், 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அனுஷ நக்ஷத்ரத்தில் ஈச்வர பட்டாழ்வாருக்குக் குமாரராக க்ஷடமர்ஷண கோத்ரத்திலே (சொட்டைக் குலத்திலே) அவதரித்தார். 10. இவருக்குத் திருத்தகப்பனார் இட்ட திருநாமம் ஸ்ரீரங்கநாதன் என்பது. 11. இவர் யோகாப்யாஸம் கைவந்தவராகையாலே ஸ்ரீரங்கநாதமுனிகள் என்றும், சுருக்கமாக நாதமுனிகள் என்றும் வழங்கப்பட்டார். 12. காட்டுமன்னார் கோயில் மன்னனாருக்குச் சில ஆண்டுகள் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும்போது, ஸேவார்த்திகளாக வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் “ஆராவமுதே” என்கிற திருவாய்மொழியை (5-8 பதிகம்)மன்னனார் திருமுன்பே அனுஸந்தித்தருள, அதைக் கேட்ட நாதமுனிகள் மிகவுகந்து, இத்திருவாய்மொழியின் திருநாமப்பாட்டிலே (சாற்றுப்பாட்டிலே) “ஓராயிரத்துள் இப்பதும்” என்று அருளிச் செய்யப்பட்ட ஆயிரம் பாட்டும் உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். இப்பத்துப் பாட்டுத் தவிர மற்றவை எமக்குத் தெரியாது என்று அவர்கள் பதிலளித்தனர். 13. உடனே நாதமுனிகள் குருகூர்ச்சடகோபன் என்று ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட திருக்குருக்கூருக்குச் சென்று ஸ்ரீமதுரகவிகளுடைய பரம்பரையில் வந்த ஸ்ரீபராங்குசதாஸரை அணுகி, திருவாய்மொழியின் 1000 பாட்டுகளை தமக்குப் போதித்து அருளும்படி வேண்டி நின்றார். 14. திருவாய்மொழியும் மற்றைய ஆழ்வார்கள் பாடிய பாடல்களும் நீண்ட காõலத்துக்கு முன்பே மறைந்து விட்டன. எங்களுடைய பரமாசார்யரான ஸ்ரீமதுரகவிகள் ஆழ்வார் விஷயமான கண்ணிநுண்சிறுத்தாம்பு என்கிற திவ்யப்பிரபந்தத்தை எங்களிடம் அளித்து இதை ஒருமுகமாக ஆழ்வார் திருமுன்பே இருந்து ஆழ்வார் திருவடிகளை தியானித்துக் கொண்டு நியமத்துடன் பன்னீராயிரம் உரு அனுஸந்தித்தால் ஆழ்வார் அவர் முன்பே தோன்றிடுவார் என்று அருளிச் செய்தார் என்று நாதமுனிகளிடம் கூறினார். 15. நாதமுனிகளும் கண்ணிநுண்சிறுத்தாம்பை அவரிடம் பிரார்த்தித்து உபதேசம் பெற்று ஆழ்வார் திருமுன்பே அதை நியமத்தோடு பன்னீராயிரம் உரு அனுஸந்தித்தார். 16. ஆழ்வாரும் அவர் நெஞ்சிலே தோன்றி உமக்கு என்னவேணும்? என்று கேட்க, திருவாய்மொழி முதலான திவ்யப்பிரபந்தங்களை அடியேனுக்கு இரங்கியருளவேணும் என்று நாதமுனிகள் விண்ணப்பம் செய்ய, ஆழ்வாரும் அவருக்கு மயர்வற மதிநலமருளி, ரஹஸ்யத்ரயத்தையும், திருவாய்மொழி முதலான திவ்யப் பிரபந்தங்களையும், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோகரஹஸ்யத்தையயும் அநுக்ரஹித்தருளினார். 17. ஸ்ரீமந்நாதமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளி, பண்ணிசையால் பரமனைப்பாடி உகப்பித்தார். 18. தன்னுடைய மருமகன்களான கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான் ஆகிய இருவருக்கும் திவ்யப்பிரபந்த ங்களை இசையுடன் பயிற்றுவித்தார். அவர்கள் பரம்பரையில் வந்தவர்களே அரையர்களாவர். 19. ஸ்ரீமந்நாதமுனிகளுடைய சிஷ்யர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் உய்யக்கொண்டாரும், குருகைகாவலப்பனும் ஆவர். 20. தாது வருஷம் (கி.பி. 917) மாசி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியன்று இவர் பரமபதித்தார். சுமார் தொண்ணுõற்று மூன்று (93) திருநக்ஷத்ரங்கள் எழுந்தருளியிருந்தார். 21. இவர் அருளிச் செய்த க்ரந்தம், ந்யாய, தத்வம் என்பது. இதிலிருந்து சில பகுதிகள் எம்பெருமானார், ச்ருத ப்ரகாசிகா பட்டர், ஸ்ரீவேதாந்த தேசிகர் முதலான ஆசார்யர்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்த க்ரந்தம் தற்போது கிடைக்க வில்லை. 22. யோகரஹஸ்யம், புருஷநிர்ணயம் என்னும் இரு க்ரந்தங்களையும் இவர் செய்ததாகப் பெரியதிருமுடியடைவில் உள்ளது. இவையும் தற்போது அச்சுவடிவில் இல்லை. ***

Periyaazhvaar Vaibhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

பெரியாழ்வார் வைபவம்
1. ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பெரியாழ்வார். இவர் பெரிய திருவடி என்று அழைக்கப் படும் கருத் மானின் அம்சமாகக் கொள்ளப்படுகிறார். இவருடைய திருநக்ஷத்ர உத்ஸவம் 22-6-2010 செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது.
2.தென்பாண்டி நாடு வைணவ சமயத்திற்குப் பெரும் இடம் தந்துள்ளது. முதலாழ்வார்கள் மூவரின் எழுச்சிக்குப் பின் 9ஆம் நூற்றாண்டில் பெரியாழ்வார் தோன்றினார்.
3. விஷ்ணுசித்தன் என்பது இவருடைய இயற்பெயராகும். பட்டர்பிரான் என்பது செய்த தொழிலால் வந்த பெயர். வேயர் குலம் என்று அழைக்கப்படும் பூர்வசிகை குடியில் (சோழியர் குலத்தில்) பிறந்தவராவார்.
4. திருப்பல்லாண்டுடன் இணைத்துப் பெரியாழ்வார் திருமொழியாக 473 பாசுரங்களைப் பாடியுள்ளார். இவை முதலாயிரத்தில் இடம் பெறுகின்றன. மொத்தமாக 19 திவ்யதேசங்களைப் பாடியுள்ளார்.
5. தொல்புகழான் பட்டர்பிரான் புதுவைமன்னன் (2.2.11) 2) புதுவைக்கோன் (23,13), 3)பட்டர்பிரான் (2,4,10) 4) பட்டர்பிரான் விட்டு சித்தன் (9,11,5) 4) மறைவாணன் பட்டர்பிரான் (4,1,10) 5)வேயர் தங்குலத்து உதித்த விட்டு சித்தன் (5,4,11) என்று தன்னைக் குறிப்பிடுகிறார் பெரியாழ்வார் திருமொழியில்.
6. ஆண்டாளும் ‘வேயர்புகழ் வில்லிபுத்தூர்கோன் கோதை’ (நாச்சியார் திருமொழி 1-10) என்று கூறிக்கொள்கிறார்.
7. இவ்வாறு வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கும் பூமிப்பிராட்டியின் அம்சமாக ஆண்டாள் அவரது நந்தவனத்தில், துளசிச்செடியின் கீழ் கிடைத்தாள் என குரு பரம்பரையும், திவ்ய சூரி சரிதமும் குறிப்பிடுகின்றன.
8. ஸ்ரீவல்லபதேவன் என்னும் மன்னன் ஒரு நாள் தனது மந்திரியாகிய செல்வநம்பியை அழைத்து மறுமைக்கு செய்ய வேண்டியது என்ன என்று வினாவினான். மந்திரியோ எல்லாச் சமயத்தினரையும் அழைத்து வேத சம்பந்தமான சித்தாந்தம் எதுவென அறிதலே சாலவும் சிறந்தது என்றான்.
9. மன்னனும் அகமகிழ்ந்து, “பொன்னினிற் கிழியொன்றாங்கே பொள்ளென வுயரத்தூக்கி, யின்னதிங்கெவர் வாத்தித்தினிற்று வீழ்ந்திடினுமந்த மன்னெடுஞ் சமயத்தேவே மறையுறு பொருள தாமே!” என்று கூறி கிழி கட்டினான்.
10. 16 வகை மதத்தவர்களும், பலரும் வந்து வாதிட்டுத் தோற்றனர்.
11. வடபெருங்கோயில் உறைவான் ஆணையால், அங்கு வந்து சேர்ந்தார் விஷ்ணுசித்தர்.
12. அங்கு அவர் பரத்துவ நிர்ணயத்தை நிலைநாட்டிப் பொற்கிழி பெற்றார்.
13. மகிழ்ந்த மன்னன் அவரை யானையிலேற்றி வீதியுலாச் செய்தான். இறைவனே ஸ்ரீதேவி-பூதேவி ஸமேதரராய் தோன்றினார்.
14. அவனுக்குக் கண்படுமோவென எண்ணினார் விஷ்ணுசித்தர். யானை மீதிருந்த மணிகளைக் கையிலேந்தி, “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்டோள்” மணிவண்ணனுக்குச் சேவடியில் தனது பாடல்களையும், பரிசையும் ஸமர்ப்பித்தார்.
15. இவரது பாடல்களில்  காணப்படும் பக்திநிலை ஒருதாய் தன் மகனைக் கண்ணுங் கருத்துமாகக் கவனிக்கும் நிலை  தென்படுகிறது.
16. தன்னைக் கண்ணனின் தாய் யசோதை ஆகவும், இறைவனை மகனாகவும், தன் வீட்டினை நந்தகோபன் இல்லமாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகவும் கருதிக் கொண்டு பாடும் தன்மை அவரது பாடல்களில் காணப்படுகின்றன.
16. வைணவ ஆழ்வார்களுள் இறைவனுக்கே பல்லாண்டு கூறிய விஷ்ணுசித்தனின் காலம் ஓரளவு உறுதியாகி உள்ளது. பெரியாழ்வார், “சொன்னவில் கூர்வேற் கோன்நெடுமாறன் தென்கூடற்கோன் தென்னவன் கொண்டாடும் தென்திருமாலிருஞ் சோலையே” (பெரியாழ்வார் திருமொழி 4-2-7) எனப்பாடுகிறார். ஆக கோன்நெடுமாறன் காலத்தவர் பெரியாழ்வார் என்பது உறுதியாகிறது.
17. கோன் நெடுமாறன் என்று அழைக்கப்படும் ஸ்ரீமாறன்ஸ்ரீவல்லபன் 9ஆம் நூற்றாண்டில் அரசாண்ட பாண்டிய மன்னனாவான். பெரியாழ்வார் 85 ஆண்டுகள் வாழ்ந்தவராதலால் இவர் காலம் கி.பி.800 முதல் 885 வரையாக இருக்கலாம் எனக் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
18. ஆண்டாள் அழகியமணவாளனை மணந்து இருவரும் மறைந்த பிறகு, பெரியாழ்வாரே ஆண்டாளையும், அழகிய மணவாளனையும் பெரிய திருவடியையும் எழுந்தருளப் பண்ணி தம் ஆஸ்தியெல்லாம் அக்கோயில் பணியிலே அர்ப்பணித்து விட்டார். அவரே இக்கோயிலுக்கு தர்மம் செய்த முதல் தர்மகர்த்தா என்றும் கூறப்படுகிறது.
19. ஆழ்வார்கள் படைத்த இலக்கியங்களுள் பெரியாழ்வாரின் பங்களிப்பாகச் சிறப்பித்துச் சொல்லத்தக்க இலக்கிய வகை ஒன்று உண்டு.
20. அதுவே பிள்ளைத்தமிழ். இது தவிர திருப்பல்லாண்டு, பாதாதிகேசம், தாலாட்டு, திருநாமப்பாட்டு முதலான இலக்கிய வகைகளையும் பெரியாழ்வார் திருமொழியிற் காணலாம்.
21. இவை ஒவ்வொன்றும் தனித்தனிப் பதிகங்களாக அமைந்தவை.
22.கண்ணன் மீண்டுவரும் கோலம் கண்டு கன்னியர் காமுறுவதாக அமைந்த திருமொழி (3-4) உலா என்னும் இலக்கிய வகைக்கான அடிக்கூறுகளைக் கொண்டுள்ளது.
23. பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை இருவகையினுள் அடக்கலாம். கண்ணனின் பிள்ளைப்பருவம் பற்றியன ஒருவகை, இளமைப்பருவம் பற்றியன மற்றொருவகை.
24. பிறப்பு, திருமேனியழகு, தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி, தளர்நடை, அண்மை வருகை, புறம்புல்கல், அப்பூச்சிகாட்டல், அம்மம் உண்ணல், காது குத்தல், நீராட்டல், குழல்வாரல், பூச்சூட்டல், காப்பிடல் என்பன (பெரியாழ் வார் திருமொழி முதற்பத்தும் இரண்டாம் பத்தின் முதல் எட்டுத்திருமொழிகளும்) பெரியாழ்வார் கொண்ட பிள்ளைப் பருவங்கள் ஆகும்.
25. கண்ணனைக் குறித்து ஆய்ச்சியர் முறையிடல், அன்னை அம்மம் தர மறுத்தல், கன்றின்பின் போகவிட்டு இரங்கல், கன்றுகளோடு வரக்கண்டு மகிழ்தல் , கன்னியர் காமுறல், குன்று குடையாய் எடுத்தல், குழல் ஊதல் என்பன (2-9 முதல் 3-6) முடியவுள்ள திருமொழிகள்) கண்ணனுடைய இளமைப்பருவ நிகழ்ச்சிகள் ஆகும்.
26. பெரியாழ்வார் தம்முடைய இறுதிநாட்களில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்தார். திருமாலிருஞ்சோலையிலேயே பரமபதித்தார். அவருடைய திருவரசை அந்தத் திவ்யதேசத்தில் இன்றும் நாம் ஸேவிக்கலாம்.

Bhattar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

பட்டர் வைபவம்
1. ஸ்ரீபராசரபட்டர் என்னும் ஆசார்யரது திருநக்ஷத்ர உத்ஸவம் வைகாசி அனுஷ நக்ஷத்ரத்தில் கொண்டாடப் படுகிறது.(28-5-2010)
2. ஆசார்ய பரம்பரையில் இராமாநுசருக்குப் பிறகு எம்பாரும், அவருக்குப்பிறகு ஆழ்வானின் புத்திரரானான ஸ்ரீபராசரபட்டரும் அலங்கரித்து வந்தனர்.
3. ஸ்ரீபராசரபட்டர் விபவத்தில் இராமாவதாரத்திலும், அர்ச்சையில் பெரியபெருமாளிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
4. கூரத்தாழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் நம்பெருமாளது அரவணை ப்ரசாதத்தின் ப்ரபாவத்தாலே அவதரித்தனர்.
5. கூரத்தாழ்வானுக்கு இரட்டைப் பிள்ளைகள் திருவவதரித்த தினம்-சுபகிருத் வருடம் வைகாசி மாதத்தில் பௌர்ணமி திதியும் அனுஷ நக்ஷத்திரமும் கூடிய புதன்கிழமையாகும்.
6. நம்மாழ்வாரது திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் அர்த்த விசேஷங்களை உள்ளபடி உணர்ந்து வெளியிட வல்லவரானவர் இவர் என்பதற்கு அறிகுறியாக, இவரது திருவவதாரம் அந்த ஆழ்வாருடைய திருஅவதார தினமாகிய வைகாசி விசாகத்திற்கு அடுத்ததாக அமைந்தது என்னலாம்.
7. ஸ்ரீரங்கநாதன் இளங்குழந்தைப் பருவத்திலேயே பட்டரைத் தமது புத்திரனாக அங்கீகரித்துத் தம்முடைய சந்நிதியிலே திருமணத்தூணின் அருகே தொட்டிலில் இடுவித்து ஸ்ரீரங்கநாச்சியாரும் தாமுமாகச் சீராட்டி வளர்க்க, அங்ஙனம் வளர்கிற அக்குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள் அமுது செய்வதற்குத் திருமுன்பே கொணர்ந்து சமர்ப்பிக்கப்படுகிற   அடிசிலைக் கைகளால் அள்ளி அளைந்து துழாவ, பெருமாள் அதுகண்டு உகந்தருளி “அமிழ்தினுமாற்றவினிதே தம்மக்கள், சிறுø கயளாவியகூழ்” என்றபடி அந்த இன்னடிசிலை மிகவும் பிரியமானதாக அங்கீகரித்து அருள்வாராம்.
8. இப்படி ஸ்ரீரங்கநாதன் தம்மை அபிமானித்துப் புத்திரஸ்வீகாரஞ் செய்தருளப் பெற்ற பாக்கியம் பெற்றமையால், பட்டர் “ஸ்ரீரங்கநாதபுத்ரர்” எனப்படுவார்; வானிட்ட கீர்த்திவளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த தேனிட்டதார் நம்பெருமாள் குமாரர்…. பட்டர் (திருவரங்கக் கலம்பகம் – காப்புச்செய்யுள்) என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் கூறியுள்ளார்.
9. பட்டர் ஐந்தாவது பிராயத்தில் ஒருநாள் திருவரங்கம் பெரிய கோயில் திருவீதியிலே புழுதி அளைந்து விளையாடுகிற போது, அநேக சாஸ்திரங்களில் வல்லவனான ஒரு வித்வான் ‘ஸர்வஜ்ஞபட்ட’னென்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டு அங்ஙனமே தன் பெயரைக் குறிப்பிட்டு ‘ஸர்வஜ்ஞபட்டர்’ வந்தார் என்பது முதலாகத் தன் பரிஜநங்களைக் கொண்டு விருது சொல்லி எக்காளம் ஊதுவித்துக் கொண்டு அதிக ஆடம்பரத்துடனே சிவிகை மீது வர, அதுகண்ட பட்டர், உடையவர் கூரத்தாழ்வான், முதலியாண்டான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார் முதலான பலபெரியோர்கள் எழுந்தருளியிருக்கிற இவ்விடத்திலே ஸர்வஜ்ஞ பட்டனென்று பெரும் பெயர் சொல்லி விருதூதிப் பல்லக்கேறி வருகிறான் இவன் யாரடா? என்று எண்ணித் தாம் அவன் எதிரில் சென்று கையிற் புழுதியை அள்ளியெடுத்து அவனைநோக்கி நீ ஸர்வஜ்ஞனன்றோ? இது எவ்வளவு? சொல், பார்ப்போம் என்று வினவினார்.
10. அவன் அதனைக் குறித்து அதிதீர்க்காலோசனை செய்தும் அது இத்தனையென்று தெரியாமையால், ஒன்றும் விடை சொல்ல மட்டாதே வெட்கத்தால் தலை கவிழ்ந்து மௌனத்தோடு நின்றிட்டான். பட்டர் அவனைப் பார்த்து இது ஒரு கைப்பிடிமண் என்று சொல்லி நீ கொண்ட பெயரைப் பொருளுள்ளதாக நிலை நிறுத்தி ஸர்வஜ்ஞன் என்ற விருதை மெய்ப்பித்துக் கொண்டு போக மாட்டாதே அஜ்ஞனாய் விட்டாயே! இனி உன்னுடைய விருதும் மற்றைய சின்னங்களும் எதற்காக? என்று ஏசி எக்காளம் முதலியவற்றைப் பறியுங்கள் என்று தம்முடன் விளையாடும் சிறுவர்களுக்குக் கூறினார்.
11. ஆழ்வான் தாமே பட்டர்க்கு வேத சாஸ்த்ரங்களைக் கற்பிக்க, எம்பார் பஞ்சஸம்ஸ்கார பூர்வமாக மந்திரங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் உபதேசிக்க, இவ்விருவரும் திருவாய்மொழி முதலிய திவ்வியப்பிரபந்தங்களையும் அவற்றின் வியாக்கியானங்களையும் சொல்லியருள, பின்பு பட்டர் ஆழ்வானிடமிருந்து ஸ்ரீபாஷ்யத்தை உபதேச க்ரமமாகப் பெற்று உபயவேதாந்தப் ப்ரவர்த்தகராய் விளங்கினார்.
12. இங்ஙனமிருக்கையில் ஒரு நாள் ஸ்ரீபாஷ்யகாரர் பட்டருடைய வேதாந்த உபந்யாஸ வைபவத்தைக் கேட்டு உகந்து அவர்க்கு வேதாந்தாசார்யர் என்ற சிறப்புப் பெயரைக் கொடுத்தருளினார்.
13. பிறகு எம்பெருமானார் திருமேனி தளர்ந்தவராய்ப் பரம பதமடையத் திருவுள்ளமாகி அடியார்கள் அனைவரையும் அழைத்துப் பட்டரைக் காட்டிக் கொடுத்து இவரை நம்மைப் போலவே பார்த்துக் கொள்ளுங்கள் என்று நியமித்துப் பட்டரைப் பெரிய பெருமாள் ஸந்நிதிக்கு அழைத்துக் கொண்டு போய்த் தமக்கு முன்னாக அவருக்குத் தீர்த்தப்பிரஸாதங்கள் கொடுப்பித்து அவரை நோக்கி கர்நாடகத்திலே வேதாந்தியென்று ஒரு பெரிய வித்வான் இருக்கிறதாகக் கேள்விப் படுகிறோம்; நீர் அங்கேபோய் அவரைத் திருத்தி நம் தரிசனப் பிரவர்த்த கனாக்கும் என்று அருளிச் செய்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
14. இராமாநுசர் நியமனத்தை சிரமேற்கொண்டு பராசர பட்டர் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் கொண்டு மாதவ சூரி எனப்படும் வேதாந்தி யைத் திருத்திப் பணிகொண்டு நஞ்சீயர் என்ற திருநாமம் சாற்றியருளினார். அன்று முதலாக நஞ்சீயர் பட்டரைப் பிரியாமல் அடிமைசெய்து கொண்டு அவர் திருவுள்ளத்துக்கு மேன்மேலும் உகப்பை விளைவிக்கப் பட்டரும் அவர்க்குச் சம்பிரதாய ரகசியார்த்தங்களை எல்லாம் அருளிச் செய்து திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் விசேஷார்த்தங்களையும் விவரிக்க நஞ்சீயர் அவற்றை ஆதரத்துடன் கேட்டுத் தம் நன்னெஞ்சிற் பூரித்துக்கொண்டு அவரருகிலேயிருந்தார்.
15.அக்காலத்திலே திருவரங்கம் பெரியகோயிலின் ஏழு திருச் சுற்றுக்களில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரமன் திருவீதித் திருமதிள் மிகவும் பாழ்பட்டு சரிந்துவிழ, அதனைச் சீர்படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீரசுந்தர பிரஹ்மராயன் எனும் சிற்றரசன் அந்தமதிளின் நேர்மைக்கு மாறாகப் பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது கண்டு முன்போலே மதிளை ஒதுக்கிக் கட்டாமல் அவர் திருமாளிகையை இடித்து நேரொழுங்காகத் திருமதிள்கட்டுவிக்க முயன்றான். அதனை அறிந்த பட்டர், அச்சிற்றரசனை நோக்கி, நீ கட்டுவிக்கிற திருமதிளோ பெருமாளுக்கு அரணாகும்; மகாபாகவதரான பிள்ளைப்பிள்ளையாழ்வான் போல்வோர் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து நம்பெருமாளுக்கு பாதுகாப்பாக அமைந்திருப்பதே உண்மையான அரணாகும்.
16. பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையைவிட்டு ஒதுங்கத் திருமதிள் கட்டுவிப்பதே உரிய செயலாகும் என்று நல்லுரை கூறினர். வீரசுந்தரன், ஆசாரியபுத்திரரென்ற அச்ச மின்றிப் பட்டரது வார்த்தையை மதியாமல், ஆழ்வானுக்கு அந்தரங்க சிஷ்யரென்ற பெருமையையும் பாராது பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையை இடித்துத் தள்ளி நேர்படத் திருமதிள் கட்டு வித்தான். இது காரணமாகப் பட்டர்க்கும் அவ்வரசனுக்கும் உண்டான மனத்தாங்கல் நாளடைவிலே மேலிட, வீரசுந்தரன் பட்டரை ஸ்ரீரங்கத்திலிருக்கவொட்டாது மிகவும் உபத்திரவிக்க, பட்டர் யாரிடமும் சொல்லாது கோயிலினின்று புறப்பட்டுத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளலானார். பிறகு சில ஆண்டுகள் கழித்து, வீரசுந்தரன் இறந்தவாறே பட்டர் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்.
17. ஒரு கைசிக துவாதசியன்று பெருமாள் ஸந்நிதியிலே பராசர பட்டர் கைசிக புராணம் வாசித்தருளிய அழகினில் உகந்து, ‘பட்டரே உமக்கு மேல்வீடு தந்தோம்‘ என்று அருளிச் செய்ய, இவரும் ‘மஹா ப்ரசாதம்‘ என்று அங்கீகரித்தருளி பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்தருளின உபகாரத்தைச் சிந்தித்து, ‘நாயன்தே! ஆசன பத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித்தாமரைகளும் அஞ்சேல் என்ற கையும் கவித்தமுடியும் முறுவல் பூரித்த சிவந்த திருமுகமண்டலமும் திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்திலே கண்டிலேனாகில் ஒரு மூலையடியே முறித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன்‘ என்று நம்பெருமாளையும் பெரியபெருமாளையும் ஆபாதசூடம் (திருப்பாதம் தொடங்கி திருமுடிஈறாக) அநுபவித்து திருமாளிகைக்கு எழுந்தருள திருப்பதியிலுள்ளவர்கள் அடங்கத் திருமாளிகையிலே அமுது செய்தருளின பின்பு பெருங்கூட்டமாக எழுந்தருளியிருந்து, திருநெடுந்தாண்டகத்திற்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே ‘அலம்பிரிந்த நெடுந்தடக்கை‘ என்கிற பாட்டுக்கு அர்த்தமருளிச் செய்கிறபோது, ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்‘ என்கிறவிடத்திலே
‘பறவையேறு பரம்புருடா நீ யென்னைக்கைக் கொண்டபின், பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்‘ என்று இத்தை இரட்டித்து அநுஸந்தித்தருளித் திருக்கண்களை மலரவிழித்துத் திருமேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து திருமுடியிலே அஞ்சலி செய்து கொண்டு அணையிலே சாய்ந்து நிற்கச் செய்தே சிர: கபாலம் வெடித்துத் திருநாட்டுக்கெழுந்தருளினார். இதுபற்றியே இன்றும் கைசிக துவாதசியன்று பட்டருக்கு ப்ரம்ஹரத வைபவம் ஏற்பட்டுள்ளது.
***

Nammazhvaar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

நம்மாழ்வார் வைபவம்


 1. ப்ரபன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வார் அவதார திருநக்ஷத்திர வைபவம் வைகாசி 13ம்நாள் (27.5.2010) விசாக நக்ஷத்திரத்தில் நடைபெற உள்ளது.
 2. பரமவைதிக சித்தாந்தமாய்த் தமிழ்ப்பெருமக்களின் மதமாகிய வைணவ மதத்தின் தத்துவங்களை உலகிற்கு உபதேசித்து எங்கும் பரவச்செய்து அதனை வளர்த்த பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசாரியர்கள் என்றும் வழங்குவர்.
 3. ஆழ்வார்களுள் முதல்வராய் எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்குலகில் வந்த நம் சடகோபரே ஆசாரிய பரம்பரைக்கு முதல்வராவார்.
 4. ஞானதேசிகரான நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்மறை நான்கனுள் சாமவேத சாரமான திருவாய்மொழியின் பொருள் விசேடங்களை வெளியிடுதற்கு ஆறாயிரப்படி முதலிய ஐந்து வியாக்கியானங்கள் அவதரித்திருப்பினும், ஆழ்வாருடைய பெருமையினையும் அருளிச் செயலின் சீர்மையினையும் “வகுளாபரணன் ஓவாதுரைத்த, தமிழ் மாமறையின் ஒருசொற் பொறுமோ உலகிற் கவியே” என்கிறபடியே திருவாய்மொழியின் ஒப்புயர்வற்ற சிறப்பினையும் இதில் சாரமாக அறியவேண்டிய உள்ளுறைப் பொருள்களையும் விசேடார்த்தங்களையும் அவ்வியாக்கியானங்கள் மூலமாக மற்றும் அறிய முடியாமையின், அவற்றை அறிவிக்கத் திருவுளங்கொண்டு “அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே” எனப்படுகின்ற தம் பரமகிருபையால் செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளில் சீரிய கூரிய தீஞ்சொற்களாலே இந்நூலை அருளிச்செய்து, தீதில் நன்னெறியை இதன் மூலம் உலகில் பரவச் செய்தார்.
 5.  ஆழ்வார்களின் தலைமை பெற்றவரான நம்மாழ்வார் நாலு வேதங்களின் ஸாரமாக அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதிருவந்தாதி ஆகியவையாகும்.
 6. முதல் திவ்ய பிரபந்தமான திருவிருத்தம் ரிக்வேதஸாரமென்றும், இரண்டாவது திவ்யப்ரபந்தமான திருவாசிரியம் யஜுர் வேதஸாரமென்றும், மூன்றாம் திவ்யப்ரபந்தமான பெரியதிருவந்தாதி அதர்வண வேதஸாரமென்றும், நாலாவதாய், சரம ப்ரபந்தமான திருவாய்மொழி ஸாமவேத ஸாரமென்றும் பெரியோர்கள் நிர்வகிப்பர்.
 7. “இயற்பா மூன்றும் வேதத்ரயம் போலே;  பண்ணார் பாடல் பண்புரையிசை கொள் வேதம் போலே” (ஆசார்யஹ்ருதயம் நூற்பா-50) என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், அருளிச் செய்துள்ளார்.
 8. இவற்றுள் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியை உபநிடதங்களின் சாரம் என்றும் திராவிட வேதம் என்றும் போற்றுவர்.
 9. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே”, என்று அருளியபடியே திருவாய்மொழியானது உபநிடதங்களின் உட்கருத்தை விளக்குவதாகும்.
 10. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய மணவாளமாமுனிகள் என்றும் ஆசாரியர் தாம் அருளிய திருவாய்மொழி நூற்றாந்தாதியில் “உயர்வே பரன்படியே உள்ளதெல்லாம் தான் கண்டு உணர்வேத நேர் கொண்டு உரைத்து…., என்று திருவாய்மொழியின் வேதமாம் தன்மையை எடுத்துக்காட்டியுள்ளார்.
 11. வேதமாவது எப்பொழுதும் ஒரே மாதிரியாய் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு உச்சரிக்கப்படும் சப்தங்களின் கூட்டம்.
 12. இவ்வேதமானது படைப்பின் ஆரம்பத்தில் எம்பெருமானால் நான்முகக் கடவுளுக்கு உபதேசிக்கப்பட்டு, அவனால் தமது சீடர்களுக்கு உபதேசிக்கப்பட்டு, சீடர்களுக்குச் சீடர்களான பரம்பரையாய் நமக்குக் கிடைத்திருக்கின்றது என்பர்.
 13. ஆதியில் வேதம்நான்கு வகைகளுடன் நூறு ஆயிரம் சாகை(கிளை)களுடன் கூடிய ஒரே விருக்ஷமாக (மரமாக) இருந்தது என்றும், துவாபர யுக முடிவில் வியாசரால் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டது என்றும் சொல்லுவர்.
 14. பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே எம்பெருமான் மனிதனாய் வந்து அவதாரங்கள் செய்தாற்போலே வேதமும் தமிழாய் வந்து ஆழ்வார்கள் மூலமாக வெளிவந்ததை ‘முந்தையாயிரம்’ என்பர்.
 15. வேதாந்த தேசிகர் என்னும் ஆசார்யர் தாம் அருளிய ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியின்’ முதல் ச்லோகம் மூலமாக நம்மாழ்வாருடைய திருவாய்மொழியானது உபநிஷத்து வாங்மயமான நூல்களின் ஸாரமானது என்று கூறுவர்.