Ramanusa Vaibhavam Part II

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமாநுசர் வைபவம் – 2

22. இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் புதிய கோணங்களில் பல புதுச்செய்திகளையும் கூறுகின்றது ‘ராமாநுஜார்ய திவ்யசரிதை’ என்ற இந்நூல்.
23. பிள்ளைலோகம் ஜீயர் வரலாற்றுணர்வு மிக்கவர்; காலக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விருந்தாகப் படைத்தவர்; இந்தியத் துணைக் கண்டத்தின் நிலவியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், அரசியல் மற்றும் மாற்றுச்சமயத்தினரின் எதிர்ப்புகள், ஏழை எளிய மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள்வரை பரவியிருந்த சமுதாயச் சூழ்நிலை ஆகிய கூறுகளை உட்படுத்தி விரிந்து பரந்த இராமானுச திவ்ய சரித்திரத்தை வழங்கியிருக்கிறார் பிள்ளைலோகம் ஜீயர்.
24. அக்கால ஆட்சியியல், கலையியல், தொழில்முறை, ஆலய நிர்வாஹம் என்று பல்வகைத்துறைகளில் பழகியிருந்த தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார் இவர் தம் நூலில்.
25. இராமானுசப் பேராறு தென்னரங்கம் தொடங்கி இமயத்தின் கொடுமுடியிலேறியது; விசிஷ்டாத்வைதக் கொடியை ஆங்கே ஏற்றியது அங்கிருந்து பெருகிஓடி பல்வேறு மாநிலங்களில் வளம் கொழிக்க வைத்து மடங்கள் பலவற்றைள நிறுவித் தென்னன் தமிழான புல்லாணியில் கடலோடு கலந்தது. அப்பேராற்றில் குள்ளக் குளிரக் குடைந்தாடிய பெருமக்களே பிள்ளையுறங்கா வில்லிதாசர், கோயில் வண்ணாத்தான், வயலாலி ஞானப்பெண் (இவள் திருக்குலத்தோர் என்று அழைக்கப்படும் தலித் வகுப்பைச் சார்ந்தவள்) ஆகியோரும் மற்றும் மாந்தர் பலரும் ஆவர்.
26. பிள்ளைலோகம் ஜீயர் இராமானுசரின் திக்விஜய வரலாற்றில் நெஞ்சை நெகிழ்விக்கும் நிகழ்ச்சிகள் பலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். இராமானுசர் பயணித்த பெருவழிகளைத் திசை சொல்லித் தொலைவு சொல்லி ஒரு பயணவழிகாட்டும் படத்தையே ஜீயர் வரைந்து முன் வைத்திருக்கிறார். அவ்வழிப் புலம்பற்றி ஐநூறு ஆண்டு களுக்குப் பிறகு ஜீயர் தாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு வழிச் செலவில் செவிவழிச் செய்திகளைச் சேகரித்துத் தாம் எழுதிய இராமானுச திவ்ய சரிதைக்குக் கருத்துக் கருவூலங்களைத் தொகுத்து வைத்துள்ளார்.
27. விக்ரமசோழன் திருவீதி கிழக்குப் பகுதியில் (கீழை உத்தர வீதி) இராமானுசர் திருவாய்மொழி விண்ணப்பம் செய்யும் இசைகாரர்களான அரையர்களைக் குடியமர்த்தி அவ்வீதிக்குச் ‘செந்தமிழ்பாடுவார் வீதி’ என்று பெயர் சூட்டினார். ‘செந்தமிழ் பாடுவார்’ என்ற தொடரைத் திருமங்கை மன்னன் திருவாக்கிலிருந்து தேர்ந்தெடுத்தார். (பெரிய திருமொழி 2-8-2)
28. திருவரங்கம் பெரியகோயிலில் பணிபுரிந்த அனைத்துக் கொத்திலுள்ளாரையும் அவர்கள் முன்பு வாழ்ந்துவந்த வெளிச் சுற்றுக்களிலிருந்து குடிபெயரச் செய்து நம்பெருமாள் கைங்கரியங்களுக்கு உதவும்படி திருக்கோயிலுக்கு அண்மையில் உள் திருச்சுற்றுக்களில் வாழ்ந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
29.ஆளவந்தார் வாழ்ந்திருந்த மடத்தினைப் பெரியநம்பிக்கும் அதன் எதிர்மனையை மாடத்திருவீதியில் (தற்போதைய கீழைச்சித்திரை வீதியில்) ஆழ்வானுக்கும்,  அந்த மனைக்குத் தெற்குப் பகுதியில் முதலியாண்டானுக்கு ஒரு திருமாளிகையையும் அளித்தார்.
30. பூர்வகாலந்தொட்டு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி திருவரங்கம் பெரியகோயிலில் வழிபாடுகள் நடந்து வந்தன.  இடையில் (அவாந்தரத்தில்) வைகாநஸர்களின் ப்ரவேசம் ஏற்பட்டிருந்ததை இராமானுசர் மாற்றி மீண்டும் ஸ்ரீபாரமேச்வர ஸம்ஹிதை ப்ரகாரம் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம வல்லுநர்களைக் கொண்டு திருவாராதனங்களையும் திருவிழாக்களையும் நடத்தி வரும்படியான ஏற்பாடுகளைச் செய்தார்.
31. எம்பெருமானார் 25 ஆண்டுகள் திக் விஜயம் செய்து திருவரங்கம் திரும்பினார்.
32. திக்விஜயயாத்ரையைத் திருமாலிருஞ்சோலையில் தொடங்கினார். அப்போதுதான் நூறு தடா நிறைய அக்கார அடிசிலும் வெண்ணெயும் ஏறுதிருவுடையானுக்கு ஸமர்ப்பித்தருளினார். அழகர் திருமலையில் ராமாநுஜகூடம் எழுப்பி பரமஸ்வாமி கைங்கர்யத்தை மேற்பார்வையிடுவதற்கு ஒரு ஜீயரையும் நியமித்தருளினார்.
33. திருமகள் கேள்வனாய், அரவணைமேல் துயில்பவனாய், எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொண்டவனாய், தாழ்ந்த குணங்களுக்கு எதிரிடையான கல்யாணகுணங்களுக்கெல்லாம் ஒரிருப்பிடமானவனாய், பொருள்கள் அனைத்திலும் உள்ளுறைபவனாய் விளங்குபவன் ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணனிடம் நாம் சரணாகதி செய்யவேண்டும் என்ற உன்னதத் தத்துவத்தைப் போதித்தார்.
34. ஒரு பங்குனி உத்தர நன்னாளிலே அழகிய மணவாளனும் ஸ்ரீரங்கநாச்சியாரும் சேர்ந்து இருக்கின்ற இருப்பிலே நம்போல்வார் நற்கதி அடையும்படி திவ்ய தம்பதிகளிடம் மூன்று கத்யங்களை (சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம்) விண்ணப்பம் செய்தார்.

ஸ்ரீ அரங்கநாதசுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர்.