Ramanusa Vaibhavam Flex 3

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம:
இராமாநுசர் வைபவம்-3
 35) நம்பெருமாளுக்கு அனைத்துவித கைங்கர்யங்களையும் உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக அந்தணர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார்.
 36)எழுநூறு ஸந்யாசிகளாலும், எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த்தரான மற்றைய ஆசார்ய புருஷர்களாலும், எண்ணில டங்கா சாத்தின, சாத்தாத முதலிகளாலும், முந்நூறு கொத்தியம்மை மார்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும் தொழப்படுபவ ராய் “ஸ்ரீரங்கநாததே ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீச்சவர்த்ததாம்” என்கிறபடியே நம்பெருமாளை மங்ளாசாஸனம் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருந்தார் இராமானுசர்.
 37) இவ்வாறாக எழுந்தருளியிருந்த உடையவரை ஆச்ரயித்த முதலியாண்டானுடைய திருக்குமாரரான கந்தாடை யாண்டான், நடாதூராழ்வான், ஸ்ரீபராசரவேதவ்யாச பட்டர், கூரத்தாழ்வான் ஆகியோர் ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்கு உறுதுணையாகவும், கூரத்தாழ்வான் எம்பெருமானார் மடத்தில் உள்ள நூலகத்திற்கு காப்பாளராகவும், பண்டகசாலைப் பொறுப்பான ராகவும் பணியாற்றி வந்தனர்.
 38) அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தாம் மிகச் சிறந்த சாஸ்திரபண்டிதராய்த் திகழ்ந்து வந்தபோதிலும் அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை எல்லாம் தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற இரண்டு நூல்களை அருளிச் செய்திட அதனால் மகிழ்வுற்ற இராமானுசர் தம்முடைய திருவாராதனப் பெருமாளான ‘பேரருளாளரை திருவாராதனம் பண்ணிக் கொண்டிரும்’ என்று நியமித்தருளினார்.
 39) கிடாம்பியாச்சானும், கிடாம்பிப் பெருமாளும் திருமடைப் பள்ளி கைங்கர்யத்திற்கு கடவராய் இருப்பர்கள். வடுகநம்பி பசுக்களுக்குப் புல் இடுவதற்கும், உடையவருக்கு எண்ணெய்க் காப்பு சாற்றுகைக்கும், உரிய வேளைகளில் பாலமுது ஸமர்ப்பிப்பதற்கும் கடவர்.
 40) முதலியாண்டான் எம்பெருமானார் திருமண்காப்புச் சாற்றிக் கொள்ளும்போது, அதற்கான பணிவிடைகளைச் செய்வார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் ஸமர்ப்பிக்கும்போது அவருக்கு அந்த கைங்கர்யத்தில் உதவி செய்திடுவார். எம்பெருமானார் திருவீதிகளில் எழுந்தருளுவதற்கு முன்பாக அவருக்குத் திருவடி நிலைகளை (பாதுகைகளை) ஸமர்ப்பித்திடுவார்.
 41) இந்தக் காரணம் பற்றியே உடையவரது திருவடி நிலைகளுக்கு முதலியாண்டான் என்ற பெயர் நிலை கொண்டு ள்ளது. ஆகவே அடியார்கள் எம்பெருமானார் ஸந்நிதியில் ஸ்ரீசடாரி ஸாதித்திடவேண்டும் என்று கேட்காமல் “முதலியாண்டான் ஸாதித்திட வேண்டும்” என்று பணிவோடு ப்ரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.
 42) எம்பார் இரவில் இராமாநுசர் திருப்படுக்கையிலே சயனித்திருக்கும் போது அவருடைய திருக்கால்களைப் பிடித்து விடுவர். உடையவருடைய திருப்பரியட்டங்கள் திருத்தவும் திருக்கை ஸமர்ப்பிக்கவும் இரவில் எம்பெருமானார் படுக்கைக்கு எழுந்தருளும் முன்பு அவருடைய திருப்படுக்கையைச் சோதிப்பதும் எம்பார் மேற்கொண்டு வந்த பணிகளாம்.
 43) அன்றாடம் படுக்கை விரிப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு வெயிலிலே உலர்த்தப் பெற்ற பிறகு அவைகள் திருக் கட்டிலிலே சேர்த்திடப்படும். தினந்தோறும் எம்பார் உடையவர் படுக்கையறைக்கு எழுந்தருள்வதற்கு முன்பு படுக்கையில் படுத்துப் புரள்வாராம். இதைக்கண்ட பலர் எம்பாரிடம் ‘இது தவறானதும், முறையற்ற செயலும் அல்லவா’ என்று வினவிட அதற்கு எம்பார் தாம் இவ்வாறு செய்வது படுக்கையில் ஏதேனும் முட்களோ அல்லது புழுக்களோ இருந்தால் அவை இராமானுசர் திருமேனிக்குத் துன்பம் விளைத்திடும், அவ்வாறு நேர்ந்திடாவண்ணம் தாம் இவ்வாறு செய்வதாக மறுமொழி அளித்தார்.
 44) கோமடத்து சிறியாழ்வான் திருக்கை செம்பும் ஸ்ரீபாதரக்ஷையும் எடுப்பர். பிள்ளை உறங்காவில்லிதாஸர் வரவு, செலவு கணக்குகளை அன்றாடம் எழுதிக் கொண்டும் கருவூல காப்பாளராகவும் பணிபுரிவர்.
 45) அம்மங்கியம்மாள் பால் அமுது காய்ச்சுவார். உக்கலாழ்வான் திருத்தளிகை மாற்றுவார். மாருதியாண்டான் திருவாராதனத்திற்கும், தளிகைக்குமான நீர் கொணர்ந்து சேர்ப்பார். மாறொன்றில்லா சிறியாண்டான் அமுதுபடி சுத்தம் செய்வது, கரியமுது திருத்துவது ஆகிய பணிகளைச் செய்துபோவார்.
 46) வண்டரும், செண்டரும் தினந்தோறும் மடத்துக்கு 1,000 பொன் ஸமர்ப்பிப்பர். இவர்கள் உறையூர் சோழருடைய அரண் மனையில் படைத்தலைவர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் மல்யுத்த வீரர்கள்.
 47) ராமாநுஜ வேளைக்காரர் எம்பெருமானார் எழுந்தருளும்போது திருமேனிக்காவலராகப் பணி புரிந்து வந்தனர். அகளங்க நாட்டாழ்வான் எதிரிகளை அழித்து திருவரங்கத்தைக் காத்திடும் பணியை செய்து வந்தார். இவ்வாறு உடையவரை ஆச்ரயித்திருந்தோர் பலரும் பல கைங்கர்யங்களை செய்து வந்தனர். காவிரி நீரிலே குள்ளக் குளிரக் குளிர குளித்து நீராடி, மெல்லக் கரையேறி திருமுடி, திருமேனிகளுக்குத் தனித்தனியே திருவொற்றாடை சாற்றி காஷாயங்களைத் தரித்து கைங்கர்யங்கள் செய்வதற்கு அனுகுணமாகத் திருமண்காப்பு சாற்றிக் கொண்ட பிறகு ஜல பவித்ர பூர்வமாக சுத்த ஆசமனம் கண்டருளினார். 
 

அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.                    (முற்றும்)