Return of NamperumaaL – NamperumaaL Asthaanam Thirumbiya naaL

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

2010 மே, 31ஆம் நாள், நம்பெருமாள் திருவரங்கத்தை விட்டு அகன்று மீண்டும் 639 ஆண்டுகளுக்குப் பின்பு திருவரங்கத்திற்கு வந்து சேர்ந்த நாள். அதைப் பற்றிய சில சிந்தனைகள்.
1) ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபீடத்தை அலங்கரித்தவர்களில் மணக்கால் நம்பியும் ஒருவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.929 -1006. இவர் காலத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது (இதை ஒட்டியர் கலகம் என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.) பாதுகாப்புக் கருதி அழகியமணவாளன் திருமாலிருஞ்சோலையில் ஓர் ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார்.
2) திருமாலிருஞ்சோலை வைகானஸ அர்ச்சகர்கள் ஒரு வருட காலம் அழகியமணவாளனை ஆராதித்து வந்தனர். திருவரங்கத்தில் ஒட்டியர் கலகம் ஒடுக்கப்பட்டவாறே மீண்டும் அழகியமணவாளன் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார். ஆனால் முன்பு ஆராதனம் செய்து வந்த பாஞ்சராத்ரிகள் கலகத்தின்போது ஊரைவிட்டு அகன்றதாலோ அல்லது கொல்லப்பட்டதாலோ, ஆராதனங்களைச் செய்வதற்கு யாரும் இல்லாததால் வைகானஸ அர்ச்சகர்களே திருவரங்கத்தில் பெரியபெருமாளுக்கு ஆராதனம் செய்து வந்தனர். சுமார் 80 ஆண்டுகள் இவர்கள் திருவரங்கம் கோயிலில் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தனர். இராமானுசர் காலத்தில்தான் (கி.பி. 1017-1137) திருவரங்கத்தில் மீண்டும் பாஞ்சராத்ரிகள் ஆராதனத்தில் பங்கு கொண்டனர்.
3) கி.பி. 1310ஆம் ஆண்டு மாலிக்காபூர் படையெடுப்பின் போது அழகியமணவாளனின் அர்ச்சா திருமேனி வடக்கே எடுத்து செல்லப்பட்டது. உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லிவரை சென்று அழகியமணவாளனை மீட்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியோடு தொடர்புடையதுதான் துலுக்கநாச்சியார் வைபவம். அழகியமணவாளன் கொள்ளையடிக்கப்பட்டபிறகு ஆராதனத்தில் எழுந்தருளியிருந்தவர் அவரைப் போன்ற திருமேனி கொண்ட திருவரங்க மாளிகையார் ஆகும். அழகியமணவாளன் ஆஸ்தானம் திரும்பிய பிறகு திருவரங்க மாளிகையார் யாகபேரராக கொள்ளப்பட்டார்.
4) கி.பி. 1323ஆம் ஆண்டு நிகழ்ந்த உலூக்கானின் படையெடுப்பின்போது  அழகியமணவாளன் தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, முந்திரி மலை பள்ளத்தாக்கு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி, அழகியமணவாளம் கிராமம் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய பிறகு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்)  திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார்.
5) கி.பி.2010 ஆம் ஆண்டு மே, 31ஆம் நாள் நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பி 639 ஆண்டுகள் ஆகின்றன. நம்பெருமாள் தென் தமிழகத்தில் பல பகுதிகளுக்குச் சென்று பல இன்னல்களை எதிர்கொண்டு நம்போல்வார் உய்வடைவதற்காக 48 ஆண்டுகள் கழிந்து ஆஸ்தானம் திரும்பிய நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நாம் அதற்குரிய முறையில் கொண்டாடுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை உள்ளபடி அறிய இயலவில்லை. வரலாற்று உணர்வு நமக்கில்லை என்பதும் இதற்கொரு காரணமாகும்.
6) பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபம் எனப்படும் தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில்தான் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார். (ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபத்தில் நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணி நாம் மங்களாசாஸனம் செய்யலாமே. இதில் ஒன்றும் தவறில்லையே. ஏன் இதைச் செய்யக் கூடாது? பொது மக்கள் ஒன்றுகூடி அதிகாரிகளிடம் முறையிடலாமே?) திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந் தருளியிருந்ததால் யார் உண்மையான அழகியமணவாளன் என்பதைத் தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை. (ஆயிரக்கணக்கானோர் 1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டு முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் ஈரவாடை தீர்த்தத்தை (திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீர்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” என்று அழைத்தான். அவன் இட்ட பெயரே இன்றுவரை வழங்குகிறது.  நம்பெருமாள் என்ற பெயர் ஒரு பாமரன் அன்புடன் இட்ட பெயராகும்.

ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, 214 கீழை உத்தர வீதி, திருவரங்கம்,திருச்சி-6. தொலைபேசி: 0431-2434398. www.srivaishnavasri.wordpress.com  மேலும் பல செய்திகளுக்கு எமது வெளியீடான “நம்பெருமாள் வனவாசம்” (விலை ரூ.10) என்ற நூலை மேற்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

Our audio podcast upanyAsam on the same topic is available here  for download. More such talks at www.talksintamil.com/SrivaishnavaSri