Periyaazhvaar Vaibhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

பெரியாழ்வார் வைபவம்
1. ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பெரியாழ்வார். இவர் பெரிய திருவடி என்று அழைக்கப் படும் கருத் மானின் அம்சமாகக் கொள்ளப்படுகிறார். இவருடைய திருநக்ஷத்ர உத்ஸவம் 22-6-2010 செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது.
2.தென்பாண்டி நாடு வைணவ சமயத்திற்குப் பெரும் இடம் தந்துள்ளது. முதலாழ்வார்கள் மூவரின் எழுச்சிக்குப் பின் 9ஆம் நூற்றாண்டில் பெரியாழ்வார் தோன்றினார்.
3. விஷ்ணுசித்தன் என்பது இவருடைய இயற்பெயராகும். பட்டர்பிரான் என்பது செய்த தொழிலால் வந்த பெயர். வேயர் குலம் என்று அழைக்கப்படும் பூர்வசிகை குடியில் (சோழியர் குலத்தில்) பிறந்தவராவார்.
4. திருப்பல்லாண்டுடன் இணைத்துப் பெரியாழ்வார் திருமொழியாக 473 பாசுரங்களைப் பாடியுள்ளார். இவை முதலாயிரத்தில் இடம் பெறுகின்றன. மொத்தமாக 19 திவ்யதேசங்களைப் பாடியுள்ளார்.
5. தொல்புகழான் பட்டர்பிரான் புதுவைமன்னன் (2.2.11) 2) புதுவைக்கோன் (23,13), 3)பட்டர்பிரான் (2,4,10) 4) பட்டர்பிரான் விட்டு சித்தன் (9,11,5) 4) மறைவாணன் பட்டர்பிரான் (4,1,10) 5)வேயர் தங்குலத்து உதித்த விட்டு சித்தன் (5,4,11) என்று தன்னைக் குறிப்பிடுகிறார் பெரியாழ்வார் திருமொழியில்.
6. ஆண்டாளும் ‘வேயர்புகழ் வில்லிபுத்தூர்கோன் கோதை’ (நாச்சியார் திருமொழி 1-10) என்று கூறிக்கொள்கிறார்.
7. இவ்வாறு வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கும் பூமிப்பிராட்டியின் அம்சமாக ஆண்டாள் அவரது நந்தவனத்தில், துளசிச்செடியின் கீழ் கிடைத்தாள் என குரு பரம்பரையும், திவ்ய சூரி சரிதமும் குறிப்பிடுகின்றன.
8. ஸ்ரீவல்லபதேவன் என்னும் மன்னன் ஒரு நாள் தனது மந்திரியாகிய செல்வநம்பியை அழைத்து மறுமைக்கு செய்ய வேண்டியது என்ன என்று வினாவினான். மந்திரியோ எல்லாச் சமயத்தினரையும் அழைத்து வேத சம்பந்தமான சித்தாந்தம் எதுவென அறிதலே சாலவும் சிறந்தது என்றான்.
9. மன்னனும் அகமகிழ்ந்து, “பொன்னினிற் கிழியொன்றாங்கே பொள்ளென வுயரத்தூக்கி, யின்னதிங்கெவர் வாத்தித்தினிற்று வீழ்ந்திடினுமந்த மன்னெடுஞ் சமயத்தேவே மறையுறு பொருள தாமே!” என்று கூறி கிழி கட்டினான்.
10. 16 வகை மதத்தவர்களும், பலரும் வந்து வாதிட்டுத் தோற்றனர்.
11. வடபெருங்கோயில் உறைவான் ஆணையால், அங்கு வந்து சேர்ந்தார் விஷ்ணுசித்தர்.
12. அங்கு அவர் பரத்துவ நிர்ணயத்தை நிலைநாட்டிப் பொற்கிழி பெற்றார்.
13. மகிழ்ந்த மன்னன் அவரை யானையிலேற்றி வீதியுலாச் செய்தான். இறைவனே ஸ்ரீதேவி-பூதேவி ஸமேதரராய் தோன்றினார்.
14. அவனுக்குக் கண்படுமோவென எண்ணினார் விஷ்ணுசித்தர். யானை மீதிருந்த மணிகளைக் கையிலேந்தி, “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்டோள்” மணிவண்ணனுக்குச் சேவடியில் தனது பாடல்களையும், பரிசையும் ஸமர்ப்பித்தார்.
15. இவரது பாடல்களில்  காணப்படும் பக்திநிலை ஒருதாய் தன் மகனைக் கண்ணுங் கருத்துமாகக் கவனிக்கும் நிலை  தென்படுகிறது.
16. தன்னைக் கண்ணனின் தாய் யசோதை ஆகவும், இறைவனை மகனாகவும், தன் வீட்டினை நந்தகோபன் இல்லமாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகவும் கருதிக் கொண்டு பாடும் தன்மை அவரது பாடல்களில் காணப்படுகின்றன.
16. வைணவ ஆழ்வார்களுள் இறைவனுக்கே பல்லாண்டு கூறிய விஷ்ணுசித்தனின் காலம் ஓரளவு உறுதியாகி உள்ளது. பெரியாழ்வார், “சொன்னவில் கூர்வேற் கோன்நெடுமாறன் தென்கூடற்கோன் தென்னவன் கொண்டாடும் தென்திருமாலிருஞ் சோலையே” (பெரியாழ்வார் திருமொழி 4-2-7) எனப்பாடுகிறார். ஆக கோன்நெடுமாறன் காலத்தவர் பெரியாழ்வார் என்பது உறுதியாகிறது.
17. கோன் நெடுமாறன் என்று அழைக்கப்படும் ஸ்ரீமாறன்ஸ்ரீவல்லபன் 9ஆம் நூற்றாண்டில் அரசாண்ட பாண்டிய மன்னனாவான். பெரியாழ்வார் 85 ஆண்டுகள் வாழ்ந்தவராதலால் இவர் காலம் கி.பி.800 முதல் 885 வரையாக இருக்கலாம் எனக் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
18. ஆண்டாள் அழகியமணவாளனை மணந்து இருவரும் மறைந்த பிறகு, பெரியாழ்வாரே ஆண்டாளையும், அழகிய மணவாளனையும் பெரிய திருவடியையும் எழுந்தருளப் பண்ணி தம் ஆஸ்தியெல்லாம் அக்கோயில் பணியிலே அர்ப்பணித்து விட்டார். அவரே இக்கோயிலுக்கு தர்மம் செய்த முதல் தர்மகர்த்தா என்றும் கூறப்படுகிறது.
19. ஆழ்வார்கள் படைத்த இலக்கியங்களுள் பெரியாழ்வாரின் பங்களிப்பாகச் சிறப்பித்துச் சொல்லத்தக்க இலக்கிய வகை ஒன்று உண்டு.
20. அதுவே பிள்ளைத்தமிழ். இது தவிர திருப்பல்லாண்டு, பாதாதிகேசம், தாலாட்டு, திருநாமப்பாட்டு முதலான இலக்கிய வகைகளையும் பெரியாழ்வார் திருமொழியிற் காணலாம்.
21. இவை ஒவ்வொன்றும் தனித்தனிப் பதிகங்களாக அமைந்தவை.
22.கண்ணன் மீண்டுவரும் கோலம் கண்டு கன்னியர் காமுறுவதாக அமைந்த திருமொழி (3-4) உலா என்னும் இலக்கிய வகைக்கான அடிக்கூறுகளைக் கொண்டுள்ளது.
23. பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை இருவகையினுள் அடக்கலாம். கண்ணனின் பிள்ளைப்பருவம் பற்றியன ஒருவகை, இளமைப்பருவம் பற்றியன மற்றொருவகை.
24. பிறப்பு, திருமேனியழகு, தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி, தளர்நடை, அண்மை வருகை, புறம்புல்கல், அப்பூச்சிகாட்டல், அம்மம் உண்ணல், காது குத்தல், நீராட்டல், குழல்வாரல், பூச்சூட்டல், காப்பிடல் என்பன (பெரியாழ் வார் திருமொழி முதற்பத்தும் இரண்டாம் பத்தின் முதல் எட்டுத்திருமொழிகளும்) பெரியாழ்வார் கொண்ட பிள்ளைப் பருவங்கள் ஆகும்.
25. கண்ணனைக் குறித்து ஆய்ச்சியர் முறையிடல், அன்னை அம்மம் தர மறுத்தல், கன்றின்பின் போகவிட்டு இரங்கல், கன்றுகளோடு வரக்கண்டு மகிழ்தல் , கன்னியர் காமுறல், குன்று குடையாய் எடுத்தல், குழல் ஊதல் என்பன (2-9 முதல் 3-6) முடியவுள்ள திருமொழிகள்) கண்ணனுடைய இளமைப்பருவ நிகழ்ச்சிகள் ஆகும்.
26. பெரியாழ்வார் தம்முடைய இறுதிநாட்களில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்தார். திருமாலிருஞ்சோலையிலேயே பரமபதித்தார். அவருடைய திருவரசை அந்தத் திவ்யதேசத்தில் இன்றும் நாம் ஸேவிக்கலாம்.