Koyil Sri Jayanthi/Pancharathra Sri Jayanthi

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

“கிருஷ்ணஜயந்தி”
(2.9. 2010 வியாழக்கிழமை ஆவணி அஷ்டமியோடு கூடிய ரோஹிணி)
திருவரங்கத்தில் ஸ்ரீஜயந்தி கொண்டாட்டங்கள்


1. நம்பெருமாள் பொங்கல்  அமுது செய்து புறப்பட்டு ஸ்ரீபண்டார மண்டபம் எழுந்தருளுவார்.
2.  இந்த மண்டபத்தைக் கட்டிவைத்து உத்ஸவத்தையும் நடத்தி வைத்த உத்தமநம்பி அய்யங்காருக்கு ஸேவை மரியாதை அனுக்ரஹிப்பார்.
3.  பிறகு திருமஞ்சனம். கிருஷ்ணனுடைய அவதார நிமித்தம் திருவாரா தனத்தில் பெருமாளுக்கு கண்டருளப் பண்ணும் எண்ணெய் அரையரால் கோஷ்டிக்கு விநியோகம் செய்யப்படும்.
4. ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில் திருமஞ்சன காலத்தில் ஸ்ரீகிருஷ்ண லீலா விஷயமான பெரியாழ்வார் திருமொழி அரையரால் தாளத்தோடு கானம் செய்யப்படும்.
5. திருமஞ்சனம் முதலியவை நடந்து மாலை நம்பெரு மாள் உள்ளே எழுந்தருளியதும் நம்பிள்ளை கோஷ்டியி லிருக்கும்     (கீழை ராஜமகேந்திரன் திருச்சுற்றிற்கு நம்பிள்ளை கோஷ்டி என்று பெயர்.)
6. கிருஷ்ணனுக்கு இரவு திருமஞ்சனம் முதலியவையும், உள்ளே பெரிய பெருமாளுக்கு திருவாராதனமும் நடந்து பலவகை திருப்பணியாரங்களும் அமுது செய்விக்கப் படும். இந்த நிகழ்ச்சி ‘சங்குப்பால்’ என்று அழைக்கப் படுகிறது.
7. இவரே உறியடிக்கு எழுந்தருளுகிறார். மூல விக்ரஹங்களாக நந்தகோபன், யசோதை, ரோஹிணி ஆகியோர் எழுந்தருளி யுள்ளனர்.
8. தற்போது கிருஷ்ணனுடைய உத்ஸவ விக்ரஹம் மட்டும் நந்தகோபருக்கு முன்பு அமைந்துள்ளது. ஆயினும் குறிப்புகளின்படி  கிருஷ்ணனுடைய மூல விக்ரஹம் அந்த ஸந்நிதியில் இருந்ததாக அறியப்படுகிறது.
9. உத்-ஸவருடைய வலது திருப்பாதம் பத்மபீடத்தில் காலை சிறிது வளைத்து நிலைகொண்டுள்ளது. இடது திருப்பாதம் தூக்கிய நிலையில் வலது முழங்காலுக்கு  சமநிலையில் உள்ளது.
10. தலையில் கிரீடம் அணிந்த நிலையில் கையில் வெண்ணெயுடன் காட்சியளிக்கிறார். நந்தகோபருடைய வலது கையில் பால் சொம்பும், இடது கையில் சங்கும் உள்ளன.
11. ஸ்ரீஜயந்தியன்று இந்தத்திருக்கோயிலில் அமைந்துள்ள மற்றைய கிருஷ்ணன் ஸந்நிதிகளிலும் ஸ்ரீஜயந்தி கொண்டாடப்படும்.
12. அவையாவன: அகளங்கன் திருச்சுற்றில் உள்ள 1. பார்த்தசாரதி ஸந்நிதி, 2.விட்டலகிருஷ்ணன் ஸந்நிதி, 3.தொண்டரடிப்பொடியாழ்வார் ஸந்நிதியில் உள்ள அஷ்டபுஜ கோபால கிருஷ்ணன் (மதன கோபாலன்), 4.நாதமுனிகள் ஸந்நிதியில் உள்ள பலராமரோடு கூடிய கோபாலகிருஷ்ணன், 5.வேணுகோபாலன் ஸந்நிதியில் உள்ள நான்கு திருக்கரங்களோடு கூடிய கிருஷ்ணன், 6.கார்த்திகை கோபுரவாசலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ருக்மிணி, சத்யபாமா வோடும் நான்கு திருக்கரங்களோடும் கூடிய வேணு கோபாலன்,   7.சந்திர புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள வேணுகோபாலன் (ராதா ஆலிங்கன கிருஷ்ணன்).
13. ஆலிநாடன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஆர்யபட்டாள் வாசலுக்குக் கிழக்குப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹொய்சாள மன்னனான  இரண்டாம் வீர நரசிம்மனது கி.பி.1232ஆம் (அ.கீ.Nணி. 69 ணிஞூ 1936/37) ஆண்டு கல்வெட்டின்படி துவாரசமுத்திர மன்னனான வீரவல்லப தேவனுடைய பட்டமகிஷியான உமாதேவியால் ‘திருக்குழலூதும் பிள்ளை’ ஸந்நிதி நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
14. இந்த ஸந்நிதிதான் ரங்கவிலாஸ மண்டபத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணன் ஸந்நிதி.
15. தயிர்வார்த்து உழக்கு நெய்யமுதும் சிறப்பமுதும் படைப்பதற்கான நிவந்தங்கள் விடப்பட்டதை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
16. மறுநாள் காலை உறியடியன்று பெரியபெருமாள் சீக்கிரமாகப் பொங்கல் அமுது செய்து, மேளதாளத்துடன் வரும் எண்ணெய் அலங்காரம் கண்டருளியதும், கிருஷ்ணன் பொங்கல் அமுது செய்து புறப்பட்டு எண்ணெய் விளையாட்டுடன் திருவீதி எழுந்தருளுளி, வீதியில் எண்ணெய்க்காப்பும் மொச்சைச் சுண்டலும், விநியோகம் செய்து கொண்டே ஸந்நிதிக்குள் எழுந்தருளுவார்.
17. பெரிய அவசரம் அமுது செய்த பிறகு மதியத்திற்கு மேல் நம்பெருமாள் உபயநாய்ச்சிமார்களுடன் புறப்பட்டு கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு திருமஞ்சனக் காவேரிக் கரையிலுள்ள உறியடி மண்டபம் எழுந்தருளி, திருவாராதனம் முதலியவை ஆனதும் வீதியில் எழுந்தருளுவார்.
18. தெற்கு வீதி மேல்புறத்தில் வழுக்குமரம் நாட்டி கிருஷ்ணன் வழுக்குமரம் ஏறுவதாகத் திருச்சுற்றுக்காரர் வழுக்குமரம் ஏறுவார். (தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. மாறாக கீழே நின்றுகொண்டு பானைகளை உடைப்பார்.)
19. நம்பெருமாள் அவ்விடத்தில் பானகம், விடாய்ப் பருப்பு அமுது செய்து புறப்பட்டு சித்திரை திருவீதியைச் சுற்றி வருகையில் தெற்குவாசலில்  கீழ்ப்புறம் முதலியார் கோஷ் டிக்கு கோடைத் திருநாளில்  போல சந்தனம், அறுவாணம் ஆகியவை விநியோகிக்கப்படும். இந்த நிகழ்ச்சி நடைபெற்று வரும் தற்போது இடிக்கப்பட்ட வாணிவிலாஸ் கட்டிடத்தில் தான் திருவரங்கத்தில் சில ஆண்டுகள் வசித்துவந்த விஜயநகர மன்னனான அச்சுததேவராயர் அரண்மனை வாசம் கொண்டிருந்தார்.