Gangadeviyin Mathura Vijayam

Sri.Venugopalan’s Preface to Mathura Vijayam

திரு. அ.கிருஷ்ணமாசார்யரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது எப்படி? அவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் மூலம் தான் அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன். பின்னர் திருவரங்கம் சென்றபோது அவரை நேரில் சந்தித்தேன். என்ன ஆச்சரியம். என்னைப் பார்த்ததும் ‘புஷ்பாதங்கதுரை நீங்கள்தானே’ என்று கேட்டார். வெகு சுவாரஸ்யமாகப் பேசினார். அவர் சொந்த வரலாற்றையும் சிறிது அறிந்து கொண்டேன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். ஸ்ரீவைஷ்ண வத்திற்குத் தொண்டாற்றவேண்டும் என்னும் உறுதியுடன் விச்வரூபம் எடுத்துவிட்டார். நான் எழுதிய ‘திருவரங்கன்உலா’தான் என்னை ஏற்கெனவே அவரிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. முதல் சந்திப்பில் தொடங்கிய எங்கள் நட்பு பின்வந்த ஆண்டுகளில் நீடித்துக் கொண்டே வந்தது.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயப் புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு அவர் பணி முடிவுறவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்; வைணவத்தில் தொலைதூரக்கல்வி நடத்துகிறார் என்பது என்னைப் பெரிதும் கவர்ந்தது. “கோயிலொழுகு” புத்தகம் எனக்குக் கிடைத்த விதத்தை நான் திருவரங்கன் உலாவில் குறிப்பிட்டிருக்கிறேன். பின்னர் இந்தப் புத்தகத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் திரு. கிருஷ்ணமாசார்யர் என்ன செய்தார்? அசுர வேகத்தில் இறங்கி கோயிலொழுகின் அத்தனை விஷயங்களையும் திரட்டி அதிசயம்! அற்புதம்! என்று சொல்லும் அளவுக்கு வெளியீடு செய்துள்ளார். கோயிலொழுகைப் பல பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தகுந்த தலைப்புகள் கொடுத்து அழகிய தமிழில் எளிய நடையில் எழுதியிருக்கிறார் இவர். இப்படிக் கொண்டு வருவதன் கஷ்டங்களை முழுவதுமாக உணர்ந்தவன் நான்.
அத்துடன் அவர் விடவில்லை. கல்வெட்டுகளில் காணப்படும் திருவரங்கன் கோயில் தொடர்பான அத்தனை செய்திகளையும் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார். ஆர்க்கியலாஜிகல் வெளியீடுகளைத் தேர்ந்தெடுத்து விளக்கமளித்துள்ளார். பழங்காலம் பற்றிய உதிரியாகக் கிடைத்த சில விளக்கங்களைக் கண்டு, விவரித்துள்ளார். இந்த விஷயத்தில் இனி சொல்வதற்கோ, செய்வதற்கோ வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதுகாறும் 16 அழகிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் காணப்படும் விஷயங்களைக் கொண்டு ஒளி ஒலி நிகழ்ச்சி யாகக் கோயிலுக்கு வரும் யாத்திரிகர்களுக்குக் காட்டி பார்ப்பவரை பழமையில் உலாவ விடலாம்! தேவஸ்தானமும் அரசாங்கமும் இந்தச் செயலில் இறங்க வேண்டும்.
இன்னொரு விஷயம்: கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் என்பதை விரிவாக எழுதி ராணியையும் அவரது கண வரையும் தம் மானசீகக் கண்களில் வசீகரமாக வரும்படி எழுதி யுள்ளார். இதற்கு உதவிய டாக்டர் திருவேங்கடாசாரி அவர்களையும் நன்றியுடன் நினைக்கிறார். காவிரி நதி பாய்ந்தோடுமாப் போலே, யானை முகப்புப் பட்டயம் அணிந்து கம்பீரமாக புறப்பட்டு வருமாப்போலே இந்த வடமொழிக் காவியத்தை மொழி பெயர்த்தும், அவ்வளவு அழகாகவும், கம்பீர நடையிலும் படிப்பவர்க்குச் சட்டெனப் புரியும்படியும் எழுதியிருக்கிறார். இப்படி ஒரு அருமையும் பெருமையும் வாய்ந்தவர் இவர். இவரது சீரிய செயல்களை ஸ்ரீவைஷ்ணவ உலகம் நன்றாக ஏற்றுக் கொண்டு விட்டது. இவரது அழகு மிளிரும் இந்தப் புத்தகங்களை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ண வனும் நிச்சயம் படித்து உணர்ந்து கொள்வான் என்று நம்புகிறேன். இந்த அடியவனுக்கு இவர் எழுதிய இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதக் கொடுத்து வைத்தது பெரும் பாக்கியமே! இதனால் திருவரங்கன் மகிமையை மீண்டும் ஒரு பெரிய சுற்று அனுபவிக்கும்படி வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாம் திருவரங்கன் செயல்!                                                                       ***