ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுனயே நம:

அஹோபில மடம் 44ஆவது பட்டம் ஸ்ரீமத்அழகியசிங்கரின்
ராஜகோபுரத் திருப்பணி
1. ஆவணி ஹஸ்த நக்ஷத்ரத்தில் தோன்றியவர் ஸ்ரீஅஹோபில மடம் 44ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமி.
2. ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்த பெரியோர்களில் குறிப்பிடத்தக்கவர் முக்கூர் அழகியசிங்கர் என்று ப்ரஸித்தி பெற்ற 44ஆவது பட்டம் அழகியசிங்கர் ஸ்வாமியாவார். இவருடைய திருநக்ஷத்ர உத்ஸவம் 10-9-2010 அன்று நடைபெறவுள்ளது.
3. 236அடி உயரமும், 13 நிலைகளும் கொண்ட தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரமான ஸ்ரீரங்கம் தெற்கு ராயகோபுரத்தைக் கட்டி முடித்தவர் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்வாமி.
4.  ஸ்ரீமதழகியசிங்கரின் அயராத உழைப்பினால் இக்கோபுரம் இனிதே கட்டி முடிக்கப்பட்டது.
5. பதின்மூன்று நிலைகள் கொண்ட இந்தக் கோபுரத்தைக் கட்டப் பல தார்கமீகர்களின் உதவிகொண்டு சில நிலைகளைக் கட்டுவித்து, வேலை செய்பவர்களை உத்ஸாஹப்படுத்தி, கோபுரத்தைக் கட்டி முடித்தார்.
6. அழகியசிங்கரின் உழைப்பு பல கோடி ரூபாய்க்கு நிகராகும்.
7.ஸ்ரீமத் அழகியசிங்கர் 25-3-1987ஆம் தேதியிட்ட ஸ்ரீநரஸிம்ஹப்ரியாவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “அத்ய  மே  ஸபலம்  ஜந்ம  ஜீவிதம்  ச  ஸுஜீவிதம் ஐ கோபுரம்  ரங்கநாதஸ்ய  ஸம்பூர்ணம்  பƒயதோ  மம ஐஐ” (‘எப்பொழுதும் செய்யக்கூடிய கைங்கர்ய ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகமானது முக்த தசையில்தான் கிடைக்கும்.  பரமபதம்போய் நான் நிரந்தரமாகச் செய்யக்கூடிய கைங்கர்யத்தை இந்த தசையிலேயே பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கக்ஷேத்திரத்தில் ஸ்ரீரங்கநாதன் எனக்கு அநுக்ரஹித்தருளினான்.  இங்கு எனக்கு இந்த ராஜகோபுர கைங்கர்யத்திற்காகத்தான் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஸ்ரீரங்கவிமானத்தில் ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளினானோ என்று நினைப்பதுண்டு”.
8. “இந்த உயர்ந்த ராஜகோபுர கைங்கர்யத்தை அன்று அவனே ஆரம்பித்தான்.  இன்று அவனே பூர்த்தி செய்து கொண்டான்” அதாவது இந்த கோபுரநிர்மாண கைங்கர்யத்தை ஸ்ரீரங்கநாதன் தன் ப்ரீதிக்காகத் தானே செய்து முடித்து விட்டான்.
9. 1980ஆம் ஆண்டு ஒருநாள் ஸ்ரீமதழகியசிங்கர் கனவில் திவ்யதம்பதிகள் தோன்றி,  ‘நம்முடைய ஸந்நிதிக்கு முன்புள்ள மொட்டை ராயகோபுரத்தை மிகப் பெரிய கோபுரமாகக் கட்டி முடிக்கக் கடவீர்’ என்று நியமித்ததாகவும், அதற்கு ஸ்ரீமதழகிய சிங்கர் ‘எனக்கு வயதாகி விட்டதே! கிழவனான என்னால் இவ்வளவுபெரிய கைங்கர்யத்தைச் செய்து முடிக்க முடியுமா?’ என்று கேட்க, ‘அதனால் என்ன? இந்தக் கிழவனுக்குக் கிழவனான நீர்தான் கைங்கர்யம் பண்ண வேண்டும்’ என்று நியமிக்க, ‘இதைக் கட்டுவதற்கு வேண்டிய பணத்திற்கு என்ன செய்வேன்?’ என்று கேட்க, ‘நாம் கடாக்ஷிக்கிறோம்’ என்று பிராட்டி அநுக்ரஹிக்க, ‘திவ்ய தம்பதிகள் நியமனப்படி செய்கிறேன்’ என்று விண்ணப்பித்துக்கொண்டார் ஜீயர் ஸ்வாமி.
10. “இந்த ராஜகோபுர கைங்கர்யத்தைச் செய்ய ஆரம்பித்தபோது அந்தரங்கர்களாக இருந்தவர்களும், சில ஸ்ரீரங்கக்ஷேத்திர வாஸிகளும் கோபுரத்தைக் கட்டக்கூடாது என்று தடுத்தார்கள்”.
11. நாலாவது, ஐந்தாவது நிலைகள் கட்டும்போது தாராளமாகப் பணம் கிடைக்கவில்லை.
12. “இவ்விதம் பல இடையூறுகள் நேர்ந்தபோதும் ஸ்ரீரங்கநாதன் நியமனத்தால் ஆரம்பிக்கப் பட்டதாகையால் அவனே இந்தக் கைங்கர்யத்தை குறைவின்றி நடத்தி முடித்துக்கொண்டான்” என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்
13. அன்று கலியன் இந்தத் திருக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்ததாக வரலாறு கூறுகிறது.
14. தாம் விட்டுச் சென்ற இன்னும் சில கோபுரங்களைக் கட்டுவதற்காகக் கலியனே ஸ்ரீமதழகியசிங்கர்மேல் ஆவேசித்து இந்தத் திருப்பணியைப் பூர்த்தி செய்துகொண்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
15. எண்பத்தைந்து வயதிற்குமேல் கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்துத் தொண்ணூ<ற்றிரண்டாவது வயதில் பெரியதொரு ராஜ கோபுரத்தைக் கட்டி முடித்தார் என்ற விஷயம் பொன்னெழுத்தால் பொறிக்கத் தக்கதாகும்.
16. ஸ்ரீரங்கநாதனின் நியமனப்படி கோபுரத்தைக் கட்டுவது தான் எனக்கு முக்கியமே தவிர, கோயில் ஸம்ப்ரதாயத்திற்கு விரோதமாக யாதொரு கார்யமும் செய்கிறதில்லை என்று ஸ்ரீமதழகியசிங்கர் வாக்களித்ததோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறையிலும் நிறைவேற்றிக் காட்டினார்.
17. இந்தத் தெற்கு ராஜகோபுர திருப்பணி 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1986ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.
18. திருவரங்க ராஜகோபுரத் திருப்பணிக்குப் பல மதத்தவரும், பல இனத்தவரும், பல்வேறு வகைப்பட்ட தொழில் செய்வோரும், செல்வர்களும், வறியவர்களும்கூட தங்கள் பங்காக நன்கொடைகளை இயன்ற அளவு வழங்கினர்.
19. ராஜகோபுரத்தைக் கட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
20. மஹாஸம்ப்ரோக்ஷண வைபவத்தில் (25.03.1987) அந்நாளைய தமிழக முதலமைச்சர்  திரு.எம்.ஜி. ராமச்சந்திரன், துணை ஜனாதிபதி திரு.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  சிறப்புத் தபால் தலையும், தபால் உறையும் அன்றையதினம் வெளியிடப்பட்டது.
21. கல்காரம் பலப்படுத்துதல், முதல்நிலை ஆகிய பணிகளை ஸ்ரீஅஹோபிலமடம்ஜீயர் ஸ்வாமி, 2ஆம் நிலை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமி, 3ஆம் நிலை காஞ்சி சங்கராசார்யர் ஸ்வாமி, 4ஆம் நிலை ஆந்திர அரசு, 5ஆம் நிலை கர்நாடக அரசு, 6ஆம்நிலை புகழ்பெற்ற இசையமைப்பாளரான இளையராஜா, 7ஆம் நிலை திருச்சி, ஸ்ரீரங்கம் பொது மக்கள், 8ஆம் நிலை உதவி ஜனாதிபதி திரு.ஆர் வெங்கட்ராமன், 9ஆம் நிலை சேஷம்மாள் சாரிடீஸ், 10ஆம் நிலை காஞ்சி காமகோடி சிஷ்யசபை, 11ஆம் நிலை ஸ்ரீமஹாலக்ஷ்மி டிரஸ்ட், 12ஆம் நிலை ஸ்ரீரங்கநாதாசார்யர், 13ஆம் நிலை தமிழக அரசு, கலசங்கள் திரு. எஸ். ஆர்.ஜி. ஆகியோர் அளித்த நிதி கொண்டு இந்த ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.            ***