MaNavALa MamunigaL Thiruvadhyayanam

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவத்யயன உத்ஸவ சிறப்புகள்

1) மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதசியில் ஸ்ரீமணவாளமாமுனிகள் தனது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை திருவடியை அடைந்தார். விரோதி ஆண்டு மாசி 28ஆம் நாள்  வெள்ளிக்கிழமை (12-3-2010) ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவத்யயன உத்ஸவம் தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதியில் நடைபெறும். அன்றையதினம் பெரியகோயில் முறைகார அர்ச்சகர் ஸந்நிதிக்கு எழுந்தருளி பெரியதிருமடைப்பள்ளியிலிருந்து எழுந்தருளப்பண்ணப்பட்ட ப்ரஸாதங்களை அமுது செய்விப்பார். அதன்பிறகே பெரியபெரு மாளுக்கு பெரிய அவசரம் எனப்படும் திருவாராதனம் நடைபெறும். சிஷ்யனான நம்பெருமாள் தனதுஆசார்யனான ஸ்ரீமணவாளமாமுனிகளுக்கு செய்திடும் கைங்கர்யமாகும் இது.

2) ஸ்ரீமணவாளமாமுனிகள் கலி 4471, சாதாரண வருஷம் ஐப்பசி மாதம் 26ஆம் நாள் வியாழக்கிழமை மூல நக்ஷத்திரத்தில்  ஆதிசேஷனின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். (24-10-1370). இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பதாகும்.

3) திருவாய்மொழிப்பிள்ளை தம்முடைய அந்திம தசையில் அழகியமணவாளப் பெருமாள் நாயனாரை அழைத்து “ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பலகாலும் கண் வையாமல் ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால் கேட்டு நமக்கும் எம்பெருமானாருக்கும் ப்ரியமாகத் திருவாய்மொழி முதலான அருளிச் செயலிலே அநவரதம் பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து கொண்டு ஸ்ரீரங்கத்திலே நித்யவாஸமாக எழுந்தருளியிரும்” என்று நியமித்தருளினார். அழகியமணவாளப்பெருமாள் நாயனார் கி.பி. 1413ஆம் ஆண்டு தம்முடைய 43ஆவது திருநக்ஷத்ரத்தில் திருவரங்கம் எழுந்தருளினார்.

4) ஒருநாள் நம்பெருமாளை, நாயனார் திருவடிதொழச் சென்றவாறே தீர்த்தம், திருமாலை, பரியட்டத் துடனே தம்முடைய தேனேமலரும் திருப்பாதத்தை இவர் திருமுடிசூடுவித்து திருப்பவளச் செவ்வாய் முறுவல் கொண்டு நம் உடையவரைப் போலே நீரும் நம்வீட்டில் கார்யத்தையும் தர்சனரஹஸ்யங்களையும் ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவாஸனத்தளவும் (உம்முடைய வாழ்நாள் வரை) இங்கேயே இரும் என்று அருளிச் செய்தார்.

5) அழகியமணவாளப் பெருமாள் நாயனார் காஞ்சிபுரம் எழுந்தருளிக் கிடாம்பியாச்சான் திருவம்சத்தாவரான கிடாம்பி நாயனார் திருவடிகளிலே ஸ்ரீபாஷ்யம் கேட்டருளினார். ஓராண்டுகாலம் காஞ்சிபுரம் யதோக்தகாரி ஸந்நிதியில் ஸ்ரீபாஷ்யமும் பகவத் விஷயமும் ஸாதித்தருளினார்.

6) பெரியபெருமாளுடைய கைங்கர்யத்திற்கு ஸம்ஸார பந்தத்தால் ஏற்படுகின்ற ஆசௌசங்களால் (தீட்டுகளால்) எல்லாம் பகவத் அனுபவ விரோதிகளாக நாயனார் திருவுள்ளத்தில் கொண்டதால் அப்போதே தம்முடைய ஒருசாலை மாணாக்கரும் துரீயாச்ரமத்தைக் கைக்கொண்டவருமான சடகோப ஜீயர் ஸந்நிதியிலே எழுந் தருளி, அவர் திருக்கரங்களாலே  திரிதண்ட காஷாயங்களைப் பெற்று, அழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஸந்நியா ஸாச்ரமத்தை கைக்கொண்டார். அழகியமணவாளப்பெருமாள் நாயனார் துறவறம் மேற்கொண்டது கோயிலொழுகு தரும் குறிப்புப்படி கி.பி.1425. நம்பெருமாளும் போரவுகந்தருளி, அழகியமணவாள மாமுனிகளை பல்லவராயன் மடத்தில் (தற்போதைய ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதி) விட்டுவாருங்கோள் என்று திருவாய்மலர்ந்தருளினார்.

7) ஒரு பரீதாபி வருஷத்தில் ஜீயருடைய பெருமையை உலகத்தாருக்கு வெளிப்படுத்திடவும், தாம் அவருக்கு சிஷ்யனாகும் விருப்பத்தாலும் “நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில் பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப்பொருளை ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்” என்று நியமித்தருளினார்  நம்பெருமாள்.

10) ஈடு ஸாதிக்கத் தொடங்கிய நாள்: கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு சாற்றுமுறையாகி ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) திருவாய்மொழிப் பேருரையின் சாற்றுமுறை தினத்தில் நம்பெருமாளை ஸ்ரீரங்கநாயகம் என்ற 5 வயது அர்ச்சக குமாரனாகத் தோன்றி சபை நடுவே நின்று “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம்ஐ யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்” என்ற தனியனை அருளிச் செய்திட்டார். இந்தத் தனியன் வேத மந்திரத்திற்கு ஒப்பானதாக முன்னோர்கள் அறுதியிட்டுள்ளனர்.

11) ஸ்ரீமணவாளமாமுனிகள் பரமபதித்தது மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதசி கூடிய திருவோண நாள் ஞாயிற்றுக்கிழமை(16-12-1444).

தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.