திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் ThirukkOLur PeNN Pillai Rahasyam

150.00

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் – டி.வி.ராதாகிருஷ்ணன்; பக். 120; வானதி பதிப்பகம், சென்னை-17.

திவ்யதேசம் நூற்றி எட்டினுள் ஒன்று திருக்கோளூர். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்த ஊருக்கு ஒருமுறை ஸ்ரீராமானுஜர் செல்லும் போது, அவ்வூரிலிருந்து பெண்மணி ஒருத்தி அவ்வூரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துக் காரணம் கேட்கிறார்.

“காரணம், ஒன்றா இரண்டா? முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? ‘ என்று கூறும் அப்பெண்மணி, அருளாளர்கள் 81 பேரின் அருஞ்செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி, “”இவர்களைப் போல நான் எதையும் செய்யவில்லையே… எனக்கு இந்த ஊரில் வசிக்க என்ன தகுதி இருக்கிறது?” என்கிறாள். அவள் கூறிய காரணங்கள் ஒருசிலவற்றைப் படிக்கும்போதே நமக்கும் ஒருவித ஏக்கம் பிறக்கிறது.

“ஆண்டாளைப் போல சிறு வயதிலேயே ஞானம் பெற்று எம்பெருமானை நான் அடையவில்லையே’; “வசுதேவர் கண்ணனிடம் ஆழியை மறைத்துக்கொள்ளச் சொன்னவுடன் எம்பெருமானும் மறைத்துக் கொண்டாரே… அந்த பாக்கியத்தை நான் செய்யவில்லையே’; “ஆழ்வார்கள் தங்களை யசோதையாகப் பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்களே. அந்த அளவிற்குப் பெருமை வாய்ந்த யசோதையாக நான் இல்லையே’;

“ஸ்ரீராமன் பாதம் பட்ட அகலிகையாக நான் இல்லையே…’; “தொண்டைமானைப் போல நான் பக்தியில் சிறந்தவளாக இல்லையே…’; “கூனியைப் போல கண்ணனுக்கு சந்தனம் பூசக் கொடுத்தேனா, இல்லையே…’; “கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப் போல் (முனிபத்தினி) நானும் உயிரை விடவில்லையே’; “விதுரரைப் போல அகம் ஒழிந்து விடவில்லையே… (இறைவன் மனதில் குடியேறினால் அகம் (அகங்காரம்) ஒழிந்துவிடும்) அதனால் இவ்வூரை விட்டுச் செல்கிறேன்” என்கிறாள். வைணவர்கள் மட்டுமல்லர், எம்பெருமானை பக்தி செய்வோர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ரகசியம் இந் நூல்.